தம்பி வீரமணி பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோதே மேடையேறிப் பேசத் தொடங்கியவர்; ஆயிரக்கணக்கானவர் கூடிய மாநாடுகளில் மேசைமீது நிற்க வைத்துப் பேச வைக்கப்பட்டவர்.
அவரது பேச்சாற்றல் கண்டு அவரைத் திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் எனப் புகழ்ந்தார் பேரறிஞர் அண்ணா. தந்தை பெரியார் அவர்களோ, அவரது திறமை கண்டு மகிழ்ந்து, பாராட்டி, அவரது உயர்கல்விக்கு உதவி செய்து ஊக்கமளித்துள்ளார். இப்படித் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பாராட்டுகளையும், அரவணைப்பையும் மிகச் சிறு வயதிலேயே பெற்று வளர்ந்த திரு.வீரமணி அவர்கள், இன்று தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருத்துகளை, அவரது சமுதாயச் சீர்திருத்தக் கோட்பாடுகளை, மகளிர் முன்னேற்றம் நாடும் கல்விச் சிந்தனைகளை, மூடப் பழக்கங்களைச் சாடி, எங்கும் எதிலும் அறிவியல் கண்கொண்டு சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும் எனத் தூண்டும் அறிவியக்க உணர்வுகளை, சாதி, மத வேறுபாடுகள் அகற்றப்பட வேண்டும் எனும் சமதர்ம _ சமத்துவச் சிந்தனைகளைப் பரப்புவதில் பெரியார் அவர்களின் மிகச் சிறந்த வழித் தோன்றலாக நேரடி வாரிசாக விளங்குகிறார்;
திராவிடர் கழகத்தை வலிவோடும், பொலிவோடும் வழிநடத்திச் செல்லுவதில் வல்லவராக, தந்தை பெரியார் அவர்களுக்கு என்றும் பெருமை சேர்க்கும் தளகர்த்தராகத் திகழ்கிறார்.
– முத்தமிழ் அறிஞர் கலைஞர், மு.கருணாநிதி