சமூக நீதியில் இந்தியாவிற்கே தலைமை தமிழ்நாடுதான்!

டிசம்பர் 01-15


02.03.1982இல் திருத்தணி அருகில் உள்ள மாத்தூரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது, பார்ப்பான் சூழ்ச்சியால் பிரிந்துகிடக்கின்ற நாம் ஒன்று சேர்ந்து பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என்றும், பார்ப்பான் எனும்போது பாரதிப் பார்ப்பான்கூட சாதிவெறிக் கொண்ட பார்ப்பானே! ஒரு சில நுனிப்புல் மேய்ந்தவர்கள் மட்டும் பாரதியைப் போற்ற முடியும்.

பாரதியின் பார்ப்பன புத்தியை ஆதியோடு அந்தமாக அறிந்த நம்மால் போற்ற முடியாது. தற்கால சிக்கல்களுக்கு பெரியாரின் கொள்கைகளே மாமருந்து என்று கூறி விடைபெற்றேன். பொதுக்கூட்டத்தில் வெள்ளம்போல் மக்களும், கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கலைஞர் அவர்களின் மகன் தமிழரசு _ ஏ.ஏ.ராஜமாணிக்கம் அவர்களின் மகள் மோகனாம்பாள் ஆகியோர் வாழ்க்கை ஒப்பந்த விழா 05.03.1982 அன்று ஆபட்ஸ்பரி மாளிகையில் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.

மாநாடுபோல் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்ட விழாவில், நானும் கலந்து கொண்டேன். விழாவில் கருநாடக முன்னாள் முதல்வரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பெரும் காவலருமான தேவராஜ் அர்ஸ் கலந்துகொண்டு, தந்தை பெரியார் உருவாக்கித் தந்த சுயமரியாதைத் திருமணத்தைப் பாராட்டி வரவேற்று உரையாற்றினார்.
சில மாதங்களுக்கு முன் என்னுடன் ஒரு சுயமரியாதைத் திருமண விழாவில் கலந்துகொண்டதை நினைவுகூர்ந்து அப்போது குறிப்பிட்டபோது, “நான் பதவியில் இருந்தபோது இந்தத் திருமணமுறை பற்றி நான் அறியாமல் போய்விட்டேன். அப்போதே அறிந்திருந்தால் இந்தத் திருமண முறைக்கு சட்ட வடிவம் தந்து எங்கள் மாநிலம் முழுவதும் பரப்பிவிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பேன்’’ என்று குறிப்பிட்டார். விழாவில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் ஜி.லெட்சுமணன், புதுவை மாநில முதல்வர் டி.ராமச்சந்திரன் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டார்கள்.

“O.C. என்பதை Open Competition திறந்த போட்டி, எல்லோருக்கும் பொதுவான இடங்கள் என்பதைத் திரித்து  Other Communities   என்று சில நாட்களுக்கு முன் விளம்பரம் போடப்பட்டதை நாம் கண்டித்ததினால் தமிழ்நாடு அரசு ஒரு சுற்றறிக்கையையே இதுகுறித்து அனுப்பியுள்ளது. O.C. என்றால் Other Communities அல்ல என்று, இனி அறிவிக்கும் அறிவிப்புகளில் ளி.சி. என்பது பற்றி சொல்லும்போது இதர வகுப்பினர் என்று கூறாமல் ‘எல்லா வகுப்பினரும் போட்டியிடும் வாய்ப்புள்ள பொது இடங்கள்’ என்று கூறவேண்டும்’’ வானொலி நிலையத்தார் தங்களது தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று 06.03.1982இல் விடுதலையில் அறிக்கைமூலம் கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்றுக்கொண்ட வானொலி நிலையத்தின் இயக்குநரிடமிருந்து எனக்கு 08.03.1982 அன்று பதில் கடிதம் வந்தது. கடிதம் எண்: MAD II(1) 82-P3 ஆகும். அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டவாறு: வேலைவாய்ப்புச் செய்திகள்  பற்றிய அறிவிப்புகளில் ஓ.சி என்பதற்குத் தாங்கள் தந்துள்ள விளக்கத்திற்கு நன்றி. இனிவரும் அறிவிப்புகளில் ‘திருத்தம்’ செய்கிறோம். நன்றி! வணக்கம்’’ என்று எழுதப்பட்டிருந்தது.

அன்னை மணியம்மையாரை மிகவும் இழிவான வார்த்தைகளால் பேசிய ஒரு காவல்துறை அதிகாரியின் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் திரு.சோமசுந்தரம் அவர்களது பரிந்துரைக்குப் பின்னரும்கூட இத்தனை ஆண்டுகள் ஆகியும் தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையே; இது நியாயந்தானா? என்று சட்டமன்றம் கூடியிருக்கும் இவ்வேளையில், அரசு மற்றும் அனைத்துக் கட்சி மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று பரிகாரம் தேட, சட்டமன்றத்தின் முன் அறப்போர் 16.03.1982 அன்று நடைபெறும் என்று விடுதலையில் (10.03.1982) அறிவித்தேன்.

அன்னையார் நினைவு நாளான இன்று _ அய்யா, அம்மா நினைவு இடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை (16.03.1982) செலுத்திவிட்டு, அன்னையாரை இழிவுபடுத்திய காவல்துறை அதிகாரி மீது, அவசரநிலைகால சிறைக் கொடுமைக்கு காரணமாக இருந்த சிறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை கோரி கோட்டை முன் மறியல் செய்ய கழகத்தின் பெரும்படை அமைதி ஊர்வலமாக புறப்படத் தயாராயிற்று. மறியலுக்குப் புறப்படுவதற்கு முன் திமுக அமைப்புச் செயலாளர் திரு.நீல நாராயணனும், சென்னை மாவட்ட தி.மு. கழக செயலாளர் ஆர்.டி.சீதாபதி எம்.எல்.சி.யும் பெரியார் திடலில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ஊர்வலம் சென்ற வழியில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் சந்தித்து ஆடை போர்த்தி வழியனுப்பினார். அண்ணா நினைவிடம் அருகே ஊர்வலத்தில், நான் வேன் மீது ஏறி நின்றுகொண்டு பேசினேன். அப்போது, அணி அணியாகச் சென்ற கழகத் தோழர்களுடன் நானும் கைது ஆனேன்.

“குமரி மாவட்டக் கலவரங்களும் ஆர்.எஸ்.எஸ். பங்கும்!’’ என்ற தலைப்பில் 18.03.1982 அன்று அறிக்கையை வெளியிட்டு இருந்தேன். குமரி மாவட்டத்தில், அப்போது சில நாள்களாக மதக் கலவரங்கள் நடைபெறுவதும், அதன் தொடர்பாக மக்களது உயிர் உடமைக்குச் சேதம் ஏற்படுவதுமாக சட்டம் ஒழுங்கு குலையக்கூடிய சூழ்நிலை உருவாகியிருந்தது. இது வேதனைப்பட வேண்டிய நிலை மட்டுமல்ல; வெட்கப்பட வேண்டிய ஒன்றுமாகும் என்றும், இந்தச் சுயமரியாதை மண்ணில் வடநாட்டில் தோன்றியதுபோல் ஜாதி, மதக் கலவரங்கள் இதற்கு முன் இல்லாத நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ் தூண்டுதலால் இந்த அவலங்கள் ஏற்படுகின்றன என்பதை யெல்லாம் எடுத்து விளக்கியிருந்தேன்.

13.3.1982 அன்று ராமேசுவரத்தில் திராவிடர் கழக, “இளைஞர் இன எழுச்சி மாநாடு’’ சுயமரியாதைச் சுடரொளி முகவை கே.கே.எம்.கணேசன் அரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவில், அகில இந்திய முஸ்லீம் லீக் (தமிழ்நாடு) தலைவர் அப்துல் லத்தீப் எம்.ஏ., பி.எல்., அவர்களும் கலந்துகொண்டார்கள்.

பார்ப்பனர்களின் சுரண்டல் கோட்டையாக விளங்கும் ராமேசுவரத்தில் இனமானக் குரலின் இடி முழக்கங்கள் எழும்பிவிட்டன! ஆதிக்கக் கோட்டையின் அடித்தளத்தை _ இந்த இடி முழக்கங்கள் ஆட்டம் காண வைத்துவிட்டன. சமூகநீதியின் குரலே _ கேட்கவிடாமல் செய்துவிடும் சதி முயற்சிகளை _ முறியடித்துக் காட்டியது ராமேசுவர மாநாடு.
இம்மாநாடு நமது இயக்க வளர்ச்சியில் ஒரு அரிய திருப்பம் என்று சொன்னால் மிகையாகாது. மாநாட்டில் நான் ஆற்றிய சிறப்புரையில், பார்ப்பனர்களுக்கு அம்பாகப் போன விபீஷணத் தமிழர்களும் சிந்திக்கத்தக்க வகையில் உரையாற்றினேன். இந்தியன் முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் லத்தீப் அவர்கள் உரையாற்றும் போது, “வீரமணியின் கண்ணிலே ஒரு தூசி விழுந்தால் அதைக் கண்டு எங்கள் இரத்தம் கொதிக்கும்; காரணம் நாங்கள் தமிழர்கள்; ஒரே இனத்துக்குக் சொந்தக்காரர்கள்’’ என்று லத்தீப் குறிப்பிட்ட போது அரங்கமே இன உணர்வால் ததும்பி வழிந்தது.

மாநாட்டுக்குத் திரையரங் கத்தினை அளித்த அதன் உரிமையாளரை ஒருமுறை அல்ல; பலமுறை போய் இந்தக் காலிக் கூட்டம் மிரட்டியுள்ளது. “நீங்கள் மாநாடு நடத்த அனுமதித்தால் உள்ளே கொட்டகையைத் தீ வைத்துக் கொளுத்துவோம், ஜாக்கிரதை’’ என மிரட்டியுள்ளது இந்தப் பார்ப்பனக் கூட்டம். அத்தனை மிரட்டலுக்கிடையே ராமேசுவரம் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.

மாநாட்டிற்கு உழைத்த கழகச் செயல்வீரர்கள் எம்.சிகாமணி, எச்.மனோகரன், எஸ்.கருப்பையா, எஸ்.முத்து, ஆர்.டி.துரையரசன், பாலகிருட்டிணன், எ.பாபு, சி.திருவாசகம், ஜி.செல்வராஜ், ஆர்.சேகர், ஏ.சலீம், கணேசன், பா.ரமேசு உள்ளிட்ட ஏராளமான கழக முன்னணித் தோழர்கள் இராமேசுவரம் நகர திமுக செயலாளர் திரு.ஜான், ஒன்றியச் செயலாளர் மாரிமுத்து ஆகியோரின் அன்பும் ஆதரவும் மிகவும் போற்றத்தக்கது. இராமேசுவரம் இதற்கு முன் நமக்கு ஒரு தீவு. ஆம், கொள்கை பாலம் இல்லாத தீவு. இம்மாநாடு அக்கொள்கைப் பாலம் அங்கும் அமைத்த பெருமையைப் பெற்றது.

20.03.1982 அன்று கருநாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் உரிமைக் காவலருமான திரு.தேவராஜ் அர்ஸ் அவர்கள் சென்னை பெரியார் திடலில் என்னைச் சந்தித்தார். பின்பு சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற நான்கு பெரும் மாநாடுகளில் “மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுலாக்கக் கோரும் மாபெரும் மாநாட்டில்’’ நம் அழைப்பை ஏற்று வந்து கலந்துகொண்டு உரையாற்றினார். ஜாதி அமைப்பு என்பது நாட்டில் இருக்கிறது என்பதை மறந்துவிட்டுப் பேசக் கூடாது; ஜாதி அமைப்பு நீடிக்கும் வரை _ அந்த அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட்டே தீரவேண்டும் என்று கூறினார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில்,

தற்போது பயணத்தின் நோக்கம் என்ன? என்று கேட்டதற்கு, “திராவிடர் கழகம் நடத்தும் மண்டல் கமிஷன் மாநாட்டில் கலந்து கொள்வதற்கே வந்திருக்கிறேன்’’ என்று பதிலளித்தார். “பெரியாரைப் போல் சமூகநீதிக்காக அகில இந்திய மட்டத்தில் நீங்கள் பாடுபடுவீர்களா?’’ என்று ஒரு செய்தியாளர் கேட்டதற்கு, “பெரியாரோடு என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்; அவர் மிகப்பெரிய தலைவர்; அந்த மிகப் பெரிய தலைவரோடு என்னை ஒப்பிட முடியாது. என்னைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினையில் சமூகநீதி பெறுவதற்கு நான் என்னை அர்ப்பணித்துக் கொள்வேன். நான் உயிரோடு இருக்கும்வரை இந்தப் பணிக்காகவே உழைப்பேன்’’ என்றார் அர்ஸ்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளைக் கோரி மாநாட்டில் நான் எழுதிய ஆங்கில நூலான “The History of the Struggle for social and Communal Justice in TamilNadu” நூலை திரு.தேவராஜ் அர்ஸ் அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே வெளியிட்டார். முதல் பிரதியை ‘தலித் வாய்ஸ்’ ஆசிரியர் வி.டி.ராஜசேகர் (ஷெட்டி) பெற்றுக் கொண்டார்கள். திரு.ராஜசேகர் (ஷெட்டி) அவர்கள் பேசும்பொழுது, ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு மாநாடு என்பது _ இந்தியாவிலேயே இந்தத் தமிழகத்தில் தான் முதன்முதலாக நடைபெறுகிறது. இதிலும் தமிழகம் தனித்தன்மை பெற்றுவிட்டது. இப்படிப்பட்ட ஒரு மாநாட்டை நடத்திய சிறப்பு இந்தியாவில் திராவிடர் கழகத்திற்குத்தான் உண்டு என்று குறிப்பிட்டுப் பாராட்டினார்.

சென்னை சைதைப் பகுதியில் 1950ஆம் ஆண்டு சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய மாநாட்டுக்குப் பிறகு அப்பகுதியில் நடைபெற்ற இரண்டாவது மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநாட்டின் வெற்றிக்கு மிகவும் கடுமையாக உழைத்த தென்சென்னை மாவட்டத் தலைவர் திரு.எஸ்.பி.தட்சிணாமூர்த்தி அவர்களும், மாவட்டச் செயலாளர் எம்.பி.பாலு அவர்களும் மற்றும் கிழக்கு, மேற்கு, வடக்கு உள்ளிட்ட அனைத்துத் தோழர்களின் உழைப்பும் வெகுவாகப் பாராட்டத் தக்கன வென்போம்.

29.03.1982 அன்று விடுதலையில், “பிற்படுத்தப்பட்டோரும் தமிழக அரசும்’’ என்ற தலைப்பில் முக்கிய தலையங்கம் எழுதினேன். பிற்படுத்தப்பட்டோருக்குத் தற்போது ஒதுக்கப்படும் 50 சதவீதம் இடங்களை (கல்வி_ உத்தியோகத் துறைகளுக்கு) இரண்டாகப் பிரித்து, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (Backward and Most Backward)   என்று தனித்தனிப் பிரிவுகளின் கீழ் ஒவ்வொன்றுக்கும் 25 சதவீத இடஒதுக்கீடுகளை செய்வது என்பது தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நாவலர் அவர்கள் மேலவையில் குறிப்பிட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோரை, பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரித்து அவர்களுக்கு இடஒதுக்கீடு செய்வது, சமூகநீதியை பரவலாக்கப் பெரிதும் பயன்படும் என்பது உண்மையே என நான் வரவேற்று பல புள்ளி விவரங்களை அதில் தெளிவாக எடுத்து விளக்கியிருந்தேன்.

03, 04-.4.1982 ஆகிய இரு நாள்களில் மாயவரத்தில் நடந்த மாபெரும் மாநாடுகள் இயக்க வரலாற்றில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற சிறப்பான மாநாடுகள் ஆகும்.
மேலத்தஞ்சை மாவட்டப் பகுத்தறிவாளர்க் கழக அமைப்பாளர் தஞ்சை இரெ.இரத்தனகிரி வரவேற்புரை வழங்கினார். மாநாட்டிற்கு திருச்சி மாவட்டப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் பேராசிரியர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். அவரை முன்மொழிந்து தஞ்சை இரத்தனகிரியும், வழிமொழிந்து கவிஞர் கலி.பூங்குன்றனும் உரையாற்றினர்.

நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் ஒரு அய்யாயிரம் ஆண்டு காலத்து இழிவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு அறுபதாண்டு காலப் பணியிலே அதைச் செய்தார்கள் என்பதை பேரறிஞர் அண்ணா அவர்கள் அழகாக, ‘Putting Centuries into a Capsuled’ என்று சொன்னார்கள்.

தந்தை பெரியார் அவர்களின் தொண்டு ஒரு சின்ன குடுவைக்குள்ளே பல நூற்றாண்டுகளை அடக்கியதைப் போல என்று சொன்னார்களே அது மாதிரி அவர்கள் பணியைச் செய்தார்கள்.

அந்தப் பணியைத் தொடர்கிற நாம் மிகத் தீவிரமாகத் தொடர்ந்தாக வேண்டும். எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும், அந்தச் சங்கடங்களை நாம் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தைப் பெற்றாக வேண்டும் என்று எடுத்துக் கூறினேன்.

கருநாடக ‘தலித் வாய்ஸ்’ பத்திரிகை ஆசிரியரான வி.டி.ராஜசேகர் (ஷெட்டி), இரண்டாம் நாள் மாநாட்டில் கலந்துகொண்டு  பேசியது, “மிகப் பெரிய சமுதாயப் புரட்சிக்காரர் பெரியார் பிறந்தது இந்தத் தமிழ்நாட்டில்தான். இந்தியாவிலே, பார்ப்பனரல்லாதார் ஆட்சி நடக்கும் ஒரே மாநிலமும் இந்தத் தமிழ்நாடுதான்.

பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அழுத்தமான குரலை எழுப்புவதும் இந்தத் தமிழ்நாடு தான். இப்படி எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இன்றைக்கு இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் வழி காட்டுகிறது என்பது மட்டுமல்ல; இந்தியாவுக்கே தலைமை வகிப்பதும் தமிழ்நாடுதான். இன்று தமிழகம் தான் சோதனைச்சாலை; வீரமணிதான் விஞ்ஞானி’’ என்று குறிப்பிட்டார்.

புதிய வரலாறு படைத்த மாயவரம் கழக மாநாட்டில், அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திலே _ நான்கு வயது முதல் வளர்ந்து கல்வி பெற்று, அன்னை மணியம்மையார், தந்தை பெரியார் அவர்களால் வளர்க்கப்பட்ட இரண்டு பெண்களின் திருமணம் உட்பட அய்ந்து திருமணங்கள் நடத்தப்பட்டன. முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்க, திருமணங்களை நடத்தி வைத்தார்.

மாநாட்டில், பேரா சிரியர் தி.இராமதாஸ் எம்.ஏ., பி.எல்., தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர் வை.ஞானசேகரன் எம்.ஏ., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் பேராசிரியர் காதர் மொகைதீன் எம்.ஏ., வழக்கறிஞர் ஏ.அமானுல்லா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தலைஞாயிறு எஸ்.வடிவேலு, திராவிடர் கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி, அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, புலவர் ந.இராமநாதன், மாநாட்டுப் பொருளாளர் கோமல் எம்.நடராசன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழியர்கள், தோழர்கள், கழக நிர்வாகிகள் பலரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

06.04.1982 அன்று கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரியின் வணிகவியல் மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

Commerce, Economics  என்று அதற்கு விளக்கங்கள் படிப்பதுடன் நின்று விடாதீர்கள். புதிய சிந்தனை வழியில் நின்று மூட நம்பிக்கையின்Superstition of society in the field of Commerce, Industry   என்று ஆராய்ந்து கண்டுபிடியுங்கள்.

பெரியார் சொன்னார், வணிகவியலிலே நாணயம் தேவை என்பதை “Honesty is the best policy” என்று ஆங்கிலேயன் சொன்னான்.

அய்யா அவர்கள், நாணயம் தேவை என்பது குறைந்தபட்சம் ஒரு திட்டமாவது நம்மிடம் வேண்டும். நம்மிடையே சில அடிப்படைகள், கொள்கைகள் உள்ளன.

எனவே, நீங்கள் இளைஞர்கள், நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும் என்று விளக்கி உரையாற்றினேன்.

08.04.1982 அன்று விருத்தாசலத்தில் நடை பெற்ற ஆர்.எஸ்.எஸ். கண்டன நாள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நான் உரையாற்றினேன். அப்போது நாட்டில் பிற்படுத்தப்பட்ட _ தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நிலைமையைப் பற்றியும், பார்ப்பனர்கள் அண்மைக்காலமாக ஆடி வருகிற வெறியாட்டத்தினைப் பற்றியும் நண்பர்கள் இங்கே குறிப்பிட்டார்கள்.

தலைவர் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற ஒரே நோக்கில் செயல்பட்டு வருகிறது.

மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும் என்ற கொள்கைக்காக இருக்கிறது திராவிடர் கழகம். ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்காக மட்டும் பாடுபடுகிற இயக்கமல்ல இது!

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கக் கூடாது; இந்து மதத்தை இந்தியாவின் அதிகாரப்பூர்வமான மதமாக்க வேண்டும். இந்து ராஷ்டிரத்தை இங்கே நிறுவ வேண்டும் என்பதுதான் அவர்களுடைய முதல் லட்சியம் என்று கூறினேன். இந்தப் பொதுக்கூட்டத்தில் மக்கள் அதிக அளவில் திரண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *