ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து உழைத்து உயர்ந்தவர்கள் உண்டு.
வறுமைச் சூழலில் பிறந்து வாழ்ந்தாலும் பெருமைக்குரியவர்களாய் முயன்று முன்னேறியவர்கள் உண்டு.
பத்து வயதிலும், பள்ளிப் பருவத்திலும் பெரியவர்களுக்குரிய திறத்தோடு திகழ்ந்தவர்கள் உண்டு.
படிப்பில் முதல் தகுதி, தங்கமெடல் என்று பெற்று பாராட்டுப் பெற்றவர்கள் உண்டு.
சிறுவயதிலே தனது சிறப்பான பேச்சால் ஆயிரக்கணக்கானவர்களை கவர்ந்து கைத்தட்டல் பெறுபவர்கள் உண்டு.
ஆயிரக்கணக்கான நூல்களைப் படித்தவர்கள்; ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியவர்கள்; நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியவர்கள் உலகில் சிலர் உண்டு.
எதிரிகள் வாயடைக்க வலிமையான வாதங்களை வைத்து வாதிடும் வல்லவர்கள் உண்டு.
தத்துவங்களை ஆய்வு செய்தும், நூல்களை ஆய்வு செய்தும், மறுப்பு, திறனாய்வு போன்றவற்றைத் திறமையாக, நுட்பமாக செய்தும் புகழ்பெற்றவர்கள் உண்டு.
பல நிறுவனங்களை உருவாக்கி, திறம்பட செயல்படுத்தி சாதிப்பவர்கள் உண்டு.
பேச்சு, எழுத்து, நிர்வாகம், தலைமை, தொண்டு, பத்திரிகை நடத்துதல், பத்திரிகை ஆசிரியராய் பளிச்சிடல், போராட்டங்கள் நடத்துதல், சிறைக் கொடுமைகளை ஏற்றல், எதிரிகளின் வன்முறைத் தாக்குதல்களுக்கு ஆளாதல் என்று இத்தனையும் எதிர்கொண்டு செயல்படுகிறவர்கள் இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், மேற்கண்ட எல்லாம் உடைய ஒருவர் உலகில் உண்டு என்றால், அவர்தான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!
m!
இவரைப்பற்றி அறிய அறிய, வியப்புக்கு மேல் வியப்பால் உங்கள் விழிகள் விரியும்! இந்த ஒப்பில்லா உலக சாதனைக்குரிய, ஓய்வறியா தொண்டறச் செம்மல் வீரமணி அவர்கள் சிறப்புகள் தெரியும்!
இளைஞர்களுக்கும், பிஞ்சுகளுக்கும், பொது வாழ்விற்கு வரும் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் இவர் வாழ்வு ஒரு வழித்தடம்! ஓர் உந்து சக்தி! உன்னதபாடம்!
இவர் தமிழ் இனத்தின் வழிகாட்டி, பாதுகாவலர், போராளி மட்டுமல்ல; அய்யாவே (பெரியாரே) அதிசயித்த தமிழ் இனத்தின் தனித்த அதிசய அடையாளமும் ஆவார்!
– மஞ்சை வசந்தன்