மோடி ஆட்சியிலே தன் திட்டங்களை நிறைவேற்ற ஆர்.எஸ். எஸ். துடிக்கிறது !
கே: இந்துக்களின் நாடு இந்துஸ்தான்’’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?
– தா.கன்னியப்பன், தாம்பரம்
ப: ஆர்.எஸ்.எஸ். தனது திட்டத்தை, மோடி ஆட்சி இருக்கும்போதே நிறைவேற்றிடத் துடியாய்த் துடிக்கிறது! இது ஹிந்துஸ்தான் அல்ல _ அரசியல் சட்டப்படி ‘இந்தியா’ _ ‘இந்தியர்களில்’ பன்மதத்தவர் இஸ்லாம், கிறித்துவ, பார்சி, பவுத்தர், சீக்கியர் என்று பலரும் உள்ளனரே! எனவே, ஹிந்துராஷ்டிரம்; ஹிந்து நாடாக இது ஆவது அரசியல் சட்ட அடிப்படையைத் தகர்ப்பதாகும்.
கே: காந்தியார் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டு 70 ஆண்டுகள் ஆனநிலையில் இப்போது காந்தியாரைக் கொன்றது கோட்சேவின் குண்டு அல்ல என்பது மோசடியல்லவா?
– கா. முருகேசன், சோத்துப்பாக்கம்
ப: ஆர்.எஸ்.எஸ். வரலாற்றைத் தலைகீழாக மாற்றிட, நீதிமன்றங்கள் _ அதுவும் உச்சநீதிமன்றத் துணை -_ மோடி இந்த ‘பம்மாத்து’ வேலை செய்வது அவர்களை அடையாளம்
காட்டும். கண்டனத்திற்குரியது.
கே: ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மக்கள் இறக்கும் அவல நிலையில், நாட்டை வல்லரசு நாடாக்க முயல்வதாக பிரதமர் மோடி கூறுவது எப்படியுள்ளது?
– ம.சேகர், பழையனூர்
ப: ‘உ.பி.யில் தொடர்ந்து குழந்தைகள் பிராணவாயு கிடைக்காமல் -_ மருத்துவமனையில் சிலிண்டர்கள் கிடைக்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் _ பச்சிளம் குருத்துகள் இறந்துள்ள நிலையில் ‘வல்லரசு முக்கியமா?’ ‘நல்லரசு முக்கியமா?
’கே: 2015இல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பல உயிர்களையும் உடைமைகளையும் இழந்த பிறகும் தற்போதும், அதேநிலை இருப்பது தமிழக அரசின் அலட்சியத்தாலா? இயலாமையாலா?
– கா. வேல்முருகன், வேலூர்
ப: முதலில் அலட்சியம் _ சரிவரச் செய்வதில் கவனம் போதிய அளவில் இல்லை. மக்கள் புயல் சின்னம் வருகிறது என்று கவலைப்படும் நிலையில், தேர்தல் ஆணையத்தில் தம் சின்னம் கிடைக்கிறதா என்ற கவலையால் கவனக்குறைவு. இயலாமையைவிட முயலாமையே முன்னிலை!
கே: உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், திடீரென ஞானோதயம் பெற்றவர்போல், “தாஜ்மகால் இந்தியாவின் மணிமகுடம், அது இந்தியாவின் பெருமை’’ என புகழ்மாலை சூட்டியதுடன், தாஜ்மகால் வளாகத்தில் தூய்மைப் பணியை செய்துள்ளது ஏன்?
– மன்னை. சித்து, மன்னார்குடி-1
ப: ஆழம் பார்த்து, பிறகு எதிர்ப்பு வெடித்ததும், தலையை உள்ளே இழுத்துக்கொள்ளும் ‘நல்ல’ பாம்புகள்.
கே: தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினால் ஏற்பட்டுவரும் சீரழிவைத் தடுக்க இனியேனும் இடதுசாரிக் கட்சிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டியது கட்டாயமல்லவா?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: அவர்கள் தலைமை சரிவர புரிந்து செயல்பட்டால் நல்லது.
கே: ஜாதிக்கொரு நீதி சொல்லும் ஆரியம்’, குஜராத்தில் ஜாதிக்கலவரத்தை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதிலும், பணத்தை வாரி இறைத்து எதிர்க்கட்சிகளை வளைக்க பா-ஜக லட்சக்கணக்கில் கொடுத்ததை நரேந்திர படேல் அம்பலப்படுத்தியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?
– இல. சங்கத்தமிழன், செங்கை
ப: குஜராத்தில் அவர்களுக்கு இது வாழ்வா? சாவா? பிரச்சினையாகும். எனவே, எந்த எல்லைக்கும் செல்வார்கள் _ செல்கிறார்கள்.
கே: தந்தை பெரியார் தம் வாழ்நாளில் எப்போதாவது மன்னிப்புக் கடிதம் (அரசாங்கத்திற்கு) எழுதியுள்ளதாக பதிவுகள் இருக்கின்றனவா?
– அய்ன்ஸ்டின் விஜய், உடையார்பாளையம்
ப: கிடையாது; சில வரலாற்றுத் திரிபு விஷமவாதிகள் இப்படி ஒரு புதுக் கயிறு திரிக்கின்றனர். இது வேறு ஒரு பகுதியில் தனியே கண்டு தெளிவு கொள்க!
கே: அரிய கலைப் பொக்கிஷமான தாஜ்மகாலை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பாஜக தலைவர்களே ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பது பற்றி தங்கள் கருத்து என்ன?
– கெ.நா.சாமி, சென்னை
ப: அவர்களது எல்லை மீறிய மத வெறித்தனம் _ அதன் விளைவு இது! மக்கள் கவனித்துக்கொண்டுள்ளனர் _ தேர்தலில் புரிய வைப்பர்.