ரேகாவின் வெற்றியை, ‘பல்வோட்டி’ பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும், மாணவர்களும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். அப்படி என்ன சாதனை செய்துவிட்டார் ரேகா? பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 837/1200 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இது யாரும் செய்யாத சாதனையா? ஆம். இச்சாதனை, மதிப்பெண் அளவு சார்ந்தது மட்டுமல்ல, அதைப் பெற்ற அப்பெண்ணின் நிலையையே பெரிதும் சார்ந்தது. காரணம், ரேகா மாணவி அல்ல… அப்பள்ளியின் துப்புரவுப் பணியாளர்!
மதுரை, நாகமலை, புதுக்கோட்டை அருகில் செயல்படும் சேவை அமைப்பான ‘பில்லர்’ மய்யத்தினரால் நடத்தப்படும் பல்வோட்டி பள்ளியின் துப்புரவுப் பணியாளர் ரேகா. அதே பள்ளியில்தான் அவருடைய மகனும், மகளும் படிக்கிறார்கள். இளம் வயதிலேயே கணவரை இழந்த ரேகா, ஆலம்பட்டி என்ற கிராமத்திலிருந்து தினமும் இங்கு வேலைக்கு வருகிறார். கிடைக்கும் நேர இடைவெளிகளில் மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடங்களைக் கவனித்து உள்வாங்கி இந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளார் என்பது சிறப்பு.
வாடிப்பட்டிக்கு அருகில் இருக்கும் குட்டாலம்பட்டிதான் இவர் பிறந்த ஊர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் படிப்பில் ஆர்வமுடனும், மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையுடனும் இருந்த இவரை “எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்தது போதும்’’ என்றும் சொல்லி 16 வயதிலேயே அத்தை மகனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டனர். ஒரு மகள், ஒரு மகன் என இரு பிள்ளைகள் பிறந்த சில ஆண்டுகளிலேயே இவரது கணவர் மாரடைப்பால் இறந்து விட இந்தப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். தனது இரண்டு குழந்தைகளையும் இதே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்ததோடு தானும் படிக்க முயற்சி எடுத்து பன்னிரெண்டாம் வகுப்பில் 837/1200 மதிப்பெண் எடுத்து சாதித்திருக்கிறார்.
ரேகாவின் இந்தச் சாதனைக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மரிய அமலி, ஃபாதர் இம்மானுவேல் இருவரும் உற்ற துணையாய் இருந்து இவரின் படிப்புக்கு நிறையவே உதவி இருக்கிறார்கள். ரேகாவின் இந்த அரிய சாதனைக்கு ஊக்கமளித்த இந்த இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
எந்தச் சூழலிலும் ஆர்வம் இருந்தால் கல்வி கற்கலாம் என்பதற்கு ரேகா ஒரு சிறந்த உதாரணம். இதோடு மட்டுமல்லாமல் அதே பள்ளியிலேயே கம்ப்யூட்டர் கோர்சும் முடித்துள்ள இவர் தற்போது தொலைதூரக் கல்வியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார் என்பது மேலும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. சோதனைகளை யெல்லாம் சாதனைகளாக மாற்றிய ரேகாவை நாமும் வாழ்த்துவோம்!
– தமிழோவியன்