காலத்தால் அழியாத கல்வெட்டு
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், கேரள அரசு வரலாற்றுச் சாதனை, தமிழக அரசு தாமதிக்கலாமா? எனும் கட்டுரை ‘உண்மை’ மாத இதழில் (நவம்பர் 1-_15, 2017) வாசித்தேன்.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக (09.10.2017) தலித் சமுதாயத்தைச் சேர்ந்த யது கிருஷ்ணா என்ற இளைஞன் கேரளாவில் உள்ள மணப்புரம் சிவன்கோயிலில் அர்ச்சகராகப் பொறுப்பேற்று கோயில் கருவறையில் பூஜை செய்தார் என்கின்ற இனிய செய்தி ‘பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய’ வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஓர் முக்கிய நிகழ்வாகும்.
வைக்கம் வீரர் தந்தை பெரியார் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சமூகநீதியை வென்றெடுத்து சரித்திரச் சாதனை படைத்தார். சமூகநீதிக்கு வித்திட்ட தமிழ்நாட்டில் ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்று 02.12.1970இல் சட்டம் இயற்றப்பட்டும் அதனை இதுநாள் வரை நடைமுறைப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்காதது வெட்கம் _ வேதனை!
ஆனால், கேரள கம்யூனிஸ்ட் இடதுசாரி அரசு இவ்விடயத்தில் முனைப்புடன் செயல்பட்டு பார்ப்பனர் அல்லாத 36 அர்ச்சகர்களை நியமித்துள்ளது பாராட்டத் தக்கது. அதில் 6 பேர் தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற செய்தி ‘காலத்தால் அழியாத கல்வெட்டாக’ உலகம் உள்ளவரை நீடித்து நிலைத்து நிற்கும் என்பது உறுதி. ஆகவே, இனியேனும் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு அர்ச்சகர் பயிற்சி பெற்றுள்ள தலித் உள்ளிட்ட 206 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி, தமிழ்நாடு தந்தை பெரியார் பிறந்த மண், அறிஞர் அண்ணா ஆண்ட மண், சமூகநீதியின் பிறப்பிடம் என்பதை உலகிற்குப் பறைசாற்றிட வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகும்.
– இல.சீதாபதி, வெள்ளிமேடுபேட்டை, திண்டிவனம்