ஆர்.எஸ்.எஸ்.ஆல் இயக்கப்படும் பி.ஜே.பி அரைகுறை ஆயுட்காலத்துடன் ஆட்சியில் இருந்தபோதே அவர்களது பாஸிச, மதவெறி செயல் திட்டங்களை ஒவ்வொன்றாகச் செயல்படுத்த முனைந்தவர்கள். அப்படிப்பட்டவர்களிடம், 2014ஆம் ஆண்டு தேவைக்கு அதிகமான பெரும்பான்மையோடு ஆட்சி, அதிகாரம் கிடைத்ததும், நாள் தவறாது அத்திட்டங்களைச் செயல்படுத்த, அனைத்து வழிமுறைகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒற்றைக் கலாச்சார இலக்குப்படி, ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே கடவுள் (இராமன்), ஒரே மதம் (இந்து மதம்), ஒரே கலாச்சாரம் (ஆரிய சனாதன கலாச்சாரம்), வர்ணாச்ரமதருமம் இவற்றை நடைமுறைப் படுத்த, சமஸ்கிருதத் திணிப்பு, மாட்டுக்கறித் தடை, இந்து மதத்தை ஏற்காதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்ற முழக்கம், சைவ உணவு, காவி உடை என்று ஒவ்வொன்றாகக் கட்டாயப்படுத்தித் திணித்து வருகின்றனர்.
அதேபோல் புராண, இதிகாச மடமைகள் எல்லாவற்றிற்கும் அறிவியல் சாயம் ஏற்றி அவற்றை மக்கள் மூளையில், குறிப்பாக எதிர்கால தலைமுறையினரான மாணவர்கள் மூளையில் ஏற்ற, பல்வேறு திட்டங்களைத் தீட்டி அவற்றையும் செயல்படுத்தி வருகின்றனர். சோதிடத்தையும், வாஸ்துவையும் அறிவியலாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
பாரதக் கதையை எடுத்துக் கொண்டு, அதில் சொல்லப்பட்டுள்ள அறிவுக்கும், அறிவியலுக்கும் அறவே தொடர்பில்லாத, அவற்றிற்கு எதிரான கருத்துகளை, அறிவியலோடு தொடர்புப்படுத்தி, அறிவியலுக்கே அவைதான் அடிப்படை யென்பதாகச் சொல்லி வருவதோடு, அவற்றை அறிவியல் கருத்துகளாகவே பாடத் திட்டத்தாலும் புகுத்த முயற்சிக்கின்றனர்.
மருத்துவமனைகளில் மந்திரம், சோதிடம் மூலம் சிகிச்சை
மத்திய பிரதேச மாநிலத்தில் நடக்கும் பிஜேபி ஆட்சி, தம் மாநில மருத்துவமனைகளில், வெளிநோயாளிகள் பிரிவில் சோதிட ஆலோசனை மய்யங்களை (Astro Consultation Centres) உருவாக்கி, அந்த மய்யங்களில் சோதிடர்களை அமர்த்தி, அவர்கள் நோய் பற்றியும், அது குணமாகுமா என்பது பற்றியும் வழங்கும் ஆலோசனைப்படி, நோயாளிகளுக்கு சிகிச்சை, போபாலில் உள்ள ஒரு நிறுவனத்தின் வழிகாட்டலின்படிச் செய்யத் திட்ட மிட்டுள்ளனர்.
பிஜேபி ஆளும் உத்ரகாண்ட் மாநில அரசு, மத்திய நல்வாழ்வுத் துறையுடன் இணைந்து, மந்திர சக்தி ஏற்றிய மூலிகைகளைப் பயன்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அனுமன் கொண்டுவந்ததாய் இராமாயணம் கூறும் சஞ்சீவி மூலிகையைத் தேடி அதை மருத்துவத்திற்குப் பயன்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளனர்.
அறிவியலின் உச்சத்தில் இன்று மருத்துவமனைகள் உயிர் காப்பதிலும், நவீன சிகிச்சை அளிப்பதிலும் வியத்தகு முன்னேற்றம் அடைந்து, மனிதனின் இறப்பையே தவிர்க்க முடியும் என்ற நிலைக்கு வந்துகொண்டிருக்கும் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நோயாளிக்கு சோதிடம் பார்த்து கிரகச் சூழலுக்கும், அவனது ஆயுள் அளவுக்கும் ஏற்ப மருத்துவம் பார்க்கவும், மந்திர சக்தியின் மூலம் நோயைக் குணப்படுத்தவும் முயற்சிக்கிறார்கள் என்பதால், இந்த மதவாத கட்சியின் மடத்தனமான முடிவுகளால் மக்களின் உயிர்கூட கேள்விக்குறியாகியுள்ளது.
உயர்கல்வி நிறுவனத்தில் வாஸ்த்து பாடம்
காரக்பூர் ஐ.ஐ.டி. உயர்கல்வி நிறுவனம் தனது இளங்கலைப் பட்டதாரிகளுக்கு வாஸ்த்து சாஸ்த்திரத்தைக் கற்பிக்கத் திட்டம் தீட்டியுள்ளதோடு, வாஸ்த்து சாஸ்த்திர ஆய்வு மய்யம் ஒன்றையும் ஏற்படுத்தி, அதன்வழி மக்கள் தீயசக்திகளிலிருந்து விடுபட, வீடுகளின் முன் கணேசக் கடவுள், அனுமன் சிலைகளை வைக்க அறிவுரை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இம்மாநிலத்திலும் பி.ஜே.பி ஆட்சியில் உள்ளதால், ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலில் இந்த மடமைத் திணிப்பு முயற்சி.
விமானத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் இல்லையாம்!
ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்ததற்-கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னேயே “சிவ்கர் பாபுஜி தால்படே’’ என்ற இந்தியர்தான் முதன்முதலில் விமானத்தைக் கண்டுபிடித்தார் என்பதை ஐ.ஐ.டி. நிறுவனங்களில் பாடமாகச் சொல்லித் தரவேண்டும் என்கின்றனர். இவ்வாறு சொல்வது யார் தெரியுமா? மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சத்தியா பால்சிங். விருது வழங்கும் விழா ஒன்றில் இப்படிப் பேசியுள்ளார்.
அமைச்சர் மட்டுமல்ல, தலைமை அமைச்சர் (பிரதமர்) நரேந்திர மோடி, மும்பையில் ஒரு நவீன மருத்துவமனையைத் திறந்து வைத்துப் பேசுகையில்,
உறுப்பு மாற்று அறிவியலுக்கு இந்துமதம் அடிப்படையா ?
“நாம் நம் சாதனைகளைப் பற்றிப் பெருமைப்பட வேண்டும். நாம் அனைவரும் மகாபாரதம் படித்திருக்கிறோம். அந்த மகாபாரதத்தில் கர்ணன் தன் தாயின் வயிற்றில் பிறக்கவில்லை. தன் தாயின் கருவறைக்கு வெளியில் உதித்தான்.
“நாம் கணேசக் கடவுளை வணங்குகிறோம். யானைத் தலையை வெட்டி வைத்து யானை முகத்துடன் கணேசன் உருவாக்கப்பட்டார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அதுவே முன்னோடிச் செயல்’’ என்று பேசியுள்ளார்.
இப்படிப்பட்ட அறிவுக் கொழுந்துதான் இந்த நாட்டின் பிரதமர். தனிப்பட்ட ஒரு மனிதரின் நம்பிக்கைகள் எவ்வளவு முட்டாள்தனமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது அவர்களை மட்டுமே பாதிக்கக் கூடியது. ஆனால், ஒரு நாட்டின் பிரதமர் இப்படிப்பட்ட அறிவியலுக்கு அறவே தொடர்பில்லா அசல் மடமைக் கருத்துகளை, அறிவியலின் உச்சத்தில், மக்களுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கப்போகும், அறிவியல் படித்த மருத்துவர்கள் பணியாற்றவிருக்கும் மருத்துவமனைத் திறப்பு விழாவில் இப்படிப் பேசுவது அறியாமையா? அல்லது அறிந்தே செய்யும் மதவெறியின் மமதைப் பேச்சா?
சூரியனை நோக்கி குந்திதேவி மந்திரம் ஜெபித்ததால் கர்ணன் பிறந்ததாய் பாரதம் சொல்கிறது. மந்திரத்தால் பிள்ளை பிறக்கும் என்பதுதான் அறிவியலா? இது என்ன மோடி மஸ்தான் வேலையா? மோடிதான் பதில் சொல்ல வேண்டும்.
இன்றைய அறிவியல் உலகில் மனிதனின் எந்த உறுப்பு பழுதானாலும், அதை மாற்றி வேறு ஒருவரிடம் கொடையாகப் பெற்ற உறுப்பைக் பொருத்தும் மிகச் சிறந்த மருத்துவ அறிவியல் வளர்ச்சியை நாம் படிப்படியாக முயன்று பெற்றுள்ளோம்.
ஆனால், இந்துத்வா பேர்வழிகள் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு எங்கள் இந்து மதமே அடிப்படை (முன்னோடி) என்று சொல்லி விநாயகர் புராணத்தைக் காட்டுகிறார்கள். அக்கதை இதோ:
“ஒரு நாள் சிவனின் பெண் சாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப்போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியான ஒரு காவல் ஏற்படுத்து வதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்கைத் திரட்டி உருட்டி அதை ஓர் ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஓர் ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து _- “நான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே!…” என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்தச் சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண் டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனைப் பார்த்து, “பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால், உள்ளே போகக்கூடாது…” என்று தடுத்ததாகவும், அதனால், பரமசிவக் கடவுளுக்குக் கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போன தாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, “காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்…?” என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், “காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்” என்று சொன்னதாகவும், இதுகேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஓட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியே வந்து பார்க்க, வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்டவைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்தார்’’ என்பதே அப்புராணக் கதை. இக்கதைக்கு சிவபுராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்கள் உள்ளன. மேலும், விநாயகருக்கு யானைத் தலை வந்தது பற்றி இன்னொரு கதையும் உள்ளது.
இக்கதைகளுக்கும் அறிவியலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது உயிருடன் உள்ள மனிதனின் பழுதுபட்ட உறுப்புகளுக்கு மாற்றாக உயிர்ப்புடன் உள்ள மனித உறுப்பை எடுத்துப் பொருத்துவது. ஆக, மனித உறுப்புக்கு மாற்றாய் மனித உறுப்பே பொருத்தப்படும். வேறு விலங்கு உறுப்பு பொறுத்தப்படுவதில்லை; பொருந்தவும் பொருந்தாது. அப்படியிருக்க, மனித உடலுக்கு யானைத் தலை பொருந்தியதாய் சொன்னது கற்பனையாகும். அறிவியலுக்கு முரணாகும்.
இரண்டாவதாக வெட்டுப்பட்ட விநாயகரின் மனிதத் தலையைத் தேடி எடுத்து வைக்காமல் காட்டில் தேடிச் சென்று யானைத் தலையை வெட்டி வந்து பொருத்தியதாய்ச் சொல்வது அறவே தப்பான கருத்து; அறிவியலுக்கு எதிரான செய்தி.
மூன்றாவதாக விநாயகர் தலை வெட்டப்பட்டவுடன் அவர் இரத்தம் முழுவதும் வெளியேறி இறந்த நிலையில், யானையின் தலையை வெட்டிவந்து பல மணி நேரம் கழித்துப் பொருத்தினால் எப்படி பொருந்தும்? பாதுகாக்கப்பட்டு தலை கொண்டு வரும் வசதி அக்காலத்தில் இல்லை. எனவே, யானை தலையும் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்பில்லை. ஆக, விநாயகர் உடலினும் உயிர்ப்பு இல்லை, யானைத் தலையிலும் உயிர்ப்பு இல்லை என்கின்ற நிலையில் அது எப்படி உயிர்ப்புடன் பொருந்தும்?
இப்படியெல்லாம் இருக்க, பொறுப்பான பதவி வகிக்கும் மத்திய தலைமை அமைச்சரே, “உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு விநாயகரின் யானைத் தலையே அடையாளம் என்பது மிக மிக கண்டித்தக்க பிதற்றல் அல்லவா?
குளோனிங் முறை பாரத காலத்தில் இருந்ததா?
குந்திக்கு தருமன் பிறந்ததைக் கேட்ட திருதராட்டிரன் மனைவி காந்தாரி, தான் இரண்டு ஆண்டுகள் கர்ப்பம் (கரு) தரித்தும் குழந்தை பிறக்காததைக் கண்டு வயிற்றில் இடித்துக் கொண்டாள்.
கரு கலைந்து வெளியில் உதிரமாய் வர அதை 100 கலயத்தில் அள்ளி வைத்தனர். அதிலிருந்து 100 பேர் பிறந்தனர் என்கிறது மகாபாரதம்.
கரு 10 மாதத்திற்குமேல் வயிற்றில் இருக்காது. 10 மாதத்திற்கு முன்புகூட குழந்தை பிறந்துவிடும். அப்படிப் பிறக்காமல் போனால் தாயும் குழந்தையும், இறந்து போவர். இதுதான் உலகம் அறிந்த அனுபவ உண்மை.
ஆனால், இந்து மதம் என்ன சொல்கிறது தெரியுமா? இரண்டு வருடமாக காந்தாரி வயிற்றிலே கரு அப்படியே இருந்ததாம். இதுதான் அறிவியலா? மகப்பேறு அறிவியல் இப்படித்தான் சொல்கிறதா? இக்கருத்து மகப்பேறு அறிவியலுக்கு எதிரானது, மூடத்த னமானது அறியாமையில் பிதற்றியது என்பது விளங்கவில்லையா?
அடுத்து, கருவைச் சுமந்து கொண்டுள்ள பெண் தன் வயிற்றில் அடித்தால், கரு கலையும். கலைந்த கரு இறந்துபோகும் இதுதான் அறிவியல்.
ஆனால், இந்துமதம் என்ன சொல்கிறது தெரியுமா? கலைந்த கரு இரத்தமாக வெளிவர அதை 100 கலயங்களில் அள்ளி மூட 100 குழந்தைகள் பிறந்தன.
வயிற்றில் உள்ள ஒரு கரு கலைந்தால், 100 குழந்தைகள் எப்படி பிறக்கும்? கரு கலைந்தால் அக்கரு இறந்துபோகும் என்பதே அறிவியல். ஆனால், கலைந்த கருவை 100 கலசத்தில் அள்ளி வைத்தார்களாம்? ஏன் கலசத்தில் அள்ளி வைக்க வேண்டும். கலைந்த கருவை குப்பையில்தானே போடுவார்கள்?
ஒரு கருவுற்ற பெண் தடுமாறி கீழே விழுந்தால் அவள் வயிற்றிலுள்ள கரு கலைந்து போகும். அந்தக் கருவை அள்ளி ஒரு கலயத்தில் போட்டு மூடினால், அது குழந்தையாக மாறுமா?
அப்படியிருக்க இப்படியொரு அறிவுக்கும், உண்மைக்கும், நடப்பிற்கும் பொருந்தாக் கருத்தைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
அது மட்டுமல்ல, கலைந்த கரு கலசத்தில் அள்ளி வைக்கப்பட்ட முறையைக் கொண்டுதான் குளோனிங் முறையைக் கண்டுபித்தார்கள் என்பது அதைவிட அறிவற்ற பிதற்றல் அல்லவா?
குளோனிங் என்பது ஒரு உயிரணுவைக் கொண்டு அந்த உயிரினத்தை உருவாக்குதல் ஆகும். அதற்கும் கலசத்தில் அள்ளி வைப்பதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
ஆனால், சிதைந்த கருவின் தசைகளை குளிர்பெட்டியில் வைத்திருந்தனர். அது 100 குழந்தையானது என்கிறார்கள். பாரதப்படி 100 மண் கலயத்தில் வைத்ததாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. எப்படி வைத்தாலும் சிதைந்த கருவின் தசைகள் குழந்தையாக மாறவே முடியாது.
அறிவியல் உண்மை அப்படியிருக்க இதுதான் (ஷிtமீனீ சிமீறீறீ) ஆராய்ச்சிக்கு அடிப்படை என்றும் பேசியுள்ளனர்.
ஸ்டெம் செல் ஆய்வுக்கு அடிப்படை மகாபாரதமா ?
“அமெரிக்கா ‘ஸ்டெம் செல்’ ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கு சொந்தம் கொண்டாட விரும்புகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் பாலகிருஷ்ணன் கன்பட் மடபுர்கர் ஏற்கனவே உடல் உறுப்புகளை புதுப்பிப்பதைப் பற்றிய காப்புரிமை பெற்றிருக்கிறார். அவருக்கு உந்துசக்தியாக இருந்தது மகாபாரதம்தான் என்பதைக் கேள்விப்பட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்’’ என்று சத்தியபால்சிங் “டெஜோன்மே பாரத்’’ (Tejonmay Bharat) என்ற தம் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இதிகாசங்கள், புராணங்கள் என்பவை கற்பனைகளால் புனையப்பட்டவை. அப்படியிருக்க அவற்றை அறிவியலுடனும் அறிவியல் கண்டுபிடிப்புகளுடனும் பொருத்துவது பொருந்தாக் கருத்து என்பதோடு, அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் நோக்கத்திற்கு எதிரானதும் ஆகும்.
பாரத காலத்தில் தொலைக்காட்சி இருந்ததா ?
மகாபாரதப் போரை வியாசருக்கு விளக்கியதைக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது என்றும், இராமாயணத்தில் வரும் புஷ்பக விமானத்தைக் கொண்டு விண்ணூர்த்தி தொழில்நுட்பம் அன்று இருந்தது என்றும் சொல்வது வடிகட்டிய மடமை அல்லவா? அக்காலத்திய வண்டியும், சக்கரமும் தேரும் பயன்பாட்டில் இருந்தபோது விமானமும், தொலைக்காட்சிப் பெட்டியும் இருந்திருக்க வேண்டும் அல்லவா? இல்லாததிலிருந்தே இவை கற்பனை என்பது விளங்கவில்லையா?
இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு நவீன அறிவியல் சாதனங்களும், பல்வேறுபட்ட அறிவியலாளர்களும் தேவை என்பதை நாம் உணர வேண்டும். இப்படிப்பட்ட முன்னேற்றம் 18ஆம் நூற்றாண்டுக்குப் பின்தான் நடைமுறைக்கு வந்தது.
அப்படியிருக்க இந்துமத புராணங்களிலும் இதிகாசங்களிலும் அறிவியல் கருத்துகள் இருந்தன என்பது தப்பல்லவா?
இன்று இந்துத்துவவாதிகள் அதிகார பீடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, ஏழு தலைமுறைகளாக நாம் பெற்ற அறிவியல் சாதனைகளை அழிப்பதோடு, அந்த அறிவியல் விசாரணை, அறிவு, நுட்பம் ஆகிய அறிவியல் பரப்பில், வெறும் நம்பிக்கைகளையே ஆதாரமாகக் கொண்ட புராணக் கதைகளைப் புகுத்த முனைகின்றனர். இது ஒரு பிற்போக்குத்தனமான செயலாகும்.
ஆகஸ்டு 9ஆம் நாள் அறிவியலாளர்களும், புரட்சிகர (நவீன) சிந்தனையாளர்களும் இந்தப் பொய்மைகள் அறிவியல் ஆய்வுகளிலும் பயிற்சிகளிலும் இடம்பெறக் கூடாது என்று வீதிக்கு வந்து போராடி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்தப் பலமுனை எதிர்ப்பாளர்கள் அறிவியல் கல்விக்கான பட்ஜெட் தொகையும் உயர்த்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர்.
இந்தப் புராண (பொய்மை) அறிவியலுக்கும் (றிsமீபீஷீ-ஷிநீவீமீஸீநீமீ) அறிவியலுக்குமான வேற்றுமைகள் தெளிவானவையும் வெளிப்படை யானவையுமாகும். அறிவியல், கேள்வி கேட்பதையும், விமர்சிப்பதையும் ஊக்கப் படுத்துகிறது. ஆனால், பொய்மை அறிவியல் சொல்வழி நம்பிக்கையானது சிந்தனைகளை, எதிர்ப்புகளை நசுக்குவது.
இந்த நாட்டில் அறிவியல் மனப் பான்மையின் மூலம் பெரிய நன்மைகள் ஈட்டப்பட்டிருக்கின்றன. இந்தக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல நமது அரசமைப்புச் சட்டமும் விஞ்ஞான மனப்பான்மையை ஊக்குவிக்க வேண்டும் என்கிறது.
அறிவியல் அடிப்படையில் கல்வி அமைய வேண்டும்
தேசியக் கொள்கைகளை வகுப்பதிலும், அறிவியல் ஆய்வுகளிலும், கல்வியிலும் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களின், அவர்களின் அந்தரங்க கூட்டாளிகளின் உளரல்களை ஒதுக்கித்தள்ள வேண்டியது கட்டாயம்!
அதற்கான அழுத்தத்தை இந்தியா முழுக்க, மதச்சார்பற்ற, முற்போக்குச் சக்திகள் போராட்டங்கள் மூலம் தந்தாக வேண்டும். மாணவர்களை மடமைத் திணிப்பிலிருந்து மீட்டாக வேண்டும்.
-மஞ்சை வசந்தன்