சூத்திரன் என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சி

நவம்பர் 16-30

இந்துக்கள் என்கின்ற சமுதாயத்தில் பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நாம் எல்லோரும், சூத்திரர்கள், கீழ்ப்பிறவியாளர் என்று சட்டம்,. சாஸ்திரம் முதலியவற்றில் குறிப்பிடப் பட்டிருப்பதோடு, கோவில்கள் முதலியவற்றில் மூலஸ்தானம், கர்ப்பக்கிருகம் என்பவற்றில் பிரவேசிக்கக்கூடாதவர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டிருக்கிறோம். நம் கிளர்ச்சிகளால் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட எல்லா இந்துக்களும் செல்லலாம்; ஜாதி (பிறவி) காரணமாக எந்த மனிதனுக்கும்,  எந்தவிதமானத் தடையும், பாகுபாடும் இல்லை என்று சட்டத்தில் செய்யப்பட்டும், கோயிலில் கடவுள் சிலை வைக்கப்பட்ட இடத்திற்குள் மட்டும் பார்ப்பனரல்லாத இந்து மக்கள் செல்லக்கூடாது என்ற நிபந்தனை ஏற்படுத்திக் கொள்ளப் பட்டிருக்கிறது. இந்த நிபந்தனைக்குப் பார்ப்பனரல்லாத மக்கள் கீழ்ஜாதியார், இழிஜாதியார் என்று இருக்கப்பட வேண்டும்-, ஆக்கப்பட வேண்டும் என்கிற காரணம் ஒன்றைத்தவிர, வேறு ஒரு காரணமும், நியாயமும் இல்லை. எப்படியென்றால், மூலஸ்தானம், கர்ப்பக்கிருகம் என்பது இடத்தைப் பற்றியதே தவிர, கடவுளைப் பற்றியதாக இல்லை. மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிராத சாஸ்திர- சடங்கு முறைப்படி வைக்கப்பட்ட எந்தக் கடவுளையும் யாரும் நெருங்கலாம்- தொடலாம். நெருங்கித் தொட்டுக் கும்பிடலாம். ஆனால், மூலஸ்தானத்தில் இருக்கும் சிலைக்கு அருகில் மாத்திரம் பார்ப்பனர் அல்லாதவர்கள் செல்லக்கூடாது. அதாவது அந்த அறைக்குள் செல்லக்கூடாது என்பதுதான் தடையின் தத்துவம்.

இதன் கருத்து என்னவென்றால், முறைப்படிக் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்ட கடவுள் எதுவானாலும்- இராமன், கிருஷ்ணன், கந்தன், கணபதி, சூரியன், சந்திரன் முதலிய எவையானாலும்- எந்தக் கோயிலுக்குள்ளும் மூலஸ்தானம் என்பதற்குள் இல்லாமலிருந்தால் நெருங்கலாம்- தொடலாம் என்பதாகத்தான் இன்று அனுபவத்தில் இருந்து வருகிறது. எனவே, மூலஸ்தானத்திற்குள் மனிதன் பிரவேசிப்பதால் எந்தக் கடவுளுக்கும் எவ்விதப் புனிதமும் கெட்டுப் போவதில்லை. மூலஸ்தானத்திற்குத் (இடத்திற்கு) தான் புனிதம் கெட்டுவிடுகிறதாம். அதுவும் பார்ப்பனரல்லாத மனிதர்கள் சென்றால் தான் கெட்டு விடுகிறதாம்.

மற்றப்படி பூனை, எலி, பல்லி, கரப்பான் பூச்சி முதலிய ஜந்துக்கள் எதுவேண்டுமானாலும் போகலாமாம்; கடவுளையும் தொடலாம். நாம் போகக் கூடாதாம்- அதுவும் இந்திய தேசத்தில், அதுவும் சில பார்ப்பன ஆதிக்கமுள்ள சில மாகாணங்களில் மாத்திரம்தான். இங்கு நாம் போனால் புனிதம் என்பது கெட்டு விடுகிறதாம்.

அடுத்த மாகாணமாகிய ஒரிசாவில் ஜெகந்நாத்திலுள்ள இந்தியாவிலேயே உயர்ந்த கோயிலான பூரிஜெகநாத் என்கின்ற கிருஷ்ணன் கோயிலில் யாரும் மூலஸ்தானத்திற்குள் சென்று கிருஷ்ணன் சிலையைச்  சுற்றி வந்து அவனின் காலைத் தொட்டுக் கும்பிடலாம்.

மற்றும் காசி, பண்டரிபுரம் முதலிய கோயில்களிலும் மூலஸ்தானத்திற்குப் புனிதம் இல்லை. யாரும் நெருங்கலாம் தொடலாம்.

ஆகவே, தமிழ்நாட்டில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள். பார்ப்பனரல்லாத மக்களாகிய நம்மை இழிவுபடுத்தவும், கீழ்மைப்படுத்தவும் சட்டத்தின் மூலம் செய்துகொண்டிருக்கிற ஏற்பாட்டை நாம் உடைத்தெறிய வேண்டியது நம் ஜீவிதக் கடமையாக  இருக்கிறது.

இதை நாம் வெகு நாளைக்கு முன்பே செய்திருக்க வேண்டும். இந்தக்  காரியத்திற்கும், கடவுள் நம்பிக்கைக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை. கடவுள் நம்பிக்கைக்காரர்களும் இந்தத் தடையைத் தகர்த்து எறியலாம்; கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் மனிதமான உரிமையை முன்னிட்டு  இந்தத் தடையைத் தகர்த்தெறியலாம், எறிய வேண்டும்.

எனவே இந்த இழிவு ஒழிப்புக் கிளர்ச்சிக்குப் பார்ப்பனரல்லாத இந்துக்கள் எல்லாரும் கலந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இப்போது நமக்கு இருக்கும் இழிவு- நிரந்தரமான இழிவு- என்பது இந்த மூலஸ்தானத்தடை என்பதுதான்.

“மூல ஸ்தானத்திற்குள்’’ பிரவேசிக்க உரிமையுள்ள பார்ப்பான் என்பவனுக்கு ஒரு நிபந்தனையும் இல்லை. பூணூல், உச்சிக்குடுமி இரண்டு மாத்திரம் இருந்தால் போதும். அவன் எதையும் குடிக்கலாம்; எதையும் சாப்பிடலாம்; யாரையும் தொட்டுக்கொள்ளலாம்: யாருடனும் உட்காரலாம், எப்படிப்பட்டவனாகவும் இருக்கலாம். எனவேதான் இந்தத் தடை ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இதில் ஒவ்வொரு பார்ப்பனரல்லாத இந்து மனிதனும் கலந்து கொள்ளவேண்டியது அவசியமான காரியம் ஆகும்.

காங்கிரஸ்காரர்களும், -கம்யூனிஸ்ட்களும்,  தி.மு.க.காரர்களும் – தி.க.காரர்களும் எல்லோரும் ஆண், பெண் உட்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டியது மானாபிமானக் கடமையாகும். ஆகையால் உடனடியாகக் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் தங்கள் பெயர்களைக் கொடுக்க விரும்புகிறேன்.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிபோல்,- வைக்கம் கிளர்ச்சிபோல் இக் கிளர்ச்சித் தொடர்ந்து 5,6 மாதங்களுக்குமேல் நடத்தப்பட வேண்டியது வரும். ஆதலால் அதற்கு ஆகும் பெருந்தொகை நன்கொடையாக வேண்டி இருக்கும். வசூலிக்க ஆசிரமம் மாதிரி இடம்- பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொண்டு, தினமும் அய்ம்பது பேருக்குக் குறையாமல் சாப்பாடு போட்டுக் கைவசம் வைத்து இருக்கவேண்டியதாகவும் இருக்கும்  இதனால் ஒரு நல்ல பிரசார பலனும் ஏற்படும். ஆகவே உடனே இஷ்டப்படும் தோழர்கள் தங்கள் பெயரைக் கொடுக்க வேண்டுகிறேன்; கிளர்ச்சி என்பது எந்தவித பலாத்காரமும் இல்லாமல் அமைதியான தன்மையில் நடைபெறும் ஆதலால் யாரும் இதில் கலந்து கொள்ளலாம்.

13-10-1969

‘விடுதலை’யில் பெரியார் ஈ.வெ.ரா. தலையங்கம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *