அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்? – 11

நவம்பர் 01-15

சனாதனிகளின் சண்டித்தனம்

இந்துச் சட்டத் திருத்த மசோதாவில் இப்படிச் செய்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம் என்கிறார்கள். முதலில் கருத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; பிறகு திருத்தங்களை ஏற்றுக் கொள்ளலாம்’’ என்றார் அம்பேத்கர். ஏற்கவே முடியாது, சட்டமே கூடாது. இருப்பது இருக்கிற மாதிரியிலேயே இருக்கட்டும் என்ற பிடிவாதமாகப் பார்ப்பனப் பண்டிட்கள் பேசினர்! போதாதற்கு வங்காளத்து முசுலிம் ஒருத்தரைப் பேச வைத்தனர்! ஆதரித்துப் பேசிவந்த பண்டிதர் நேரு, பிறகு பல்டி அடித்துவிட்டு, அம்பேத்கர் கருத்து ஏற்கப்படாத காரணத்தால்தானே இந்துத் திருத்தச் சட்ட மசோதா வெற்றி பெறவில்லை! இப்படிச் செய்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம் என்றெல்லாம் இன்றைக்குப் பேசுவதும் அரைவேக்காட்டுதனமல்லவா?

இயற்கை வடிவங்களை வணங்கும் பழங்குடியினரை, ஆதிவாசிகளை, இந்துக்கள் என்பதே மோசடித்தனம். அவர்களை ஆதிவாசிகள் என்றழைக்க மாட்டார்கள். மாறாக, கிரிஜன் என்றார்கள். காந்தி, ஆதிதிராவிடர்களை ஹரிஜன் என்று கூறி ஏமாற்றியதைப்போல! அவர்களை ஆதிவாசிகள் என்று கூறிவிட்டால், ஆரியப் பார்ப்பனர்கள் ‘பாதிவாசி’’கள் என்றாகி விடுமே என்கிற பயம்! மதமற்றவர்களை மலைவாழ் மக்களாக்கி மோசடியாக இந்துக்கள் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எழுதி வைத்துக்கொண்ட நாணயமற்றவர்கள்.

இந்துத்வா?

இந்து மதம் என்பது வேறு. இந்துத்வா என்பது வேறு என்கிறார்கள். இந்து மதம் என்பது 200 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்கார வில்லியம் ஜோன்ஸ் வைத்த பெயர். இப்பெயர் முதலில் நாட்டைக் குறித்தது. பின்னர் மக்களைக் குறித்தது என்பார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். இந்தியாவைக் கைப்பற்றிய போதே ஆங்கிலேயர்கள் இலங்கையையும் கைப்பற்றி அடிமைப்படுத்தினார்கள். 1947இல் இந்தியாவுக்கு விடுதலை கொடுத்தார்கள். இலங்கைக்கு 1948இல் விடுதலை அளிக்கப்பட்டது. இலங்கை மக்களுக்கான பொதுச் சட்டம் உருவாக்கும்போது, தேச வழமைச் சட்டம் எனப் பெயர் இட்டார்கள். அதையே இந்தியாவுக்குச் செய்தபோது மக்களுக்கும் மண்ணுக்கும் வழங்கப்பட்டு வந்த இந்து என்ற சொல்லை வைத்து இந்துச் சட்டம் என்று வைத்தனர். சட்டத்தின் பெயரைக் கொண்டு மதத்தின் பெயரும் இந்து என்று ஆகிவிட்டது. எவரும் இதனை ஏற்காமல் இருக்க முடியாது. இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறோ, வரலாற்று ஆதாரமோ எதுவும் கிடையாது. மற்றைய மதங்களுக்கிருப்பதைப் போல இந்து மதத்தை உருவாக்கியவர் யாரும் கிடையாது. மற்ற மதங்களுக்கு இருப்பதைப் போல ஒரு மதநூல் கிடையாது. ஆயிரக்கணக்கான கடவுள்கள் இருப்பதைப் போலவே நூற்றுக்கணக்கான நூல்களைக் காட்டி இவை அனைத்தும் இந்து மத நூல்கள் என்கிறார்கள். வேதங்கள், ஸ்ருதிகள், ஸ்மிருதிகள், உபநிஷத்கள், இதிகாச புராணங்கள் என்று பலப்பல நூல்கள் இந்துமத நெறிநூல்கள் எனப்படுகின்றன. இந்துத்வா எனப்படுவது 1922இல் மராட்டிய சித்பவன் பார்ப்பனரான வினாயக தாமோதர் சாவர்க்கார் எழுதிய நூலின் தலைப்பு. அதை ஒரு தத்துவமாக்கி மதம், தேசம், கலாச்சாரம், பண்பாடு, மொழி, சமூகம், வரலாறு, அரசியல் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது என்கிறார்கள் இந்து என்பது மதவழிபாட்டு முறைகளை மட்டுமே உள்ளடக்கியதாம். இந்துத்வா என்பது மதத்தோடும் தேசத்தோடும் தொடர்புடைய எல்லாவற்றையும் உள்ளடக்கிய சொல்லாம். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்பதைக் கூறும் சொல் இந்துத்வா.

இந்துத்வக் கற்பனை

இந்தியா ஒரு நாடல்லவே! இந்துக்களின் கதைகளின்படியே 56 தேசங்கள் கொண்டதும் 56 ராஜாக்கள் ஆண்டதுமானதுதானே! “இவர்களது பாரதமாதாவின் தலையாகிய நாடு தப்போது ஆப்கானிஸ்தான் எனும் முஸ்லிம் நாடு. தலையின் ஒரு பகுதி பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் எனும் முசுலிம் நாடு. பாரதமாதாவின் வலதுதோள், வலது கை, வலப்புற மார்பு ஆகியவை பாகிஸ்தான் எனும் முஸ்லிம் நாடுதானே! பாரதமாதாவின் இடது விலாப் புறமும் இரைப்பையும் ஈரலும் பங்களாதேஷ் எனும் முஸ்லிம் நாடு. இடது தோளும் இடது கையும் மியான்மர் (பர்மா) எனும் பவுத்த முஸ்லிம் நாடு. பாரதமாதாவின் பாதங்கள் இரண்டுமே இன்று (இலங்கை) சிறீலங்கா எனும் பவுத்த நாடு! இந்நிலையில் எந்த தேசத்தைக் குறிப்பிடுகிறது இந்துத்வா?மூளியாகிப் போன பாரதமாதாவே 22 மொழிகளைக் கொண்டது. எப்படி இங்கு ஒரே மொழி இருக்க முடியும்? என்றைக்காவது ஒரே மொழி இருந்ததுண்டா? வரலாறு உண்டா? பிரிந்து கிடந்த பகுதிகளை ஒன்றாக்கி ஆண்டவர்களே முஸ்லிமும் வெள்ளையரும் தானே! அவர்கள் ஒன்று சேர்க்காமல் போனால் உனக்கு ஏது பாரதமாதா? அவர்களும் இறக்குமதி செய்யப்பட்ட மொழிகளை வைத்து ஆண்டார்களே தவிர, மக்களின் மொழிகளைப் புறக்கணிக்கவில்லை என்பதுதானே வரலாறு! இந்துத்வாவில் எந்த மொழி? சொல்லத் துணிவுண்டா? சொல்லிவிட்டுத் தமிழகத்தில் தப்பிக்க முடியுமா? எல்லாரும் தொடர்பு கொள்ளும் வகையில் இருப்பது இங்கிலீஷ் மொழிதானே! அதுதான் இந்துத்வாவின் ஒரே  மொழி என்று கூறிவிட்டு உ.பி., பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் நடமாட முடியுமா? இந்துத்வாவின் இலக்கணங் கண்டு இன்னின்னவை என்று கூறி ஏமாற்றுகின்றனர். பல்வேறு கலாச்சாரங்களை, பண்பாடுகளை ஏற்று வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்துகிறதாம் இந்துத்வா! எப்படி? முடியுமா?

ஒரே பண்பாடா?

தீபாவளி எனும் பண்டிகை நரகாசூரனைக் கொன்ற நாள் எனக் கூறிக் கொண்டாடுகிறார்கள் தமிழ்நாட்டில். இந்தக் கதையோ பண்டிகையோ கேரளாவில், வங்காளத்தில் கிடையாது. குஜராத்தி மார்வாரிகள் தீபாவளியைச் சூதாடவும் புதுக்கணக்கு தொடங்கவும் பயன்படுத்தும் பண்டிகை என்கிறார்கள். நரகாசூரனைக் காணோம். இராமன் முடிசூட்டிக் கொண்ட நாள் என்கிறது ஒரு பகுதி. இந்த வேற்றுமைகளை எப்படி ஒற்றுமைப் படுத்துவார்கள்? வாமனப் பார்ப்பனன் மூன்றடி மண்கேட்டு மாவலியைக் கொன்ற கதை பல பகுதிகளில்! மாவலி மன்னன் தன் குடிமக்களைக் காணவரும் நாள் என்று மலையாள மக்கள் பத்து நாள்கள் பாட்டும் கூத்தும் விருந்தோடு கொண்டாடுகிறார்கள். இதில் ஒற்றுமையை ஏற்படுத்தினால் விஷ்ணுவின் 21 அவதாரங்களில் ஒன்றான குள்ளப் பார்ப்பான் அவதாரம் கந்தலாகி விடுமே!

எனவே, இந்துத்வர் என்பதே ஏமாற்று! எழுதிய அந்த ஆள் (சாவர்க்கர்) கடைந்தெடுத்த கோழை! ஆங்கிலேயரிடம் அய்ந்து முறை மன்னிப்பு கேட்டு ஆட்சியாளர் விதித்த நிபந்தனைகளை ஏற்று ரத்னபுரியில் முடங்கிக் கிடந்தவர். இதை ஆர்.எஸ்.எஸ். எடுத்து வைத்து ஏமாற்றுகிறது!

(கேள்விகள் தொடரும்…)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *