அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்! கேரள அரசு வரலாற்றுச் சாதனை! தமிழக அரசு தாமதிக்கலாமா?

நவம்பர் 01-15

“கோயில் கருவறையில் பாதுகாப்புத் தேடிக் கொண்டுள்ள ஜாதி அங்கும் ஒழிக்கப்பட வேண்டும்’’ என்று தந்தை பெரியார் தன் இறுதி மூச்சு நிற்கும்போதுகூடப் போராடினார்.

1970இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்று சட்டம் இயற்றி இந்தியாவுக்கே வழிகாட்டினார். இதன்மூலம் தந்தை பெரியாரின் இதயத்தில் தைத்த முள்ளை அகற்ற முயன்றார்.

ஆனால், அதை எதிர்த்தவர்கள் தொடுத்த வழக்குகளினால் அச்சட்டம் நிறைவேற்றப் படாமல் முடக்கப்பட்டது.

2006இல் மீண்டும் கலைஞர் அவர்கள் ஒரு தனிச் சட்டம் (கிநீt 15 ஷீயீ 2006) இயற்றினார்.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.இராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு போட்டு, சைவ, வைணவ ஆகமப் பாடங்களைக் கற்று ஓராண்டில் பட்டயம் பெற்று அனைத்து ஜாதியினரும் அர்ச்ககராக (69% இடஒதுக்கீட்டு அடிப்படையிலும், பொதுப் போட்டி அடிப்படையிலும்) வழி செய்தார்.

இதனை எதிர்த்து தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபை, ஆதிசைவ சிவாச்சாரியர் நலச்சங்கம் உட்பட சில அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடையாணையைப் பெற்றனர்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 16.12.2015இல் ஜஸ்டிஸ் ரஞ்சன் கோகாய், ஜஸ்டிஸ் ரமணா அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக இயற்றப்பட்ட தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

சேஷம்மாள் வழக்கில் கூறப்பட்டுள்ளபடி அர்ச்சகர் நியமனம் ஆகம விதிகளின்படி செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யப்படும் ஒவ்வொரு நியமனத்திலும் பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றத்தில் பரிகாரம் தேடலாம் என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டது.

இத்தீர்ப்பின்படி தமிழக அரசு அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்காததால், 16.05.2016இல் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தி 5,000 பேர் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்றனர்.

திராவிடக் கட்சி என்ற பெயரில், அண்ணா, எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லிக்கொண்டு, அதற்கான கொள்கைப்பற்று, உணர்வு, உந்துதல் ஏதும் இன்றி தமிழக அரசு இருக்கும் நிலையில், கேரள முதல்வர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்கள், அமைதியாக ஆனால், அதிரடியாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக (இடஒதுக்கீட்டின் அடிப்படையில்) ஆணையிட்டார்.

அதன்படி, திருச்சூர் மாவட்டம், சாலக்குடிக்கு அருகிலுள்ள நாளுகெட்டு என்ற ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான யது கிருஷ்ணா 09.10.2017 அன்று அர்ச்சகராகப் பணி ஏற்றார்.

இதன் மூலம் கோயில் கருவறையுள் ஒரு தாழ்த்தப்பட்டவர் அடியெடுத்து வைத்தார். இது சாதாரண நிகழ்வல்ல! சமூகநீதி வரலாற்றில் இது மாபெரும் சாதனை! நிலவில் முதல் அடியெடுத்து வைத்த சாதனையைவிடவும் பெரிய சாதனை. இந்தப் பெருமைகள் அனைத்தும் கேரள அரசையும் அதன் முதல்வர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களையும் சேரும்.

கேரள அரசு பா£ப்பனர் அல்லாத 36 அர்ச்சகர்களை நியமனம் செய்துள்ளது. அதில் 6 பேர் தாழ்த்தப்பட்டவர்கள் என்பது சமூகநீதியின் அடிப்படையில் முக்கியமானது.

வரவேற்கும் உயர் சாதியினர்

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தின் திருவல்லாவில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மணப்புரம் மகாதேவர் ஆலயம். இந்த ஆலயத்தின் முகப்பு, அதற்குச் செல்லும் பாதை என காணும் இடமெல்லாம்யது கிருஷ்ணாவை வரவேற்று டிஜிட்டல் பதாகைகள்.

அக்டோபர் 9 திங்கள் கிழமை அன்று, யது கிருஷ்ணா முதன் முதலில் அர்ச்சராகப் பொறுப்பேற்க வந்தபோது, மணப்புரம் ஸ்ரீ மகாதேவர் ஆலய சேவா சங்கத்தினர் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு முதல், குறும்புகள் வரை ஒவ்வொன்றையும் விளக்கும், கேரளாவில் பிரசித்தி பெற்ற வஞ்சிப்பாட்டு பாடி, யது கிருஷ்ணாவைக் கோயில் கருவறைக்கு அனுப்பிவைத்தனர். இப்படி உற்சாக வரவேற்பு கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் அந்தப் பகுதியைச் சேர்ந்த உயர் சாதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெற்றி நிரம்ப பட்டை, கழுத்தில் உத்திராட்சம், கூடுதலாக இரு அர்ச்சகர் மாலைகள், பூணூல், அர்ச்சகருக்கே உரிய கேரள பாணியில் கட்டப்பட்ட வேட்டி சகிதம் காட்சியளிக்கிறார் யது கிருஷ்ணா.

90 ஆண்டுகளுக்கு முன் இதே கேரளத்தில் தந்தை பெரியார் குடும்பத்துடன் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தினைத் தொடங்கி நடத்தி, வெஞ்சிறையேகி போராட்டத்தினை வெற்றிகரமாக்கி வரலாற்றுச் சிகரத்தில் “வைக்கம் வீரர்” என்ற புகழுடன் பட்டொளி வீசிப் பறந்து கொண்டுள்ளார்.
அன்று உயர் ஜாதிக்காரர்கள் குடியிருக்கும் வீதிகளில் கீழ் ஜாதியார் நடக்கக் கூடாது என்ற நிலையை எதிர்த்துப்  போராடினார்.

அதன்பின் கோயில் கருவறைக்குள் வலுவாக பின்பற்றப்படும் தீண்டாமையை எதிர்ப்பதற்கான போராட்டத்தை தந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதிப் போராட்டமாக அறிவித்து அந்தக் களத்தில் நின்றபடியே இறுதி மூச்சைத் துறந்தார்.

தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்திட்ட வெற்றி

கேரளாவில் வைக்கத்தில் போராட்டம் நடத்தி, வீதியில் நடக்கவும், பின் கோயிலுக்குள் செல்லவும் உரிமை பெற்றுத் தந்தார் பெரியார். அன்றைக்கு பெரியார் ஊட்டிய உணர்வு, அங்கு மாபெரும் எழுச்சிக்கும், சுயமரியாதை உணர்வுக்கும் வழியேற்படுத்தி, இன்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆணையிடும் அளவிற்கு மாபெரும் வெற்றியைத் தந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் தந்தை பெரியார் விட்ட பணியை, அவர் போட்டுத்தந்த பாதையில் அன்னை மணியம்மையார் காலத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தினார். அதன் பின் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அப்பணியை சட்ட ரீதியாகவும், போராட்ட வடிவிலும், அறிக்கை வாயிலாகவும் அழுத்தம் தந்து வருகிறார். இன்று வரை போராட்டக் களத்திலேயே நாம் நின்று கொண்டுள்ளோம்.

தலைவர்கள் கோரிக்கை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:  

“தமிழ்நாடு அரசும், இந்து அறநிலையத் துறையும் தந்தை பெரியார் பிறந்த, சுயமரியாதை இயக்கம் பிறந்த, திராவிடர் இயக்கம் பீடு நடைபோடும் தனித்தன்மைமிக்க தமிழ் மண்ணிலேயும், தாழ்த்தப்பட்டவர் உட்பட   அனைத்து ஜாதியினரையும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அர்ச்சகராக பணி நியமனம் செய்தால், இந்த அரசுக்கு நற்பெயர் கிட்டக் கூடிய வாய்ப்பும் வருமே!
இந்தியா முழுவதும் ஒரே சட்டம்தான் _- கேரளாவுக்குப் பொருந்தக் கூடியது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் அல்லவா?

தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படட்டும்!’’

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:  

“ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக நியமிக்கப் படுவதே சமூகநீதியாகும். அதனை நிலைநாட்ட, கேரள அரசிடமிருந்து தமிழக அரசு முற்போக்குப் பாடம் கற்று, உடனடியாகச் செயல்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.’’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:  

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசு, திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தி உள்ளது. அதன்படி, அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ள 62 பேரில் 30 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 6 பேர் தலித்துகள், சமூகநீதியை உத்தரவாதப்படுத்தும் கேரள அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதேபோன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்:  

“அரசமைப்புச் சட்டம் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று தெரிவித்தாலும்கூட இன்றும் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஜாதிய வேறுபாடுகளும், அதன் விளைவாக வன்முறைகளும் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் 6 தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட 36 பேரை, பிராமணர்கள் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்திருப்பது, வரவேற்கத்தக்கது. இதனை முன் மாதிரியாகக் கொண்டு தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.’’

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:  

“தந்தை பெரியார் எழுப்பிய முழக்கத்தை கேரள மாநில அரசு நடைமுறைப்படுத்தி யிருக்கிறது. கேரள அரசின் இந்த நடவடிக்கை சிறப்புக்குரியது, வரவேற்கத்தக்கது.

தந்தை பெரியார் வைக்கம் போராட்டம் நடத்தி வெற்றிகண்ட அதே மண்ணில் பினராயி விஜயனால் சமூகநீதி நிலைநாட்டப் பட்டிருக்கிறது. கேரளாவில் நடந்த சாதனை தமிழகத்தில் நடவாதது வருத்தமளிக்கிறது.

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி கலைஞர் சட்டம் கொண்டு வந்தாலும் தமிழகத்தில் இன்றுவரை நடைமுறைக்கு வராதது வருத்தம் தருகிறது.’’

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்:  

“இது மிகப்பெரிய சமூகப் புரட்சியாகும். இதைச் சாதித்துக் காட்டியிருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 2006ஆம் ஆண்டு திமுக அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 2007ஆம் ஆண்டு மாநில அரசு நடத்திய பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து தலித்துகள் உள்ளிட்ட பிராமணர் அல்லாத 206 பேர் அர்ச்சகர் பயிற்சி பெற்றும் தமிழக அரசு இன்றுவரை பணி நியமன ஆணை வழங்கவில்லை.

கேரள அரசைப் பின்பற்றி தமிழக அரசும் உடனடியாக தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க முன்வர வேண்டும்.’’

தமிழக அரசு தாமதிக்கலாமா?

இப்படி எல்லா தலைவர்களும் அழுத்தம் கொடுக்கும் நிலையில், தொல்.திருமாவளவன் அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளார். அப்படியிருந்தும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆணையிடுவதில் தமிழக அரசைத் தடுப்பது எது? இராஜாவை மிஞ்சிய விசுவாசமா?

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா படங்களை போட்டுக்கொண்டு, அவர்கள் வழி நடக்கிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களின் முதன்மைக் கொள்கை நிறைவேறாமல் முடக்கிப் போடுவது அவர்களுக்குச் செய்யும் துரோகம் அல்லவா?

திராவிடக் கொள்கைகளை அறவே கைவிட்டுவிட்டு, ஆர்.எஸ்.எஸ்.ன் அணுக்கத் தொண்டர்களாக அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் நடந்து கொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இடஒதுக்கீட்டில் 9 ஆயிரம் வருமானவரம்பு கொண்டு வந்தபோது, எம்.ஜி.ஆரையே தண்டித்தவர்கள் தமிழக மக்கள்.

யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, தங்களின் அளப்பரிய விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்காக, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆணை பிறப்பிக்காமலிருப்பது வரலாற்றுத் தவறாகும்.

கம்யூனிஸ்டகள் ஆளும் கேரளாவில் இது நடைமுறைப்படுத்தப்ப்பட்ட பின்புகூட, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தாதது கேலிக்குரியது மட்டுமல்ல; கேவலத்திற்குரியதும் ஆகும்.

இதில் தமிழகம் உணர்வற்று இருப்பது கண்டு அனைத்து தரப்பு மக்களும் கேவலமாகப் பேசுகின்றனர். “ஆமையும் முயலும்’’ கதையைப் போல, சமூகநீதிக்கு இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழகம், இந்தச் செயல்பாட்டில் மெத்தனமும், மௌனமும் காட்டுவது கண்டு கைகொட்டிச் சிரிக்கும் நிலை வந்துள்ளது.

காவிரி உரிமையில் தமிழகத்திற்கு எதிர்நிலை; ‘நீட்’ தேர்வை அனுமதித்து மாணவர்களை வஞ்சித்தது; தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை ஆதரிப்பது என்று தொடர்ந்து அ.தி.மு.க அரசு செய்துவரும் துரோகச் செயல்களின் தொடர்ச்சியாய், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பிரச்சினையிலும் திராவிட கொள்கையையே காவு கொடுத்து, அடிமையாட்சி நடத்திக் கொண்டிருப்பது மக்களின் வெறுப்பையும் தாண்டி அவர்களின் கோபத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு உடன் கேரளாவைப் பின்பற்றி அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும். தவறினால், அ.தி.மு.க என்ற இயக்கத்தின் அழிவிற்கு அதுவே காரணமாகும் என்பதை எச்சரிக்கையாகவே கூறிக்கொள்கிறோம்.

தி.க. சிறை நிரப்பும் போராட்டம்: அ.தி.மு.க. எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்!

சமூகநீதி போராட்டக் களத்தில் திராவிடர் கழகம் மேற்கொண்ட எந்தவொரு முயற்சியும் வெற்றிபெறாமல் போனதில்லை. கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று எல்லோரும் ‘விடுதலை’யை ஒவ்வொரு நாளும் படித்து அதன்படி தங்கள் செயல்பாட்டை சீர்செய்து கொண்டவர்கள். அத்தடத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமி விலகிச் செல்வது அவரின் அரசியல் முடிவுக்கே வழிவகுக்கும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆணையிட அ.தி.மு.க அரசு தவறினால், அடுத்து தி.மு.க. அரசு அதை முதல் ஆணையாகவே நிறைவேற்றும்.

அ.தி.மு.க. அரசுக்கு வலிய வரும் வரலாற்றுப் பெருமையை அடைவதற்கு மாறாய் வரலாற்றுப் பழியைச் சுமக்கும் அவலத்திற்கு ஆளாவது அறிவார்ந்த, அறம் சார்ந்த அணுகுமுறையாகாது.

1991ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், அரசு சார்பில் திருச்சி அருகே வேத ஆகமக் கல்லூரி திறக்கப்பட்டு, அதில் சமூகநீதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இதில் பயிற்சி பெற்றவர்கள் இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்களில் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்டதை அவர்கள் வழியில் ஆட்சி செய்கிறோம் என்கிற தற்போதைய அதிமுக அரசு செயல்படுத்தாமல் இருப்பது அவருக்குச் செய்யும் துரோகம் அல்லவா? 69% இடஒதுக்கீடு தந்து வரலாற்றில் இடம் பிடித்த ஜெயலலிதா வழிவந்தவர்கள், கேரளா செய்த பின்னும் செய்யாது தயக்கம் காட்டலாமா? அவ்வாறு தயங்குவது கேலிக்குரியது, கேவலத்திற்குரியது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டாமா?

தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கெடு கொடுத்து, சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துவிட்டார்கள். அப்படியொரு போராட்டம் நடத்தித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை அ.தி.மு.க. அரசு உருவாக்குமானால், அது, அ.தி.மு.க. அத்தியாயத்தை முடித்து வைக்கும் செயலாகவே அமையும்.

கடவுள் கொள்கையைத் தவிர, பெரியாரின் மற்றக் கொள்கைகளை ஏற்காத எந்த அரசையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே, பெரியாரை பிழையாதீர்! ஏற்றுக்கொண்ட தலைவர்களின் கொள்கைகளுக்கு துரோகம் செய்யாதீர்! உடன் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி, கேவலம் சேராது, வரலாற்றுப் பெருமை சேரும்படி செயல்படுங்கள்! இதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம்! வேண்டுகோள், வேட்கை!

 – மஞ்சை வசந்தன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *