பெண்

அக்டோபர் 01-15

பூவிழி சைக்கிளை தள்ளியபடியே தோழிகளுடன் வந்து கொண்டிருந்தாள். கலகலவெனும் பேச்சும் சிரிப்பும் போவோரை திரும்பிப் பார்க்க வைத்தது.

பள்ளி  வெகுதூரம் இல்லையெனினும் சைக்கிளில் தான் செல்வாள். வீட்டின் செல்லப்பிள்ளை. ஊரிலேயே பெரிய குடும்பம். அம்மாவின் அழகு அடிப்படியே மகளிடம்.

வீட்டின் உள்ளே நுழையும் போதே ஏதோ சரியில்லை எனப்பட்டது. வாடம்மா என்று அழைக்கும் அப்பா மதியின் முகத்தில் கடுமை. அம்மாவின் கண்களிலே நீர் தளும்பி நின்றது. சதா வம்பிழுக்கும் தம்பி பார்த்தும் பாராமல் இருக்க அப்பாவென அழைத்தவாறே அருகில் போனாள்.

பளிரென்று ஒரு அறை. நிலைகுலைந்து போனாள் பூவிழி. அவள் அப்பா அடிப்பது இதுதான் முதல்முறை. “யாரவன்?’’ இடிபோல் ஒலித்தது அப்பாவின் குரல். அழுதுகொண்டே, “யாரப்பா’’ என்றாள். “கல்லூரியில் உன்னோடு ஒன்றாகச் சுற்றுபவன்’’ என்றார். “அப்படி யாரும் இல்லைப்பா’’ என்றாள்.

“பொய் சொல்லாதே’’ தம்பி அவன் நண்பன் சொன்னபோதுகூட நம்பவில்லை. இரண்டு நாட்களாக கவனிச்சிட்டுத்தான் வரான்.

சட்டென கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தம்பியைப் பார்த்தாள். “நீ என்னை வேவு பார்த்தாயா? என்ற கேள்வி அதிலே அவன் மவுனமாக தலைகுனிந்தான்.

“பதில் சொல்’’ அப்பாவின் குரல்.

“அறிவழகன்’’ மெதுவாகக் குரல் கொடுத்தாள்.

“என்ன ஜாதி தெரியுமா அவன்?’’

“காதல் ஜாதி பார்த்து வருவதில்லைப்பா’’

“ஜாதிமத பேதங்கள் – மூடநம்பிக்கைகள்

ஒழித்திடுவோம் – புதியதோர் உலகு செய்வோம்’’

என்று பாடிக்காட்டிய போதெல்லாம் கைதட்டி ரசித்தீர்கள் அப்பா. பெரியாரின் ஜாதியற்ற சமத்துவத்தைப் பேசியபொழுது தூக்கி வைத்து “கொஞ்சினீர்கள்’’ என்ற பூவிழியை கோவமாகப் பார்த்தார்.

“இந்த ஊரிலே நம் குடும்பத்தின் கவுரவம் தெரியுமா உனக்கு? ஊருக்கே பஞ்சாயத்து சொல்பவன் நான். என் வீட்டிலே இப்படியா? கொன்று விடுவேன் இருவரையும்’’ என்ற அப்பாவை சலனமின்றி பார்த்தாள் பூவிழி.

இரவு வெகுநேரம் மதி தூங்கவில்லை. மனைவி ராஜியை அழைத்தார். இந்த விஷத்தை சாப்பிட்டில் கலந்து மகளுக்குக் கொடுத்துவிடு. எனக்கு என் ஜாதி கவுரவம்தான் பெரிது. “வேணாங்க’’, காலில் விழுந்து கெஞ்சினால் ராஜி. மதி மனம் மாறவில்லை.

பொழுது விடிந்ததும் காபி டம்பளருடன் மதியருகே ராஜி “இந்தாங்க காபி”. மவுனமாக வாங்கிக் குடித்தார். நான் உங்களை ஒன்று கேட்கட்டுமா என்ற ராஜியை நிமிர்ந்து பார்த்தார். சொல் என்பதுபோல் இருந்தது.
“இப்ப நான் உங்களுக்குக் கொடுத்த காபியில் விஷம் கலந்து கொடுக்க எவ்வளவு நேரமாகும்’’ என்ற ராஜியை அதிர்ச்சியுடன் பார்த்தார். “பயப்படாதீங்க நான் எதுவும் கலக்கவில்லை’’.

“இதுவரை நான் உங்களை எதிர்த்துப் பேசியதில்லை. ஆனா, இன்னிக்கு பேசியே ஆகவேண்டிய கட்டாயம். நான் உங்க காபியில் விஷம் கலந்தேன்னு சொன்னதுமே வாழ்ந்து முடித்த நீங்களே சாவைக் கண்டு பயப்படுகிறீர்கள். பூவிழி வாழ வேண்டியவள், அவ அப்படி என்ன பெரிய தவறைச் செய்துவிட்டாள்? இன்னும் எத்தனை ஆண்டுகள் ஜாதியின் பெயரல் காதல் சாகவேண்டும்?

பெண்களை நம்பிதான் ஒவ்வொரு குடும்பமும் இருக்கு. ஆனால், பெண்களின் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் மதிப்பு கொடுக்க ஜாதியவாதிகள் எப்பவுமே தயராக இல்லை. ஜாதிப்பேரைச் சொல்லி இன்னும் எத்தனை பெண்களை உயிர்க்கொலை செய்யப் போகிறீர்கள். மனித சமுதாயம் வாழ்வதே இந்த பெண்களாலும்தான். ஆனால், பெண்கள் உயிருடன் வாழ்வது ஆண்களின் கையில் என்ற நிலை எப்பங்க மாறும்?

குடும்பத்தில் ஒரு பெண் நினைச்சா ஒரே நாளில் ஒட்டுமொத்த குடும்பத்தையே அழிக்க முடியும். நாங்க அதைச் செய்ய மாட்டோம். எல்லாரையும் வாழவைச்சுப் பார்க்கணும்னு நினைக்கிற பெண்களை ஏன் ஜாதிப் பேரால் அழிக்கணும்?

ஜாதி, மதம் தாண்டி வருவதுதாங்க காதல். உணர்வுபூர்வமானது. அதை ஜாதியத்தோட பார்த்தா அசிங்கமா, அருவெருப்பாத் தெரியும். அழகான உணர்வா உயிரா பாருங்க. அழகான வாழ்க்கையாத் தெரியும்’’ என்று ராஜி பேசி முடித்தபோது மதிக்கு, கன்னத்தில் அறைந்ததுபோல் இருந்தது. எதுவும் பேசவில்லை கொஞ்சநேரம்.

மகனை அழைத்து வீட்டிலிருந்து ஜாதித் தலைவர்களின் போட்டோவை அகற்றச் சொன்னார்.

வெளியே சென்ற மதி, திரும்பி வரும்போது அவர் கையில் பாரதிதாசனும், பெரியாரும் புகைப்படங்களாய்.

பூவிழியின் கண்களிலே நன்றி தெரிந்தது.

ராஜிக்கோ மதியின் கண்களிலே பாசத்துடன் மனிதம் தெரிந்தது.

– அன்புமொழி

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *