கடன் வாங்கிய பணத்தை வட்டியுடன் ஆனைமுத்து கொடுத்தாக வேண்டிய தீர்ப்பு!

ஆகஸ்ட் 16-30

“அய்யா, அம்மா இருவரும் மறைந்துவிட்ட நிலையில், அய்யா மற்றும் அம்மா போலவே என் வாழ்நாள் முழுவதும் என் சக்திக்கு இயன்ற அளவுக்கு உழைக்கவும், அவர்கள் செய்துவந்த உயிர்நாடிக் கொள்கையை இயன்ற அளவு பரப்பவும், மனிதத் தன்மையோடும் பண்போடும் உண்மையும் ஒழுக்கமும் உயர்வெனக் காட்டிய அவர்கள் வழியிலேயே நான் இயங்கி வந்தேன்; வருகிறேன்.

அம்மா அவர்கள் செயலாளராக இருந்த காலத்தில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திடம் கடன் வாங்கி அதற்கான ‘புரோ’ நோட்டை எழுதிக் கொடுத்தவர் திருச்சியைச் சார்ந்த ஆனைமுத்து அவர்கள். வாங்கிய கடனைக் கேட்டபோது, “லட்சிய வீரராக’’ மாறிய அவர், கடனைத் திருப்பித் தராத நிலையில் நிறுவனத்தின் ஆயுள் செயலாளர் என்ற முறையில் நான் திருச்சி சப்கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த திருச்சி சப்கோர்ட் தெளிவான தீர்ப்பை வழங்கியது. 23.02.1981ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கின் தீர்ப்பை ‘விடுதலை’யில் 28.04.1981 அன்று வெளியிட்டிருந்தோம். அதனை அப்படியே தருவது கழகத்தின் வளர்ச்சியில் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் என்ன என்ன என்பதையும், இயக்க வரலாற்றில் நான் கடந்து வந்த பாதைகளையும் தெளிவாக அறிந்திட  உதவும் என்பதால் அந்தத் தீர்ப்பை அப்படியே இங்கு தருகிறேன். வழக்கை விசாரித்த திருச்சி சப்கோர்ட் தெளிவான தீர்ப்பை வழங்கிவிட்டது. தீர்ப்பைப் படியுங்கள்! சுயநல கபட வேடதாரிகளை அடையாளம் காணுங்கள்!! கடனைத் திருப்பி வசூலிக்க எனக்கு முழு உரிமை உண்டு’’ என்ற அந்தத் தீர்ப்பு இதோ உங்கள் பார்வைக்கு,

முன்னிலை: திருமதி ஏ.சுப்புலட்சுமி பி.ஏ.பி.எல்., பிரின்ஸ்பல் சப்ஜட்ஜ் (இவர் பின்னாளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனார்.)

திங்கட்கிழமை 23ஆம் தேதி பிப்ரவரி மாதம் 1981ஆம் வருடம் அசல் வழக்கு எண் 509/79.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பாக அதன் செயலாளர் திரு. கி.வீரமணி.

– வாதி

ஆனைமுத்து                – பிரதிவாதி

1981ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 4, 5, 6, 9, 11, 14 தேதிகளில் வாதியின் வழக்கறிஞர் திரு.ஜி.பாலசுந்தரம் மற்றும் பிரதிவாதியின் வழக்கறிஞர் திரு.ஆர்.சுப்ரமணிய அய்யர் இவர்கள் முன்னிலையில் என்னிடம் விசாரணைக்கு வந்தும், இன்றுவரை பரிசீலனையில் இருந்தும் வந்த இந்த வழக்கில் நீதிமன்றம் கீழ்க்கண்ட தீர்ப்பை வழங்கியது.

தீர்ப்பு

வழக்கு ரூ.15150அய் திரும்பப்பெற வேண்டி போடப்பட்டது.

2.    வாதியின் முறையீட்டில் குறிப்பிடப் பட்டவையாவன: 5.10.1973 அன்று பிரதிவாதி ரொக்கமாக பெற்றுக்கொண்ட வகைக்கு, ஈ.வெ.ரா.மணியம்மை அவர்களை அன்றைய செயலாளராகக் கொண்ட வாதி நிறுவனத்திற்கு ரூ.10,000 மற்றும் அதற்கான வருட வட்டி 12 சதவீதமும் சேர்த்து திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டு ஒரு பிராமிசரி நோட் எழுதிக் கொடுத்திருக்கிறார். மேற்கண்ட செயலாளர் இறந்துவிட்டதால் இன்றைய செயலாளர் கி.வீரமணி அவர்கள், வாதி நிறுவனத்திற்காக இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். 5.7.1976 அன்று பிரதிவாதி ரூ.1,700 செலுத்தி, தனது மீதிக்  கடனை ஒப்புக்கொண்டு பிராமிசரி நோட்டின் பின்புறத்தில் குறிப்பும் எழுதியுள்ளார். பலமுறை வேண்டியும் பிரதிவாதி அப்பணத்தைச் செலுத்தவில்லை. கடன் நிவாரணச் சட்டத்தின் எந்தப் பிரிவிற்கும் அவர் அருகதையற்றவர். ஆகவே ரூ.15,150அய்த் திரும்பப் பெறவேண்டி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனைமுத்து செய்த வாதம்

3. பிரதிவாதி தாக்கல் செய்த மறுப்புரையில் கீழ்க்கண்டவாறு வாதிடுகிறார்:-_

இவ்வழக்கு தொடர்ந்து ஏற்று நடத்தத்  தகுதியற்றது. திரு.கி.வீரமணி அவர்கள் வாதி நிறுவனத்தின் சார்பாளராயிருக்கத் தகுதி உள்ளவர் என்பதையும் பிரதிவாதி மறுக்கிறார். பிராமிசரி நோட் எழுதிக் கொடுக்கப்பட்டது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், பிரதிவாதி கடன் நிவாரணச் சட்டத்தின் சலுகைகளுக்குத் தகுதியுள்ளவர்.

4. பிரதிவாதியால் தாக்கல் செய்யப்பட்ட துணை மறுப்புரையில் அவர் வாதிடுவது வருமாறு: “1960ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச்சட்டம்’’, “சங்கங்கள் பதிவுச் சட்டம்
27/1975’’ன் மூலம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. வாதி நிறுவனம் புதிய சட்டத்தின்படி பதிவு செய்யப்படவில்லை. பழைய சட்டத்தின்படியும் முறையான செயலாளர் தேர்வு நடைபெறவில்லை. திரு.வீரமணி அவர்களை செயலாளராக திருமதி மணியம்மை அவர்கள் நியமித்த அன்று மணியம்மை அவர்கள் அந்த நியமனப் பத்திரத்தை ( (EX-A-2) ) எழுதிக் கொடுக்கும்படியான நல்ல மனநிலையில் இல்லை. புதிய சட்டத்தின்படி வாதி நிறுவனம் பதிவு செய்யாதவரை நீதிமன்றத்தின் முன்பு சட்டப்படியான ஒரு வாதி இல்லை. அதன்படி போடப்பட்ட இவ்வழக்கும் நிற்காது. திருத்தத்தைப் பொறுத்தவரையில் புதிய கட்சிக்காரரை சேர்த்ததற்கு ஒப்பாகும். அதனால் அவர் எப்போது வழக்கில் கட்சிக்காரராக சேர்க்கப்பட்டாரோ அன்றுதான் புதிய வாதியின் வழக்கே போடப்பட்டதாக கருதப்படும். அதனால் இவ்வழக்கு காலங்கடந்து போடப்பட்டதாகும்.

5. மேற்கண்ட வாதங்களின் அடிப்படையில் எனக்கு முன் பதவியிலிருந்தவர் விசாரணைக்காக கீழ்க்காணும் முக்கிய வினாக்களை வைத்திருக்கிறார்:

1. வாதி நிறுவனம் (பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்) முறையான பிரதிநிதித்துவம் பெற்றுள்ளதா?

2. பிரதிவாதி தனது மறுப்புரையில் கோரியபடி கடன் நிவாரணச் சட்டத்தின் சலுகைகளைப் பெற தகுதியுடையவர்தானா?

3. வாதி வேறு எவ்வகையில் நிவாரணத்திற்கு (ஸிமீறீவீமீயீ) தகுதியுடையவர்?

4. 9.2.1981 அன்று வகுக்கப்பட்ட கூடுதல் வினா:_

இவ்வழக்கு காலக்கெடு கடந்து போடப்பட்டதா?

சட்டப்படி வீரமணிக்கு உரிமை உண்டு

5. வாதியால் ரூ.15,150அய் திரும்பப் பெற வேண்டி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. திரு.கி.வீரமணியைச் செயலாளராகக் கொண்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்தான் இவ்வழக்கில் வாதி. முன்பு திருமதி ஈ.வெ.ரா.மணியம்மை அவர்கள் செயலாளராக இருந்தார். அவரது காலத்தில்தான் இவ்வழக்கில் உள்ள பிராமிசரி நோட் எழுதப்பட்டிருக்கிறது. அவர் இப்போது உயிரோடு இல்லாததால் தற்போதைய செயலாளர் அந்நிறுவனத்தின் சார்பாக இவ்வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். இவ்வழக்கு தொடர்ந்து ஏற்று நடத்த தகுதியற்றது என்றும், திரு.கி.வீரமணி வாதி நிறுவனத்தின் செயலாளர் அல்ல என்றும், அதனால் அவர் அந்நிறுவனத்தின் பிரதிநிதியாக இருக்கத் தகுதியற்றவர் என்றும், பிரதிவாதி வாதிடுகிறார். வாதியின் மூன்று சாட்சிகள் வாதி நிறுவனத்தின் தற்போதைய செயலாளர் திரு.கி.வீரமணி அவர்கள்தான் என்றும், அவர் முறைப்படி நியமிக்கப்பட்டு நிறுவனத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றும் அவர் இவ்வழக்கை தாக்கல் செய்யத் தகுதியுடையவர் என்றும் மெய்ப்பிக்கின்றன. நிறுவனத்தின் முன்னாள் செயலாளராக திருமதி மணியம்மை அவர்கள் அவருக்கு அடுத்த வாரிசாக நிறுவனத்தின் ஆயுள் உறுப்பினர்களிலிருந்து யாரையும் நியமிக்க அதிகாரம் பெற்றிருந்தார் என்பதை மெய்ப்பிக்கின்றன. 21ஆவது விதியில் காணப்படும், “As the case may be” என்ற வாசகமே மணியம்மை அவர்கள் தனக்குப் பின்னர் வாரிசாக ஆயுள் உறுப்பினர்களில் யாராவது ஒருவரை நியமிப்பதற்கு அதிகாரம் பெற்றிருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது.

விதி 21இல் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையிலேயே நியமனப் பத்திரம் (EX-A-2) மூலம் தற்போதைய செயலாளர் திரு.வீரமணி அவர்களை நியமித்திருக்கிறார். அசல் நியமனப் பத்திரம் மணியம்மை அவர்களால் எழுதப்பட்டதாகவும், அதை அவர் இந்தியன் ஓவர்சீஸ் பாங்கில் பாதுகாப்பாக வைத்ததாகவும், அது பின்னர் பாங்கிலிருந்து வாங்கப்பட்டு 18.3.1978 அன்று கமிட்டி உறுப்பினர்களிடம் தரப்பட்டு, அவர்கள் முன்னிலையிலேயே உறை பிரிக்கப்பட்டு அனைவராலும் சரி பார்க்கப்பட்டதாகவும், வாதியின் 1ஆவது சாட்சியம் கூறுகிறது. வாதியின் 1ஆவது சாட்சி நியமனப்பத்திரத்தில் (EX-A-2) மணியம்மை கையெழுத்திட்டார் என்பதையும் அப்பத்திரத்தில் சாட்சிக் கையொப்ப மிட்டவர்களை தனக்குத் தெரியும் என்றும் மிகத் தெளிவாக தனது சாட்சியத்தில் கூறியிருக்கிறார்.

6. வாதியின் 2ஆவது, 3ஆவது (தஞ்சை கா.மா.குப்புசாமி, பொத்தனூர் க.சண்முகம்) சாட்சிகளும் நியமனப் பத்திரத்தைப் (EX-A-2) பற்றிக் கூறியிருக்கிறார்கள். வாதியின் 2ஆவது சாட்சி நியமனப் பத்திரத்தை திருமதி மணியம்மை அவர்களே எழுதி கையெழுத்திட்டதாகவும் சாட்சிகள் அதில் கையொப்பமிட்டதாகவும் மேலும் ஏழு சாட்சிகள் அப்போது இருந்தார்கள் என்றும் தனது சாட்சியத்தில் கூறியிருக்கிறார். அப்பத்திரம் எழுதும்போது திருமதி மணியம்மை அவர்கள் நல்ல மனநிலையில்தான் இருந்தார் என்றும், வாதியின் 2ஆவது சாட்சி கூறியிருக்கிறார். அப்பத்திரம் எழுதும்போது தானும் உடன் இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். அப்பத்திரத்தில் வாதியின் 2ஆவது சாட்சியும் சாட்சிக் கையொப்ப மிட்டிருக்கிறார். அப்பத்திரத்தை எழுதும்போது மணியம்மை அவர்கள் ஆரோக்கியமான நல்ல மனநிலையில்தான் இருந்திருக்கிறார் என்பதை வாதியின் 2ஆவது சாட்சியம் தெளிவாக நிரூபிக்கிறது. வாதியின் 3ஆவது சாட்சியும் நியமனப் பத்திரத்தில் சாட்சிக் கையொப்பமிட்டவராகும். அவரும் மணியம்மை அவர்கள்தான் அப்பத்திரத்தை எழுதி கையழுத்திட்ட உண்மையைக் கூறியிருக்கிறார். ஆதலால் மணியம்மை அவர்கள் ஆரோக்கியமான நல்ல மனநிலையில் உள்ளபோது அப்பத்திரத்தை எழுதியிருக்கிறார் என்பதை வாதியின் 2ஆவது, 3ஆவது, சாட்சியங்கள் போதுமான அளவு நிரூபித்திருக்கின்றன. பிரதிவாதியின் (ஆனைமுத்துவின்) வழக்கறிஞர் நியமனப் பத்திரம் எழுதப்பட்ட நேரத்தில் மணியம்மை அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தார் என்றும் அவர் ஆரோக்கியமான மனநிலையில் இல்லை எனவும் குறிப்பிட்டார். பிரதிவாதியின் 1ஆவது சாட்சி நியமனப் பத்திரம் எழுதப்பட்ட தேதியில் மணியம்மை அவர்கள் உடல்நலமின்றி இருந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்ததாகவும், அந்நேரத்தில் நினைவிழந்த நிலையில் இருந்ததால் பிராணவாயு செலுத்தப்பட்டதாகவும் அந்நேரத்தில் பத்திரம் எழுதக்கூடிய நிலையில் மணியம்மை அவர்கள் இல்லை என்றும் தனது சாட்சியத்தில் கூறியிருக்கிறார். ஆனால் வாதியின் 2ஆவது, 3ஆவது, சாட்சிகள் அப்பத்திரம் எழுதும்போது தாம் உடனிருந்ததையும் மணியம்மை அவர்கள் நல்ல மனநிலையில் இருந்து அதை எழுதி, பாங்கில்பாதுகாப்பாக வைத்ததையும் தங்களது சாட்சியங்களில் தெளிவாக நிரூபித்திருக்கிறார்கள்.

7. EX B-1 முதல் B-5 வரையிலான ஆதாரச் சான்றுகளின் மீதுதான் அதிக நம்பிக்கை வைக்கப்பட்டு பிரதிவாதி மணியம்மை அவர்கள் எந்தப் பத்திரமும் எழுதக் கூடிய நிலையில் இல்லை என்றும் அதனால் அப்பத்திரம் (EX-A-2) க்கு முக்கியத்துவமே கொடுக்கக் கூடாது என்று மிக முனைப்போடு வாதாடுகிறார்.

EX-B-1இல் மணியம்மை அவர்கள் உடல்நலம் இல்லாத காரணத்தால் 1.10.1977அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. 31.1.1978 அன்று மணியம்மை அவர்கள் உடல்நலம் தேறி இல்லம் திரும்பியதாகவும் அந்த EX-பி_1இல் கூறப்பட்டிருக்கிறது. EX A-2இன் அசல் 2.1.1978 அன்று எழுதப்பட்டிருக்கிறது. EX பி_1இல்கூட (EX-A-2) பற்றிய வாசகங்கள் இருக்கின்றன. 2.1.1978 அன்று மணியம்மை அவர்கள் அப்பத்திரத்தை எழுதி இந்தியன் ஓவர்சீஸ் பாங்கியில் பாதுகாப்பாக வைத்ததாகவும் வாதியின் 2ஆவது சாட்சியால் அந்த உறை திரும்பப் பெறப்பட்டு படித்துக் காட்டப்பட்டதாகவும் EX பி_1இல் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. மணியம்மை அவர்கள் அந்நேரத்தில் எந்த ஒரு பத்திரமும் எழுத முடியாத அளவுக்கு உடல்நலம் கெட்டு இருந்தார் என்ற முடிவுக்கு EX-பி_1 மூலம் வரமுடியாது.

நிரூபிக்கவில்லை

ஆதாரச் சான்றுகள் EX பி_4, பி_5கூட மணியம்மை அவர்கள் அந்நேரத்தில் பத்திரம் எழுதமுடியாத அளவுக்கு மிக மோசமான நிலையில் இருந்தார் என்பதைக் காட்டுவதாக இல்லை. மணியம்மை அவர்கள் சிறிது வலி ஏற்பட்டு, அது சிறிது நேரம் மட்டுமே இருந்து பின்னர் அவர்கள் ஓய்வெடுத்து அமைதியாக தூங்கினார்கள் என்று EX B-4-லும் EX B-5லும் கூறப்பட்டிருக்கிறது. ஆதலால் EX B-4-ம்

EX B-5-ம் கூட பிரதிவாதியின் வழக்குக்கு ஆதாரமாக இல்லை. நியமனப் பத்திரம் (EX-A-2)  எழுதும்போது மணியம்மை அவர்கள் நினைவில்லாத நிலையில் இருந்து, பத்திரமே எழுத முடியாத நிலையில் இருந்ததாக பிரதிவாதி தாக்கல் செய்த ஆதாரப் பத்திரங்கள் எவையும் நிரூபிக்கவில்லை. மணியம்மை அவர்கள் நல்ல மனநிலையில் இருந்து நியமனப் பத்திரம் (EX-A-2) வை எழுதி கையெழுத் திட்டார்கள் என்பதையும், சாட்சிகள் அதில் கையொப்பமிட்டனர் என்பதையும் மணியம்மை அவர்கள் அப்பத்திரத்தை வங்கியில் பாதுகாப்பாக வைத்தார்கள் என்பதையும் வாதியின் சாட்சியங்கள் தெளிவாக நிரூபிக்கின்றன.

அந்த நியமனப் பத்திரம் வாதியின் 2ஆவது சாட்சியால் கொண்டுவரப்பட்டு அந்த உறை பிரிக்கப்பட்டு படித்துக் காட்டப்பட்டதையும் அதை உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர் என்பதையும் வாதியின் 3ஆவது சாட்சி தனது சாட்சியத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். சான்றுப் பத்திரங்களையும் சாட்சியங்களையும் ஆய்ந்து பார்க்குமிடத்து நியமனப் பத்திரம் மணியம்மை அவர்களால் நல்ல மனநிலையில் இருக்கும்போதுதான் முறையாக எழுதப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வர எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அந்நேரத்தில் மணியம்மை அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள் என்பது பதிவேடுகளிலிருந்து தெரிய வருகிறது. மணியம்மை அவர்கள் மருத்துவமனையில் இருக்கும்போது அந்த நியமனப் பத்திரம்  (EX-A-2) எழுதப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அப்பத்திரம் முறைப்படி எழுதவில்லை என்றும் மணியம்மை அவர்கள் நல்ல மனநிலையில் இருக்கும்போது எழுதப்படவில்லை என்றும் கூறிட முடியாது. அப்பத்திரம் இரண்டு சாட்சியங்களால் கையெழுத்திடப்பட்டது. அச்சாட்சிகள் இங்கே சாட்சியங்களாக (றிஷ்s 2ம் 3ம்) விசாரிக்கப்பட்டது. மணியம்மை அவர்கள் அவ்வுறையை இந்தியன் ஓவர்சீஸ் பாங்கில் பாதுகாப்பாக வைத்தது போன்ற உண்மைகள் மணியம்மை அவர்கள் நல்ல மனநிலையில் இருந்தார்கள் என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன. இக்காரணங்களால் நியமனப் பத்திரம் (EX-A-2) உண்மையான செல்லத்தக்க பத்திரம் என்ற முடிவுக்கு வருகிறேன்.

10. தற்போதைய செயலாளர் திரு.கி.வீரமணி அவர்கள், திருமதி ஈ.வெ.ரா.மணியம்மை அவர்களால் நியமனப் பத்திரத்தின் மூலம் நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த நியமனப் பத்திரம் மற்ற கமிட்டி உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு அதன் பின்னரும் திரு.கி.வீரமணி அவர்களை நிறுவனத்தின் செயலாளராக நியமிப்பதாக கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் வாதியின் சாட்சியங்கள் மூலம் தெரியவருகிறது.

வீரமணி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

கமிட்டி உறுப்பினர்களால் நிறைவேற்றப் பட்ட அத்தீர்மானம் கூட்ட நடவடிக்கைக் குறிப்பேட்டிலும் (Minutes Book) எழுதப்பட்டு வாதியின் மூன்றாவது சாட்சியால் சாட்சிக் கையொப்பமிடப்பட்டிருக்கிறது. வாதியின் முதல் சாட்சிதான் நியமனப் பத்திரத்தின் மூலம் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த போதும்கூட, கமிட்டி உறுப்பினர்களாலும் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக தனது சாட்சியத்தில் கூறியிருக்கிறார். வாதியின் 2ஆவது சாட்சியும் அந்த உண்மையை எடுத்துக் கூறியிருக்கிறார். தற்போதைய செயலாளரை தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி யதையும் அதை கூட்ட நடவடிக்கைக் குறிப்பேட்டில் எழுதியதையும் வாதியின் சாட்சிகள் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். கூட்ட நடவடிக்கைக் குறிப்பேட்டின் அசலைத் தாக்கல் செய்யாததற்கான காரணத்தையும் வாதியின் முதல் சாட்சி கூறியிருக்கிறார். அது காணாமல் போய்விட்டதாகவும், அதற்கான புகார் (EX-A-4) கொடுத்திருப்பதை அவர் கூறியிருக்கிறார். தற்போதைய செயலாளர் முன்னாள் செயலாளரால் நியமிக்கப் பட்டதையும், உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டதையும், சாட்சியங்களும் சான்றுப் பத்திரங்களும் தெளிவாக நிரூபிக்கின்றன. இக்காரணங்களால் வாதியின் முதல் சாட்சி EX A-1ன் விதி 21இன்படிதான் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் என்று முடிவு செய்கிறேன். ஆதலால் வாதியின் முதல் சாட்சி இவ்வழக்கைத் தாக்கல் செய்ய அதிகாரம் உள்ளவர் என்றும், இவ்வழக்கு தொடர்ந்து ஏற்று நடத்தத் தகுதியுள்ளது என்றும் முடிவு செய்கிறேன்.

11. வாதியின் நிறுவனம் பழைய பதிவுச் சட்டத்தின்படிதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும், புதிய பதிவுச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படாததால் இவ்வழக்கு தொடர்ந்து ஏற்று நடந்தத் தகுதியற்றது என்றும் பிரதிவாதியின் வழக்கறிஞர் வாதிட்டார். EX-A-1அய் ஆய்ந்து பார்க்குமிடத்து இந்நிறுவனம் பழைய பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்திருப்பதை நான் காண்கிறேன். புதிய சட்டத்தின் 53_ஆவது பிரிவு “நிறுவனங்கள் பதிவுச் சட்டம் 1960இன் கீழோ அல்லது திருவாங்கூர்_கொச்சி இலக்கிய விஞ்ஞான மற்றும் தரும நிறுவனங்கள் பதிவுச் சட்டம் 1955 உள்ளிட்ட மாற்றியமைக்கப்பட்ட பிரதேசங்களில் முன்பு நடைமுறையில் இருந்த இதுபோன்ற வேறு எந்தச் சட்டத்தின் கீழோ பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாக வே கருதப்படுவதோடு அந்நிறுவனத்தின் விதிமுறைகள் இச்சட்டத்தின் எவ்விதிகளுக்கும் முரண்பாடில்லாது இருக்குமானால் அவை மாற்றியமைக்கும் வரை அல்லது நீக்கும் வரை நீடிக்கும்’’ என்று கூறுகிறது.

பழைய பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகவே கருதப்படும் என்று மேற்கண்ட பிரிவு தெளிவாகக் கூறுகிறது. ஆதலால் வாதி நிறுவனம் புதிய சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது என்றும், இவ்வழக்கு தொடர்ந்து ஏற்று நடத்தத் தகுதியுள்ளதே என்றும் நான் முடிவு செய்கிறேன். தமிழ்நாடு நிறுவனங்கள் பதிவுச் சட்டம் 1975இன் 20ஆவது பிரிவு, “பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் சொத்து பற்றி அந்நிறுவனத்தின் விதிகள் அதிகாரம் அளிக்கும் ஒரு கமிட்டியோ அல்லது அதிகாரியோ வழக்கு தொடரலாம் அல்லது எதிர் வழக்காடலாம்’’ என்று கூறுகிறது. வாதியின் முதல் சாட்சி வாதி நிறுவனத்தின் செயலாளராக சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றும் அதனால் இவ்வழக்கைத் தொடர அவருக்கு முறையான உரிமை உள்ளது என்றும் நான் ஏற்கனவே எனது முடிவைத் தெரிவித்திருக்கிறேன்.

பிரதிவாதியின் வழக்கறிஞர் 1975 மி.விலியி பக்கம் 297இல் காணப்படும் (கல்வி நிறுவனம் திருநெல்வேலி சார்பாக அதன் பொருளாளர் என்.சுப்ரமணியன் _எதிர் _மதுரைப் பல்கலைக்கழகம் சார்பாக அதன் பதிவாளர், பல்கலைக் கட்டிடம், மதுரை_21, மற்றும் சிலர்) என்ற வழக்கை மேற்கோள் காட்டினார். அதில், “ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அது சட்டப்பூர்வமான ஒரு நிறுவனமாகி விடுகிறது என்றும், அச்சட்டபூர்வமான நிறுவனம் அதன் உரிமைகளைக் கொண்டே அதுவே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அதற்காக அது யாரால் பிரதிநித்துவம் பெற்றிருக்கிறது என்பதை அதன் ஆட்சிக் குழுவே முடிவு செய்ய வேண்டும்’’ என்றும் கூறப்பட்டிருக்கிறது. வாதியின் முதல் சாட்சியின் நியமனம் ஆட்சிக்குழுவால் முடிவு செய்யப்படவில்லை என்றும் அதனால் அந்த நியமனம் செல்லாது என்றும் அவர் வாதிட்டார். சான்றுகளை ஆராய்ந்து பார்க்குமிடத்து வாதியின் முதல் சாட்சி EX A-1இன் விதிகளின்படியே சரியான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று முடிவு செய்கிறேன். EX A-1இன் விதியின்படி வாதியின் முதல் சாட்சி முன்னாள் செயலாளரால் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதோடு கமிட்டி உறுப்பினர்களாலும் அதன் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவ்வித காரணங்களால் வாதியின் முதல் சாட்சி EX-A-1இன் விதிகளின்படி வாதி
நிறுவனத்தின் செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார் என்ற முடிவுக்கு வர எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. மேற்கண்ட காரணங்களால் வாதி நிறுவனம் முறையாக பிரதிநிதித்துவம் பெறப்பட்டிருக்கிறது என்றும் வாதிக்கு இவ்வழக்கைத் தாக்கல் செய்ய தகுதியுள்ளது என்றும் தீர்மானிக்கிறேன். நான் இம்முக்கிய வினாவில் வாதிக்கு சாதகமாகப் பதில் அளிக்கிறேன்.

வாங்கிய பணத்தை ஆனைமுத்து கொடுக்க வேண்டும்

12. முக்கிய வினா 2:- பிரதிவாதியால் வாதி நிறுவனத்திற்கு எழுதித் தரப்பட்ட புரோநோட்டை (EX A-6) ஆதாரமாகக் கொண்டு வாதி இவ்வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். புரோநோட் எழுதிக் கொடுத்தது பற்றி எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. பிரதிவாதி அப்பணத்தைத் தரக் கடமைப் பட்டவர்தான் என்பதிலும் கருத்து வேறுபாடு இல்லை. ஆதலால் இவ்வழக்கில் கோரிய பணத்தை பிரதிவாதி தரக் கடமைப்பட்டவர் என்று நான் முடிவு செய்கிறேன்; ஆனால் பிரதிவாதி கடன் நிவாரணச் சட்டத்தின் சலுகைகளைப் பெற உரிமையுள்ளவர் என வாதிடுகிறார். பிரதிவாதி பாவேந்தர் அச்சகம் நடத்துவதாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. பிரதிவாதி தொழில் வரி கட்டுவதாகவும் வாதியின் முதல் சாட்சி தனது சாட்சியத்தில் கூறியிருக்கிறார். பிரதிவாதியின் முதல் சாட்சியும் கடன் நிவாரணச் சட்டத்தின் சலுகைகளுக்கு தாம் உரியவர் என்று தனது சாட்சியத்தில் கூறவில்லை. பிரதிவாதி கடன் நிவாரணச் சட்டத்தின் விதிகளின்படியான ஒரு கடனாளி இல்லை என்றும், அதனால் கடன் நிவாரணச் சட்டத்தின் சலுகைகளுக்கு அவர் உரியவர் அல்ல என்றும், வாதியின் முதல் சாட்சி தனது சாட்சியத்தில் தெளிவாக நிரூபித்திருக்கிறார். நான் இவ்வினாவில் வாதிக்கு சாதகமாகவே பதில் அளிக்கிறேன்.

கற்பனையின் உச்ச எல்லை

13. கூடுதல் முக்கிய வினா_1: இவ்வழக்கு காலாவதியானது என்பது பிரதிவாதியின் வாதமாகும். முதலில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பாக அதன் செயலாளர் திரு.கி.வீரமணி அவர்களால் பிராது தாக்கல் செய்யப்பட்டது. இப்போது பிராதில், “பெரியார்’’ என்ற சொல்லுக்கு முன்னர் “The Periyar Self Respect Propaganda Institution Represented by its Secretary Thiru K.Veeramani” என்பதாகும். இத்திருத்தம் 9-.2.1981இல் செய்யப்பட்டதால் இவ்வழக்கு காலாவதியானது என்று பிரதிவாதியின் வழக்கறிஞர் குறிப்பிடுகிறார். “The” என்ற சொல்லை சேர்த்ததின் மூலம் உள்ள இத்திருத்தம் வெறும் சம்பிரதாயமான ஒரு திருத்தமாகும். வழக்கின் தன்மையையோ, இயல்பையோ அது மாற்றிவிடவில்லை. மேலும் பின்னர் செய்யப்பட்ட அத்திருத்தம் வழக்கு தாக்கல் செய்த தேதிக்கே சென்றுவிடும். அதனால் இத்திருத்தத்தால் வழக்கு காலாவதியாகி விட்டது என்று எவ்விதக் கற்பனையின் உச்ச எல்லையிலும் இருந்து கூறிட முடியாது. பிரதிவாதியின் வாதம் முழுமையும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. அதனால் இவ்வழக்கு காலாவதியாகி விடவில்லை என்று தீர்மானிக்கிறேன். நான் பிரதிவாதிக்கு எதிராக இவ்வினாவிற்கு பதிலளிக்கிறேன்.

செலவுத் தொகையை தரவேண்டும்

14. முக்கிய வினா_3: முடிவில் வழக்கு கோரியபடி செலவுத் தொகையோடு தீர்ப்பளிக்கப்படுகிறது.

சுருக்கெழுத்தாளரிடம் கூறப்பட்டு, அவரால் எழுதப்பட்டு, திருத்தி, நீதிமன்றத்தில் 1981 பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

-_(கையொப்பம்) ஏ.சுப்புலட்சுமி பிரின்ஸ்பல் சப்ஜட்ஜ்

    வாதியின் பத்திரச் சான்றுகள்:

-_(கையொப்பம்) ஏ.சுப்புலட்சுமி பிரின்ஸ்பல் சப்ஜட்ஜ்

A-1-            பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் விதிமுறைகள் _ குறிப்புகள்.

A-2-     2-1-1978     மணியம்மை       அவர்களால் வீரமணி அவர்கள் நியமனம் செய்யப்பட்ட பத்திரத்தின் புகைப்பட நகல்.

A-3-    18-3-1978    வாதி நிறுவனத்தின் கூட்ட நடவடிக்கைக் குறிப்பின் புகைப்பட நகல்.

A-4-    5-7-1979        சென்னை (குற்றங்கள்) காவல்துறை துணை ஆய்வாளருக்கு வீரமணி அவர்கள் அனுப்பிய புகாரின் அத்தாட்சி நியமனம் செய்யப்பட்டதின் அத்தாட்சி பெற்ற நகல்.

A-5-    2-1-1978        மணியம்மை அவர்களால் நியமனம் செய்யப்பட்டதின் அத்தாட்சி பெற்ற நகல்.

A-6-    5-10-1973    வாதி நிறுவனத்திற்கு பிரதிவாதி ரூ.10,000க்கு எழுதிக் கொடுத்த பிராமிசரி நோட்.

பிரதிவாதியின் பத்திரச் சான்றுகள்

B1-            தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை வெளியிட்ட மலர்.

B2-    20-3-1978    விடுதலையில் வெளியிட்ட  (EX-A-2)  இன் நகல்.

B3-    2-5-1979        பெரியார் சொத்துக்கள் பராமரிப்பு பற்றி விடுதலையில் வெளியான அறிக்கை நகல்.

B4-    5-1-1978        மணியம்மை அவர்களின் உடல்நிலை குறித்து விடுதலையில் வெளியான அறிக்கை நகல்.

B5-    8-1-1978        மணியம்மை அவர்களின் உடல்நிலை குறித்து விடுதலையில் வெளியான அறிக்கை நகல்.

வாதியின் சாட்சிகள்:

PW1-    திரு. வீரமணி
PW2-    திரு. குப்புசாமி
PW3-    திரு. சண்முகம்

பிரதிவாதியின் சாட்சி:

DW1-    திரு. ஆனைமுத்து (பிரதிவாதி)
(நினைவுகள் நீளும்…)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *