கவனச் சிதறல்களை அனுமதிக்கக் கூடாது
நாம் எந்த ஒன்றையும் செம்மையாய், இழப்பின்றிச் செய்ய வேண்டுமானால் கவனம் சிதறாமல் வழி செய்ய வேண்டும்.
படிக்கின்ற குழந்தைக்குத் தொலைக்காட்சியும், வீட்டில் உள்ள நிகழ்வுகளும் கவனச் சிதறலை ஏற்படுத்தும். எனவே, அவர்களுக்குக் கவனச் சிதறலில்லா தனியறை வேண்டும்.
வாகனம் ஓட்டுபவர்களுக்கு செல்பேசி, அடுத்தவர் பேச்சு வேறு நினைவுகள் போன்ற கவனச் சிதறல் கூடாது.
அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு அறவே கவனச் சிதறல் கூடாது.
ஆளகின்றவர்களுக்கு அலங்காரம், ஆடம்பரம், விளம்பரம், புகழ்ச்சி, சுயநலம், சுகபோகம் என்ற கவனச் சிதறில்கள் வந்தால் நாடே கேடால் அழியும்.
வாக்களிக்கின்றவர்களுக்குச் சாதி, மதம், பணம், வேண்டியவர் என்று சிந்தனைச் சிதறினால் நல்லாட்சி கிடைக்காது. நாட்டில் அமைதி கெடும்.
எனவே, கவனச் சிதறல் என்பது நம் கவனம் சிதறாமல் இருப்பது மட்டுமல்ல, நம் இலக்கிலிருந்தும் விலகாமை ஆகும்.
வாழ்வாதாரங்களை அழிக்கக் கூடாது
உலகில் இயற்கையில் அமைந்தவற்றைக் கொண்டு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக, மனிதன் இயற்கையை ஆளும் திறன் பெற்று இயற்கையைப் பயன்படுத்தி காலம் காலமாக வளர்ச்சி பெற்று வருகிறான். அது மகிழ்ச்சிக்குரியதுதான் என்றாலும், இயற்கையைக் கெடுத்து, வாழ்வாதாரங்களை அழித்து அந்த வளர்ச்சி பெறப்படுமாயின் அது உலகை அழித்தொழிக்கும் முயற்சியாக அமையும்.
அறிவியல் ஆக்கத்திற்குப் பயன்பட வேண்டும். அதை அழிவிற்குப் பயன்படுத்தக் கூடாது. அறிவியல் கூர்மையான கத்தியைப் போன்றது. கத்தியால் பழத்தையும் அறுக்கலாம்; கழுத்தையும் அறுக்கலாம். அப்படித்தான் அறிவியலும். அதனால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். அணுசக்தியை வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்; உலகை ஒரு நொடியில் அழிக்கவும் பயன்படுத்தலாம். எனவே, பொறுப்புடனும், மனிதநேயத்துடனும், உலக நல நோக்கிலும் அறிவியலைக் கையாள வேண்டும்.
அதுபோல் உலகில் வாழ்வாதாரங்களை என்றென்றைக்கும் அழிக்காமல், வாழ்வின் தேவையை நிறைவு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, உணவுக்கு அடிப்படை விளைநிலம்.
வாழ்வதற்குரிய இடம் உயர்நிலம் (மேட்டு நிலம்). விளைநிலத்தை ஆதாரமாகக் கொண்டு, வார்விடத்தில்வாழ வேண்டும். விளைநிலத்திற்கு ஆதாரம் நீர் நிலைகள். ஆக, விளைநிலமும் நீர்நிலையும் வாழ்க்கை ஆதாரங்கள். இந்த ஆதாரங்களை என்றும் அழிக்காமல், ஆக்கிரமிக்காமல் வாழ்விடங்களை அமைக்க வேண்டும்.
ஆனால், இன்று விளை நிலங்களும், நீர்நிலைகளும் வாழ்விடங்களாகக்கப்படுகின்றன. வாழ்க்கை ஆதாரங்கள் வாழ்விடங்களானால் வயிற்றுக்கு என்ன வழி? சிந்திக்கவில்லை யென்றால், பஞ்சத்தில், நோயில் மடிவோம். எச்சரிக்கை!
விருப்பங்கள் தப்பானவையாக இருக்கக் கூடாது
சிலர் நம் விருப்பப்படி நடக்கக்கூட நமக்கு உரிமையில்லையா? என்பர். விருப்பம் என்பது தனக்கும், பிறருக்கும் கேடு பயவாத் தேவைகள் ஆகும்.
தனக்குக் கேடு பயக்கும் விருப்பங்களைச் சிலர் நிறைவேற்றும்போது சட்டம் அதைத் தடுப்பதில்லை. அது சரியான சட்ட நிர்வாகம் ஆகாது.
தனிநபர் விருப்பங்கள் பீடி, சிகரெட், மது, சூது போன்றவை சட்டப்படி அனுமதிக்கப் படுகின்றன. இது தப்பு.
தற்கொலை செய்துகொள்ள ஒருவன் விரும்புகிறான். சட்டம் அனுமதிக்குமா? நடுச்சாலையில் அம்மணமாகப் போக ஒருவர் விரும்பினால் சட்டம் ஏற்குமா?
தனக்கும், பிறருக்கும் தீங்கு தரும், கேடு தரும் ஏதும் விருப்பங்கள் ஆகா.
மதுவும், நஞ்சும் மருந்தாகப் பயன்படுகிறது. நன்மை தரும் என்றால் பொய்கூட வாய்மையாகிறது. எனவே, விருப்பங்கள் நன்மை பயப்பன மட்டுமே!