“நாளை மறுநாள் காலை பதினோரு மணிக்கு ‘காசா’ என்ற கடும் புயல் வீசும். அதன் வேகம் மணிக்கு நூற்று இருபது கிலோ மீட்டர் ஆக இருக்கும். அப்போது வீடுகளின் மேற்கூரைகள் பிய்த்து எரியப்படலாம். மரங்கள் முறிந்து விழும். மின் கம்பங்கள் உடைந்துவிழும். பலத்த மழை பெய்யும். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடும். பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம்’’
தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பைக் கேட்ட மதனின் உடல் நடுங்கியது.
“ஆண்டவா! இது என்ன சோதனை! இப்போது தானே புது வீடு கட்டி வருகிறேன். அதற்கு ஏதாவது பாதகம் நேருமோ! வயலில் உள்ள வாழை மரங்கள் என்னாகுமோ!’’ என நினைத்துப் பயந்தான்.
ஆம்! மதன் சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு வீடுகட்ட ஆரம்பித்தான். சுவர் எழுப்பி மேற்கூரை ஒட்டும் பணி சில நாட்களுக்கு முன்புதான் முடிந்திருந்தது. இந்த நிலையில் புயல் மழையா!
மனச்சோர்வுடன் இருந்த அவனுக்கு அவன் மனைவி அருணா ஆறுதல் கூறினாள்.
“ஏன் இப்படி பயப்படறீங்க? ஒவ்வொரு வருஷமும் நடக்கிற சம்பவம்தானே! சில நேரங்களில் புயல் வராமலும் போய் விடுமல்லவா! அதுபோல இந்த வருஷமும் நடக்கலாம்’’ என்றாள்.
ஆனாலும் அவன் மனம் ஆறுதல் அடையவில்லை. “நீ சொல்றதெல்லாம் சரிதான். ஆனா, கண்டிப்பா இந்த வருஷம் புயல் வீசும்னு செய்தி சொல்றாங்களே! அதோட நான் வட்ட கவுன்சிலர் பதவிக்கும் போட்டி போடறேன் இல்லையா! நிறைய பேனர் வேற வைச்சுட்டேன். புயலில் எல்லாம் வீணாகிவிடுமே’’ என்றான்.
“இயற்கையின் நிகழ்வை யாரும் தடுக்க முடியாது. முடிந்தவரை நம்மையும் பொருட்களையும் பாதுகாத்துக்க வேண்டியது தான்’’ என்று கூறியபடியே அருணா தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டாள்.
அன்றுமாலை வீட்டை விட்டு வெளியே கிளம்பி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தான் மதன். “எங்கள் ஓட்டு மதனுக்கே’’ என்று தன்னால் வைக்கப்பட்ட பேனர்களைப் பார்த்தான். எல்லாவற்றையும் அவிழ்த்து விடலாமா என எண்ணினான். ஆனால், மழை கடுமையாக பெய்ய ஆரம்பித்துவிட்டது. யாரும் இப்போது வேலை செய்ய வரமாட்டார்கள் என எண்ணியபடியே அவன் நடந்து கொண்டிருந்தபோது பக்கத்து ஊரைச் சேர்ந்த செல்லதுரை எதிரில் வந்தான். அவன் மதனுக்குத் தெரிந்தவன்தான். சென்னையில் உள்ள நாகானந்த சுவாமிகளின் தீவிரபக்தன்.
“செல்லதுரை, இந்த மழையில் என்ன காரியமா வந்தீங்க?’’ என்று கேட்டான் மதன்.
“உலக நன்மைக்காக ஓடியாடி உழைச்சிகிட்டு வர்றேன். எங்க வேணும்னாலும் எப்பவும் போவேன். நாளை மறுநாள் புயல் அடிக்கப் போவுது இல்லையா? அது விஷயமாத்தான் ஊர் ஊரா அலையறேன்’’ என்றான் செல்லதுரை.
“அய்யோ, புயலை நினைத்தாலே உடல் நடுங்குது. என் சொத்தெல்லாம் அழிஞ்சிடு மோன்னு பயமா இருக்கு. நூறு வருஷமா வீசாத புயல் இப்ப வீசப்போறதா செய்தி சொல்றாங்களே’’ எனப் புலம்பினான் மதன்.
“அதுக்காகத்தான் வந்தேன். புயலைத் தடுக்க முடியும். அதுக்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.’’
செல்லதுரையின் இந்த வார்த்தை மதனுக்கு தேன் போல் இனித்தது. அவனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த மண்டபத்திற்குச் சென்றான் மதன்.
“செல்லதுரை, எப்படி புயலைத் தடுக்க முடியும்? சொல்’’
“நான் சொல்றதை கவனமா கேள். நாகானந்த சுவாமிகளை உனக்குத் தெரியுமா?’’
“தெரியுமாவா? எல்லா அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் அதிலும் குறிப்பா நடிகைகளும் அவர்கிட்டதானே குறிகேட்கப் போவாங்க.’’
“அவரால் மட்டும்தான் இந்தப் புயலிலிருந்து நம்மைக் காக்க முடியும்.’’
“எப்படி செல்லதுரை?’’
“புயலை திசைதிருப்பிவிடும் சக்தி அவர்கிட்ட மட்டும்தான் இருக்கு. இருபது வருஷத்திற்கு முன்னாடி நடந்த சம்பவம் உனக்குத் தெரியுமா? ஞாபகம் இருக்கா? கடும்புயல் வீசி நாடே சின்னாபின்னப்பட்டு அழியும்னு வானிலை அறிக்கையில் சொன்னாங்க. ஆனா சுத்தமா புயலே வீசல. அது எப்படின்னு தெரியுமா?’’
“தெரியலையே’’
“அந்தப் புயல் ரஷ்யா நாட்டுக்குப் போயிடுச்சி. நாகானந்த சுவாமிகள்தான் இங்க வீசஇருந்த புயலைத் தடுத்து ரஷ்யா பக்கம் போக வைச்சுட்டார். நமது நாட்டையே அவர்தான் அப்போது காத்தார்.’’
“அப்படியா! புயலை ரஷ்ய நாட்டுக்குத் திருப்பி விட்டாரா? இப்பவும் அப்படி செய்ய முடியுமா? அப்படி செய்ஞ்சா அதிக செலவில்லாம நான் கவுன்சிலராகி விடுவேனே! நாம என்ன செய்யணும்?’’
“அப்படிக் கேள். நாகானந்த சுவாமிகள் நாளையே பூசையை ஆரம்பிக்கணும். யாகம் நடத்தணும். அதுக்கு பணம் வேண்டும். நீ ஒரு பத்துபேர் கிட்ட தலைக்கு ஆயிரம் ரூபா பணம் வாங்கிக் கொடு. அந்தப் பத்து பேரும் ஆளுக்குப் பத்துபேர்கிட்ட ஆயிரம் ரூபா வாங்கித்தரணும். இது அப்படியே விரைவா தொடர்ந்து நடக்கணும்.’’
“இது என்ன மல்டி லெவல் பிசினஸ் மாதிரி இருக்கே.’’
“அப்படிச் சொல்லாதே. எல்லோரும் பூசையில் பங்கெடுக்க இதுதான் வழி. மொத்தமா பணத்தைக் கொடுத்தால் சுவாமிகள் பூசை, யாகத்தை தொடங்கி விடுவார்.’’
“சரி, நீங்க சுவாமிகிட்ட உடனே பூசையை ஆரம்பிக்கச் சொல்லுங்க. நான் பணம் வசூல் பண்ணி இன்னைக்கு சாயந்திரமே கொடுத்துடறேன்.’’
“சரி, சரி. சாயந்திரம் வந்து பணம் வாங்கிக்கிறேன்’’ என்றபடி செல்லதுரை கிளம்பினான்.
மதன் உடனே வசூல் வேட்டையில் இறங்கினான். பத்து பேரை தேர்வு செய்து பணம் வாங்கி, அவர்களுக்கும் இவனே ஆள் பிடித்துக் கொடுத்து பணம் பெற்றான்.
அப்போது தற்செயலாகத் தன்னை எதிர்த்து கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் அறிவழகனை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. மதன் முகத்தை திருப்பிக் கொண்டாலும் அறிவழகன் விடவில்லை.
“மதன், நாம் எப்போதும் நண்பர்கள்தான். தேர்தல் நம்மை பிரித்து விடக்கூடாது. நீ வென்றாலும் எனக்கு மகிழ்ச்சிதான். அது பிரச்சினை இல்லை. நாளைய புயலின்போது மக்களுக்கு வேண்டிய உதவிகளை நாம் இணைந்தே செய்யலாம்’’ என்றான் அறிவழகன்.
“புயலே வராத அளவுக்கு நான் ஏற்பாடு செய்ஞ்சுட்டேன். மக்களை இப்பவே காப்பாத்திட்டேன்’’ என்று படபடப்புடன் சொன்னான் மதன்.
“எப்படி?’’ எனக் கேட்டான் அறிவழகன்.
“நாகானந்த சுவாமிகள் பூசை, யாகம் செய்கிறார். நம்ம உர் மக்களைக் காக்க பணம் வசூல் பண்ணிக்கிட்டு இருக்கேன். அவர் புயலை வேற நாட்டுக்குத் திருப்பி விட்டுடுவார்.’’
“அதெல்லாம் முடியாத காரியம் மதன். பண வசூலை நிறுத்து. புயல் திசை மாறுவதோ, வலுவிழப்பதோ அவை இயற்கையாக நடப்பவை. காற்று வகைகளைப் பற்றி உனக்குச் சொல்லவா?’’
“என்ன சொல்லப் போகிறாய்?’’
“வேற்றம், வளி, சூறாவளி, சுழல், காற்று, அன்றமை, ஆவி, வெம்பாவை, நீராவி, புயல், உயிர், கொண்டல், தென்றல், கோடை, வாடை இவைகள் எல்லாம் காற்றின் வகைகள். சைக்ளோன், அரிகேன், டைபூன் இப்படி சொல்லப்படும் காற்று அதன் வேகத்திற்கேற்ப அடிக்கலாம். உதாரணமா அரிகேன் எனப்படும் புயல் மணிக்கு 117 கிலோ மீட்டர் வேகத்தில் அடிக்கும். இவை எல்லாமே ஜப்பானின் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டை விட பத்து மடங்கு சக்தி வாய்ந்தவை.
“ஓகோ, அப்படியா?’’
“ஆமாம் மதன். அப்படிப்பட்ட நிகழ்வைத் தடுக்க பூசையோ, யாகமோ பயன்படாது. இயற்கையா புயல் வலுவிழந்தால் தன் பூசையால்தான் ஏற்பட்டதுன்னு சொல்லிப்பாங்க. மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மக்களை பயம் காட்டி பணம் பறிப்பவன் மகாமகா அயோக்கியன்’’ இவ்வாறு பெரிய பிரசங்கமே செய்தான் அறிவழகன்.
ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் நம்மை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் இவன் பொறாமையால் பேசுவதாக நினைத்து வசூல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டான் மதன்.
அன்று மாலை வந்த செல்லதுரையிடம் கணிசமான பணத்தைக் கொடுத்தான்.
செல்லதுரையைப் போன்று ஊருக்கு ஊர் பல புரோக்கர்கள் செயல்பட்டு ஒரு பெரிய தொகையை நாகானந்த சுவாமியிடம் கொடுப்பார்கள். அவர் இந்த புரோக்கர்களுக்கெல்லாம் கமிஷன் கொடுப்பது வழக்கம். இதையெல்லாம் மதன் அறியவில்லை.
***
மறுநாள் பொழுது விடிந்தது. சொன்னபடி பதினோறு மணிக்கு புயல் வீசுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. நாகானந்த சுவாமிகளின் பூசை, யாகம் பற்றி செய்திகள் சில தொலைக்காட்சிகளில் விரிவாகச் சொல்லப்பட்டன.
சிறிது சிறிதாக காற்றின் வேகம் அதிகரித்தது. கடும் மழையும் பெய்து வெள்ளம் தெருக்களில் பெருக்கெடுத்தோடியது.
திடீரென பேரிரைச்சலுடன் காற்று பலமாக வீசியது. மதன் பயந்தபடி வெளியே வந்து பார்த்தான். மரங்கள் வேரோடு சாய்ந்தன. கிளைகள் மடமடவென முறிந்து விழுந்தன. வீடுகளின் மேற்கூரைகள் பிய்த்து எரியப்பட்டு வானத்தில் பறந்தன. மின் கம்பங்கள் முறிந்து கம்பிகள் ஒன்றோடு ஒன்று பின்னி விழுந்தன. மின்சாரம் தடைப்பட்டு எங்கும் இருள் சூழ்ந்தன. வானத்தில் கருமேகங்கள் திரண்டு காண்போரை மிரளவைத்தன.
மதன் பயந்தபடி வீட்டிற்குள் நுழைந்து கதவுகளை சாத்திக் கொண்டான்.
“அய்யோ, நாகானந்த சுவாமிகளின் பூசை என்னாயிற்று! பயன் தரவில்லையோ! அறிவழகன் சொன்னது உண்மைதானா?’’ என அவன் வாய் முணுமுணுத்தது.
அப்போது அவன் மனைவி அருணா பேட்டரியால் செயல்படும் வானொலியை இயக்கினாள். புயல் பற்றிய செய்திகள் பரபரப்புடன் சொல்லப்பட்டன. அப்போது சொல்லப்பட்ட ஒரு செய்தியைக் கேட்டு மதன் அப்படியே மயங்கி விழுந்தான். அருணா அவனைத் தாங்கிப் பிடித்தாள்.
வானொலியில் சொல்லப்பட்ட செய்தி இதுதான்.
“சென்னையில் தொடர்ந்து கடும்புயல் வீசி வருகிறது. பூசை, யாகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நாகானந்த சுவாமிகள் வீடு மீது இடி தாக்கியதால், சுவர் இடிந்து விழுந்தும், பெரிய மரம் வேரோடு சாய்ந்ததாலும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார்.’’
– ஆறு. கலைச்செல்வன்


Leave a Reply