ஆசிரியர் பதில்கள்

ஆகஸ்ட் 01-15

                                 
                                               இறுதியில் மக்கள் சக்தியே வெற்றிபெறும்!


கே: 
   ‘அய்யாகண்ணு அவர்களின் போராட்டம் பண்பாட்டைச் சிதைப்பதாயுள்ளது’ என்று விவசாயிகள் சங்கத் தலைவர்களில் ஒருவரே கூறியது சரியா?

    – பா.முத்துக்கருப்பன், வந்தவாசி

ப:   எந்த இடத்திலும் இராமாயணப் பாத்திரங்களில் ‘சிரஞ்சீவி’யாக கூறப்பட்ட, விபீஷணர்களும், சுக்ரீவர்களும், அனுமார்களும் இருக்கவே செய்வார்கள்! மேலும், ‘பொறாமை’ எங்கே, எப்போது முளைக்கும் என்று அறுதியிட்டுக் கூறமுடியாதே!

கே:    நடிகர்  கமல்ஹாசனை இந்துத்வாவாதிகள் கடுமையாக எதிர்ப்பதன் காரணம் என்ன?

    – வே.தமிழ்மொழி, சேலம்

ப:    அவர் ஒரு பகுத்தறிவுவாதி. ஹிந்து கடவுள்கள் _ புராண யோக்கியதைகளை அடிக்கடி அம்பலப்படுத்துகிறாரே என்ற எரிச்சல் _ ஆத்திரம்தான்.

கே:    “தற்போது நடக்க உள்ளது தேர்தல் அல்ல; அது ஒரு கொள்கைரீதியான யுத்தம்’’ என்ற குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் மீராகுமார் கூறியது பற்றி தங்கள் கருத்து என்ன?

    – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:    நூற்றுக்கு நூறு சரியான, யதார்த்தமான ‘அரசியல் போராட்டம்’ பற்றிய படப்பிடிப்பு!

கே:    குரங்கு அப்பம் பங்கிடுவதைக்கூட புரிந்துகொள்ள முடியாதவரா நிதிஷ்குமார்?

    – கெ.நா.சாமி, சென்னை-72

ப:    பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்; பதவிப்பசி வந்திடில் எல்லாம்போம். அரசியல்வாதிகளின் நம்பகத்தன்மை இதுதான். தனக்கு மிஞ்சிதானே தானதர்மம் _ கொள்கை எல்லாம் என்பது அவரது கண்ணோட்டம்-போலும்!

கே:    சுயநலத்துக்காக தமிழக மாணவர்களைப் பலிகொடுத்த, முதுகெலும்பற்ற எடப்பாடி, ஊழலை ஊருக்குச் சொல்லும் நடிகரை மிரட்டுவது கேலிக்கூத்தல்லவா?

    – சீ கோவிந்தன், திருவண்ணாமலை


ப:    பாவம் _ பரிதாபத்திற்குரிய எடப்பாடி!

கே:    பி.ஜே.பி ஆளுநர்களின் நடிவடிக்கை-களைப் பார்க்கும்போது ‘ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை’ என்ற அண்ணாவின் முடிவைச் செயல்படுத்த போராட வேண்டியது கட்டாயமாகிறதே?

    – தே.வீராசாமி, சாலவாக்கம்

ப:    நீங்கள் புரிந்து, கேள்வி கேட்கிறீர்கள்; ஆனால் நம் நாட்டு அரசியல்வாதி-களுக்கு அதுமாதிரி தெளிவோ, துணிவோ இல்லையே! குறைந்தபட்சம் தமிழ்நாட்டுக்கு கடந்த 8 மாதங்களுக்கு மேல் ஒரு நிரந்தர கவர்னர்கூட _ ஆளுநர் இல்லையே; கேட்கும் முதுகெலும்-புள்ளவர்கள் எவரும் இல்லையே! என்ன செய்வது?

கே:    பெரிய பொறுப்புகளில் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி பிரதமரைச் சந்திப்பது எப்படி முடிகிறது?

    – தமிழோவியன், தெற்கிருப்பு, கடலூர்

ப:    பிரதமரின் ‘Defacto’ முதல் அமைச்சர் போலும் அவர்; புரியவில்லையா? மக்களால் தேர்வு செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் கேட்டதற்கு பிரதமர் மோடியால் நேரம் ஒதுக்க முடியவில்லையே!

கே:    இனிவரும் காலங்களில் “இணைய வழி பரப்புரை’’யை (பேஸ்புக், டிவிட்டர் மூலமே இன்றைய இளைய தலைமுறையை அணுக முடியும் என்பதால்) அதிகப்படுத்துவீர்களா?

    – சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

ப:    நிச்சயமாக; நாம் அதற்கென ஒரு தனிப்பிரிவு _ திறமையுள்ளவர்களைத் தேர்வு செய்து செயல்பட முழுவீச்சில் இறங்கியுள்ளோம். விரைவில் புரிந்துகொள்வீர்கள்!

கே:    ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்தில் துணிவாக, கொள்கைரீதியாக தெரிவிக்கும் அரசியல் தலைவர்களை பிரித்தும், பிளாக்மெயில் செய்தும் ஒடுக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி கூட்டத்தினர் செயல்பாட்டுக்கு சரியான எதிர் நடவடிக்கை என்ன?

    – இல.சங்கத்தமிழன், செங்கை

ப:    மக்களை பெருந்திரளாகத் திரட்டி _ மெரினா எழுச்சிபோல் _ அறப்போர்-களை விடாமல் நடத்தி விரட்டி அடிப்பதுதான் ஒரே வழி! மக்கள் சக்தி என்பது மகத்தான சக்தி _ மக்களாட்சியில் என்று காட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. கட்சி அரசியல் பல நேரங்களில் இதைத் தடுக்கிறது. கேவலத்தால் அவல அரசியல் நீடிக்கிறது! இறுதியில் மக்கள் சக்தியே வெற்றி பெறுவது உறுதி! உறுதியிலும் உறுதி!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *