பகுத்தறிவுச் செம்மல் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன்
நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். அதன் காரணமாக முன்பு ‘நாராயணசாமி’யாக இருந்தவர் பின் ‘நெடுஞ்செழியன்’ ஆனார். (பெயர் மாற்றம் செய்து கொண்டார்.)
மேடைப் பேச்சில் வல்லவரானார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரிடம் மதிப்புடையவரான அவர் எம்.ஏ., பட்டப் படிப்பை முடித்து சிலகாலம் தந்தை பெரியாருடன் சுற்றுப் பயணம் செய்து தொண்டாற்றியவர். நாவலரின் அரசியல் வாழ்வு 1949இல் தி–.மு.க. பிறந்தபோதே துவங்கிய ஒன்று.
பிறகு அந்த அரசியல் வாழ்வில் தி.மு.க.வின் பொதுச் செயலாளராக ஆனதிலிருந்து பல காலம் முக்கிய அமைச்சர் பதவிகளிலும் இருந்தவர். மக்கள் தி.மு.க.வை தொடங்கி பின் அதனைவிட்டு, அ.தி.மு.க.விற்கும் சென்றவர் என்றாலும், அரசியல் வண்ணங்கள் மாறினாலும், அவரது பகுத்தறிவுக் கொள்கை எண்ணங்கள் ஒருபோதும் மாறியதே இல்லை.
இறுதி மூச்சடங்கும் வரை மாறாத, மாற்றப்பட முடியாத ஒரு சீரிய பகுத்தறிவுவாதியாகவே வாழ்ந்த புகழுக்கும் பெருமைக்கும் உரியவர்.
புரட்சிக்கவிஞர் கவிதைகள் பொதுமக்கள் மத்தியில் பரவிட, நாவலர் அவருக்கே உரித்தான பாணியில் மேடைகள் தோறும் சிங்கமென முழங்கியவர். பெரியார் தம் பகுத்தறிவுக் கொள்கைதான் மக்களை வாழவைக்கும் மாமருந்து என்று உறுதியாகக் கருதியவர்.
புதிய புத்தாயிரத்தையும் 21ஆம் நூற்றாண்டையும் பெரியார் நூற்றாண்டாக பகுத்தறிவு சகாப்தமாக்கிடவே விரும்பியவர் அவர்!
நாவலர் எந்த மேடையில் முதலில் ஏறி பகுத்தறிவு முழக்கம் தந்தாரோ, அதே (ஈரோட்டு) மேடையில்தான் பெரியார் திடலில் அவரது இறுதி முழக்கம் (1999 டிசம்பர் 31) செய்யும் வாய்ப்பும் ஏற்பட்டது.
80 வயதான நிலையில் 60 ஆண்டு பொதுவாழ்க்கையில், தலைசிறந்த பகுத்தறிவாளராக வாழ்ந்து வரலாறானார்.
புலவர் குழந்தை
ஈரோட்டுக்கு அருகே ஓலவலசு எனும் சிற்றூரில் பிறந்தவர். தந்தை முத்துசாமி கவுண்டர், தாயார் சின்னம்மா, ஊரிலிருந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்து கிராமத்தில் முதல் ஆளாக எழுதப்படிக்கக் கற்றவர். அவர்களது கிராமத்திலேயே கல்வியறிவு பெற்ற முதல் மாணாக்கர்.
தன் பத்தொன்பதாம் வயதில், தந்தை பெரியாரின் பால் ஈர்ப்பு கொண்டு சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். வீதிதோறும் சுயமரியாதை இயக்க சூறாவளியாகச் சுழன்றடித்தார்.
கடவுள் மறுப்பாளராகவும் கறுப்புச் சட்டைக்காரராகவும் இளம் வயதில் வலம் வந்தார். தொடர்ந்த இலக்கியத்தின் மீதான அவரது ஆர்வம் எந்தப் பள்ளிக்கும் போகாமலேயே அவரது 28ஆம் வயதில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டத்தைப் பெற்று தந்தது.
இப்படியாக ஒருபக்கம் இலக்கிய ஆர்வம் அவருள் கிளைத்து வளர்ந்தாலும் இன்னொரு பக்கம் தமிழுக்கான அரசியல் வாழ்வுக்கும் வாழ்வை அர்ப்பணிக்கத் துவங்கினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். ‘இந்தி ஆட்சியானால்’ எனும் நூலையும் எழுதினார்.
உடன் பவானியில் ஆசிரியப் பணியும் ஆற்றியபடி தன் தமிழ் வாழ்வைத் தொடர்ந்தார். ‘திருக்குறளும் பரிமேலழகரும்’ போன்ற எண்ணற்ற உரைநடை நூல்களும் இவரது புலமைக்குச் சான்று.
திராவிட இயக்கத்தின் மேல் கொண்டிருந்த பற்றின் கரணமாக கம்பரின் இராமகாவியத்தை அனைவரும் போற்றிய காலத்தில் யாப்பிலக்கணத்தில் ‘இராவண காவியம்’ எனும் நூலை இயற்றி அழியாப் புகழடைந்தார்.
புலவர் இயற்றிய நூல்களிலேயே அவருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்ப்பதுமாக இருப்பது இராவண காவியமே. அத்தகைய இராவண காவியத்தின் சிறப்புகள் நான்கு.
1. இராமனைவிட ஏற்றம் மிகுந்தவன் இராவணன் என்பதை அது உறுதிப்படுத்தியது.
2. தமிழறிவும் பகுத்தறிவும் பின்னிப் பிணைந்தது இராவண காவியம்.
3. போலச்செய்த சார்புக் காவியமாக இல்லாமல், முழுமையான தமிழ்ப் பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்த பெரும் காவியமாகத் திகழ்ந்தது.
4. தன் புதுமை, பகுத்தறிவுக் கருத்துகளால் காங்கிரஸ் கட்சியரசை அச்சுறுத்தித் தடைபோட வைத்தது. கலைஞர் ஆட்சிக்கு வந்தபின் 1971இல் இராவண காவியத்துக்கிருந்த தடையை நீக்கினார்.