திடீர் மாரடைப்பை முன்கூட்டியே அறியும் கருவி!

ஏப்ரல் 01-15

 

ஓசூர் சிறுவனின் உலகச் சாதனை!
திடீர் மாரடைப்பை முன்கூட்டியே அறியும் கருவி!

அண்மைக் காலத்தில் பல இளைஞர்கள், நடுத்தர வயதுள்ளவர்கள், முதியவர்கள் என்று வயது வேறுபாடு இல்லாமல் திடீர் என்று எந்தவித முன் அபாய அறிகுறிகளும் இன்றி மாரடைப்பு (Massive Heart Attack) மிகவும் அமைதியான மாரடைப்பு (Silent Attack) ஏற்பட்டு எதிர்பாராத வகையில் மின்னல் போல் உயிர் பறிப்பு ஏற்படுகிறது!

மாரடைப்பு பல ரகம். படபடப்பு, மூச்சுத் திணறல், கொட்டும் வியர்வை, நெஞ்சு வலி, நகரும் கை வலி சில அறிகுறிகள்.

எந்த அறிகுறியும் இல்லாமல் தாக்கும் மாரடைப்பும் உண்டு. யாராலும் கண்டுபிடிக்க முடியாது. திடீரென நெஞ்சடைக்கும். சுருண்டு விழுவார்கள், இதயம் நின்றுவிடும், உயிர் பிரிந்துவிடும்.

எந்தச் சோதனையும் செய்யாமல் சைலன்ட் அட்டாக் வரப்போவதை முன்கூட்டியே கண்டுபிடிக்க வழி தெரிந்துவிட்டது இப்போது. வழிகாட்டி பெரிய விஞ்ஞானியோ, நோபல் விருது பெற்றவரோ இல்லை. நமது ஓசூர் சிறுவன் ஆகாஷ் மனோஜ். பத்தாம் வகுப்பு மாணவன்.

‘‘எங்க தாத்தா ரொம்ப ஆரோக்கியமாக இருந்தார். அவருக்கு டயபெடிஸ், பிளட் பிரஷர் இருந்தது. ஆனால், ரொம்ப கன்ட்ரோல்ல வச்சிருந்தார். திடீர்னு ஒரு நாள் பேசிட்டு இருந்தப்ப அப்படியே சுருண்டு விழுந்து செத்துப் போனார். நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சுருச்சு. சைலன்ட் ஹார்ட் அட்டாக்னு டாக்டர்கள் சொன்னாங்க.’’

‘‘அது என்னான்னு படிக்க ஆரம்பிச்சேன். பெங்களூர்ல உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் இருக்கிற லைப்ரரிக்குப் போய் இதயம் சம்பந்தமான எல்லா தகவல்களையும் படிக்க ஆரம்பிச்சேன். வெளிநாட்டுப் பத்திரிகைகள், புத்தகங்கள் எல்லாம் அங்கே வரும். எல்லாவற்றையும் படித்தேன். இப்பொழுது எனக்கு 15 வயது. ஆனால், டாக்டர்களுக்கு ஹார்ட்பற்றி வகுப்பு எடுக்கிற அளவுக்குப் பேச முடியும்.

ரத்தத்திலே இருக்கிற FABP3  என்கிற ஒரு புரோட்டீன் அதிகமாகும்போது சைலன்ட் அட்டாக் வருகிறது என்று தெரிந்தது. அது ஒரு நெகடிவ் புரதம். அதனால், பாசிட்டிவ் புரதம் மூலமாக அதை ஈர்க்க முடியும். அதாவது பக்கத்தில் இழுத்து அடையாளம் காண முடியும். மணிக்கட்டு அல்லது காதுக்குப் பின்னால் ஒட்டிக்கொள்கிற மாதிரி சின்ன ஸ்டிக்கர் மாதிரி ஒரு சிலிக்கான் பேட்ஜ் தயாரித்தேன்.

அதை ஒட்டிக்கிட்ட உடனே அதிலே இருந்து பாசிட்டிவ் எலக்ட்ரிக் இம்பல்ஸ் உற்பத்தியாகி, ரத்த நாளங்களில் ஊடுருவும். அங்கே நெகடிவ் புரதம், அதாவது, FABP3 இருந்தா, உடனே பேட்ஜ் அதனை இழுக்கும். அது எந்த அளவு இருக்குன்னு அந்த பேட்ஜ் காட்டிக் கொடுக்கும். அதிகமாக இருந்தால், அந்த நபருக்கு சைலன்ட் அட்டாக் வரப் போகிறது என்று அர்த்தம். உடனே, டாக்டரை பார்க்கணும்‘’ என்று விவரிக்கிறான் மனோஜ்.

பிளாஸ்திரி மாதிரி இருக்கும் இந்தக் கருவிக்கு தன் பெயரில் காப்புரிமை கேட்டு மனு கொடுத்திருக்கிறான் ஆகாஷ் மனோஜ்.

பன்னாட்டு மருந்து கம்பெனிகள் எத்தனைக் கோடி வேண்டுமானாலும் கொட்டிக் கொடுத்து இதன் உற்பத்தி உரிமையை வாங்கத் தயாராக இருக்கும் நிலையில்,

‘‘எனக்குப் பணம் பெரிதல்ல. என் தாத்தா மாதிரி இனிமே யாரும் சைலன்ட் ஹார்ட் அட்டாக் வந்து இறக்கக் கூடாது. அதனால், மத்திய அரசு மூலமாக மலிவான விலையில் இதை உற்பத்தி செய்து, எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டும் அதுதான் என்னுடைய ஆசை’’ என்கிறான்.

பூர்வாங்க சோதனைகள் முடிந்து மனிதர்களிடம் சோதிக்கும் கட்டத்தை மனோஜின் சிலிகான் பேட்ஜ் எட்டியிருக்கிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் இளம் கண்டுபிடிப்பாளர் விருதும், பாராட்டுப் பத்திரமும் அளித்திருக்கிறார். பிளஸ் 2 முடித்ததும் அவன் விரும்பிய கார்டியாலஜி துறையில் சேர்த்துக் கொள்ள டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தயாராக இருக்கிறது.

வாழ்க அந்த மனோஜ்!

வெல்க அவரது மனிதநேயம்!!

(ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளிலிருந்து)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *