
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப் பின் அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவது சம்பந்தமான வழக்கு கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமா?
பாபர் மசூதியை இடித்ததற்கான குற்றம் சுமத்தப்பட்டவர்களாக எல்.கே.அத்வானி, முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கத்தியார் போன்றவர்கள் மீதான கிரிமினல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இப்போதுதான் – இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணைக்கு வந்துள்ளது!
நம் நாட்டு நீதிமுறையில் உள்ள விசித்திரக் கோளாறுகளில் இது தலையாயது; வெட்கமும், வேதனையும் படவேண்டிய ஒன்று. வாய்தா, வாய்தா – வருடக் கணக்கில் வாய்தா – ‘‘தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி’’ என்பது ஏட்டளவில்தானா? பேச்சளவில்தானா? நடைமுறைக்கு வந்து செயல்படுத்தப்பட வேண்டாமா?
இந்த நிலையில், இன்னொரு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுக்கு வந்துள்ள இராமர் கோவில் கட்டும் வழக்குப்பற்றி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, அதை விரைந்து முடித்து தீர்ப்புக் கூற வேண்டிய உச்சநீதிமன்ற நீதிபதி இருவரும் இப்பிரச்சினையை வெளியில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்; அப்படிப்பட்ட நிலையை ஏற்றால், நானே ஒரு (Mediator) சமரசம் செய்து வைக்கக்கூடிய பணியைச் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று கூறுவது, அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உகந்ததா? அனுபவச் செறிவுடன் கூறும் கருத்தாக எவராவது எடுத்துக்கொள்ள முடியுமா?
‘‘வெளியில் பேசித் தீர்வு காண வேண்டும்’’ என்று கூறுவது ஒருவகை கட்டப் பஞ்சாயத்து அல்லவா?
மிகுந்த உணர்ச்சிக் கொப்பளிக்கும் இரு மதத்தவரின் உணர்ச்சிகளும் – ஏன் வெறிகளும்கூட உச்சத்தில் சென்றுள்ள நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்து ஏற்கத்தக்கதா?
23.3.2017 அன்று வெளிவந்த (சென்னைப் பதிப்பு, பக்கம் 14) ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளேட்டின் தலையங்கத்தில்கூட, இக்கருத்தினை மறுத்து,
‘‘Judgement needed’’
தீர்ப்புதான் தேவை என்று விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் 14 ஆண்டுகளுக்குமேல் ஆட்சியை இழந்த பா.ஜ.க. (ஆர்.எஸ்.எஸ்.) இப்போது மிகப்பெரும்பான்மை இடங்களைக் கொண்டு ஆட்சியை அதுவும் ஹிந்துத்துவத்தின் மறு உருவமாகக் காட்சியளிக்கும் மகந்த் சாமியாரான யோகி ஆதித்யநாத் என்பவர் முதலமைச்சராக்கப்பட்டு, மூன்று டஜன் துறைகளை அவர் தன்வசம் வைத்துள்ள நிலையில், (பச்சையாக பல ஆணைகளைப் போட்டு வரும் நிலையை மனதிற்கொண்டு) இது நடைமுறைக்கு ஒத்துவராத ஆலோசனை – அறிவுரை என்று குறிப்பிட்டுள்ளது மிகவும் சரியான கருத்தேயாகும்!
‘‘This makes negotiation on the basis of equality implausible’’ என்று குறிப்பிட்டுள்ளது.
பொதுவாகவே, உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கும்போது, பொது மேடைபோல ஏனோ தானோ என்று தங்கள் சொந்தக் கருத்துகளைக் கூறி அது ஊடகங்களில் வெளிச்சத்தோடு வெளிவரும் நிலை விரும்பத்தக்கதல்ல!
நீதிமன்றத்தில் சட்டப்பார்வை – நியாயப் பார்வையோடு மட்டும் செயல்படவேண்டும் – ஏதோ பொதுக்கூட்டங்களில் பேசுவது மாதிரி பேசி, தேவையற்ற விவாதங்களுக்கு வித்தூன்றி விடக்கூடாது.
எனவே, இராமர் கோவில் போன்ற மிகவும் உணர்ச்சிப்பூர்வமான – மத உணர்வுகளைப் பின்னணியாகக் கொண்ட (Sensitive Matter- இல்) ஒரு விஷயத்தில் இப்படிப் பேசலாமா? காலதாமதம் செய்யாமல் வழக்கை நடத்தி தீர்ப்பைக் கூறுவதே, அவர்களின் சட்டக் கடமையாகும் என்பதை சமூகநலன் சார்ந்தவர்கள் என்ற முறையில் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
– கி.வீரமணி
ஆசிரியர்


Leave a Reply