உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை மொத்தம் 31 ஆகும்.
இதில் பல இடங்கள் காலியாக உள்ளன; அதன் காரணமாக வழக்குகளின் தேக்கத்தைக் குறைத்து, உடனடியாக நீதி வழங்க முடியாத நிலை. தமிழ்நாட்டிலிருந்து இதுவரை 3 அல்லது 4 நீதிபதிகள்கூட உச்சநீதிமன்றத்தில் இருந்திருக்கிறார்கள். பெங்கால் லாபி, மும்பை லாபி என்பதே மிகவும் செல்வாக்குடன் தங்களது மாநில உயர்நீதிமன்றத்திலிருந்து தவறாமல் கூடுதல் எண்ணிக்கையில் நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல மிகுந்த கவனஞ் செலுத்துகின்றனர். மாண்புமிகு ஜஸ்டிஸ் பானுமதி அவர்கள் ஒருவர்தான் தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.
எனவே, உடனடியாக தமிழ்நாட்டுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் தேவை, தேவை!
காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள மாண்புமிகு ஜஸ்டிஸ் என்.பால்வசந்த்குமார் அவர்களை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பது சமூகநீதிக் கண்ணோட்டத்திலும் முக்கியம் ஆகும்.
அதுபோலவே, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் (எஸ்.சி., எஸ்.டி.,) சமுகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் உச்சநீதி மன்றத்தில் இல்லை. உடனடியாக இந்தச் சமூக அநீதியைக் களையவேண்டும்.
தமிழ்நாட்டு எம்.பி.க்கள், தமிழ்நாட்டில் உள்ள சமூகநீதியில் நம்பிக்கை உள்ள அத்துணை அரசியல் கட்சிகளும், பிற அமைப்புகளும் இதில் அவசர அவசிய கவனம் செலுத்த வேண்டும்.
கி.வீரமணி,
ஆசிரியர்