தமிழர் தலைவர் அளித்த பதில்கள்

ஜனவரி 16-31

பயிற்சிப் பட்டறை மாணவர்களுக்குத்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த 28.12.2016, 29.12.2016 மற்றும் 30.12.2016 அன்று பெரியாரியல் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இப்பயிற்சி பட்டறை நிறைவு நாளின்போது திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களின் கேள்விகளுக்கு கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்.

கேள்வி: புதிய கல்விக் கொள்கை நிறைவேற்றப்பட உள்ளது; கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
பதில்: புதிய கல்விக்கொள்கை எந்தக் காலத்திலும் நிறைவேற்றப்பட முடியாத அளவிற்கு அதற்கு எதிர்ப்பு கொடுத்து, அதை ஒழிக்கின்ற வரையில், எப்படி தந்தை பெரியார் அவர்கள் குலக்கல்வித் திட்டத்தை ஒழிப்பதற்குக் கடுமையாக, ஓராண்டுக்கு மேலாக போராடினார்களோ, அதேபோல திராவிடர் கழகம் போராடும். போராட்டங்களை அறிவிக்கும். ஓயாது, ஒழியாது. ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என முத்தரப்பைச் சார்ந்தவர்கள் பங்கேற்கின்ற போராட்டம் பல இடங்களில் நடைபெறுகிறது.

கேள்வி: நம் நாட்டில் இன்று இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக தாங்கள் எதைக் கருதுகிறீர்கள்? அதனை ஒழிக்க என்ன செய்யவேண்டும்?

பதில்: மிகப்பெரிய பிரச்சினையாக இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இருப்பது ஜாதி, தீண்டாமை. அதை ஒழிப்பதுதான் நம்முடைய முதல் வேலையாக இருக்கும்.

செவ்வாய்க்கிரகத்துக்கே போகக்கூடிய நிலையில் நாம் கர்ப்பக் கிரகத்துக்குள் போக முடிகிறதா? அதுவும் நாம் கட்டிய கோயில். நம்மாள் விட்ட மானியம். நம்மாள் செய்த சிலை. ஆனால், செவ்வாய்க் கிரகத்துக்குள் நுழைய முடிந்தாலும் கர்ப்பகிரகத்துக்குள் நுழையவில்லை என்றால், ஜாதி, தீண்டாமை என்பது எவ்வளவு பெரிய ஆபத்து, எவ்வளவு பெரிய நோய்? என்பதற்கு விளக்கமாகும்.

எனவே, முன்னுரிமை கொடுத்து அதை ஒழிக்க வேண்டும் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்நாள் இலட்சி-யமாக இருந்தது. ஜாதியை ஒழித்தால்தான் சமத்துவம் வரும். இன்னமும் ஜாதியின் பெயராலே சில கவுரவக் கொலைகள் என்று ஆணவக் கொலைகளை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆகவேதான், 21 ஆம் நூற்றாண்டில் நாம் நாகரிகப்படுத்தப்பட்டோம் என்பது உடையிலே மட்டும் இருப்பதா? அல்லது உணர்விலே, மானத்திலே இருப்பதா? என்பதுதான் மிக முக்கியமானது.

“It is more honour than bread, to be become priority of the qualitarian” â¡Á 裘™ñ£˜‚v என்று கார்ல்மார்க்ஸ் சொன்னார்.   

உழைக்கும் வர்க்கத்துக்கு கவுரவம், தன்மதிப்பு முக்கியமே தவிர, ரொட்டி என்பது பின்னால்தான்.

ஆகவேதான், இன்னமும் ஜாதி, தீண்டாமை மனிதத்தன்மைக்கு விரோதமாக இருப்பவை. அதனை ஒழிப்பதுதான் நம்முடைய முதல் வேலை.

கேள்வி: ஜாதியை ஒழிக்க முக்கிய வழி கலப்புத் திருமணம்; திராவிடர் கழகத் தொண்டர்கள் தங்கள் குடும்ப நிலையில், இதனைப் பின்பற்றுகிறார்களா?

பதில்: பெரும்பாலும் பின்பற்றுகிறார்கள். திராவிடர் கழகத் தொண்டர்கள்தான் பின்பற்றுகிறார்கள். அவர்கள் தங்களைப் பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்வதே கிடையாது. சென்ற ஆண்டுகூட நிறைய மணவிழாக்கள் நடைபெற்றுள்ளன. திராவிடர் கழகத் தொண்டர்கள் செய்யும்போது, ஆணவக் கொலைகள் என்பது வரவே வராது.

கேள்வி: ஜாதி ஒழிப்பு ஒரு பக்கம்; ஜாதியின் பெயரால் இட ஒதுக்கீடு இன்னொரு பக்கம்; முரண்பாடாகத் தோன்றுகிறதே?

பதில்: மேலெழுந்தவாரியாக நுனிப்புல் மேயக்கூடாது. அதுதான் மிக முக்கியம்.
அம்மை நோய் வந்தால் என்ன செய்கிறார்-கள்? ஊசி போடுகிறார்கள் அல்லவா! அம்மைக் கிருமிகளைக் கொண்டுதான் அந்த ஊசியைப் போடுகிறார்கள். ஏன் அப்படி போடுகிறார்கள்; அந்தக் கிருமியை உள்ளே செலுத்தினால், இந்த அம்மைக் கிருமி, வருகின்ற அம்மைக் கிருமியை எதிர்த்துப் போராடி, உடலைப் பாதுகாக்கிறது.

அதேபோன்றுதான், காலங்காலமாக எந்த ஜாதியினால் நம்மைப் படிக்கக்கூடாது என்று சொன்னார்களோ, எந்த ஜாதியினால், சூத்திரர்களுக்குப் பஞ்சமர்களுக்கு, கீழ்ஜாதிக் காரர்களுக்குப் படிப்பு கொடுக்கக் கூடாது என்று சொன்னார்களோ, அதே ஜாதியை காலங்காலமாக அடிப்படையாகக் கொண்டு-தான், சிறிது காலத்திற்கு நாம் மற்றவர்களோடு கல்வி, உத்தியோக வாய்ப்பில் வருகின்ற வரையில், இன்றைக்கு அந்த ஜாதி அடிப்படையைப் பார்த்துதான், சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோம் என்பதற்கு அடையாளம். ஆகவே, அது தேவை. அது முரண்பாடே அல்ல.

கேள்வி: கணவனை இழந்த பெண்களுக்கு விதவை என்று சமுதாயம் பெயரிட்டிருக்கிறது; மனைவியை இழந்த கணவனுக்கு ஏன் எந்தப் பெயரும் சூட்டவில்லை;  நீங்கள் என்ன பெயர் சூட்ட விரும்புகிறீர்கள்?

பதில்: விதவை என்பது நம்முடைய சொல் அல்ல; அது வடமொழி சொல்.

ஆனால், ஆங்கிலத்தில் ‘விடோ’ என்று சொல்வார்கள்; ஆணுக்கு ‘விடோயர்’ என்கிற வார்த்தையை வைத்திருக்கிறார்கள்.

விதவன் என்று இருக்கலாம்; ஆனால், இங்கே ஒருவரும் விதவனாக இல்லை. பெண்தான் வாழ்நாள் முழுவதும் விதவையாக இருக்கிறாரே தவிர, – ஒரு குலத்துக்கு ஒரு நீதி – பெண்ணுக்குத்தான் கட்டுப்பாடு, கற்பு எல்லாம். அவரைப் பார்க்கக்கூடாது, இவரைப் பார்க்கக்கூடாது. நீ மொட்டை அடித்துக் கொள்; நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ளக்கூடாது; பூ வைத்துக்கொள்ளக் கூடாது என்று அந்தப் பெண்ணின் வாழ்க்கையை நாசப்படுத்தி விட்டார்கள்.

அந்தப் பெண்ணை ஒரு மனித ஜீவனாகவே மதிக்கவில்லை. இது ஆணாதிக்க சமுதாயமாக இருப்பதினால், இந்த எஜமானத்துவம் உள்ள அந்த ஆண்கள் _- இவன் விதவனாகவே இல்லை -_ எப்பொழுது மனைவி சாவாள்; அடுத்தவளைப் பார்க்கலாம் என்று இருக்கின்றானே.

அதனால்தான் பெரியார் சொன்னார், கற்பா? கற்பு என்பது அடிமைத்தனத்திற்குப் பயன்படுகிறது. கட்டுப்பாட்டுக்குத்தான் அது என்றால், அது ஏன் ஒரு வழிப் பாதையாக இருக்கவேண்டும். இரண்டு பேருக்கும் இருக்கவேண்டும் அல்லவா?

அய்யாதான் சொன்னார், விதவைத் தன்மை என்பது இருக்கக்கூடாது; விதவைகளே இருக்கக்கூடாது என்றார்.

வெளிநாடுகளில் உள்ளவர்களைப் பாருங்கள், கணவன் இறந்தால், கொஞ்ச நாள் கழித்து இன்னொருவரை அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

“எந்த சமுதாயத்தில் மணவிலக்கு இல்லையோ, எந்த சமுதாயத்தில் விதவைத் தன்மை தொடர்ந்து இருக்கிறதோ, அங்கே விபச்சாரம் தவிர்க்க முடியாதது!’’ என்றார் பெரியார்.

ஆகவேதான், இந்த விதவைத் தன்மை என்பதை அடியொடு ஒழிக்கவேண்டும். அது ஒரு போலித்தனம்.
கேள்வி: மாற்றம் ஒன்றே மாறாதது; மாற்றங்கள் பல நிறைந்த சமூகத்தில், தங்களால் ஏற்பட்ட மாற்றங்களில், முக்கியமான ஒன்றை சொல்லுங்கள்?

பதில்: நீங்கள்தான் மாற்றம்; இதற்கு முன் உங்கள் அப்பா படிக்கவில்லையே! உங்கள் அப்பாவிற்கு ஏமாற்றம், உங்களுக்கு மாற்றம்.

கேள்வி: கடவுள் ஒழியவேண்டும்; ஜாதி ஒழியவேண்டும் என்று கூறுகிறீர்களே, அப்படியானால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக உரிமை ஏன் கேட்கிறீர்கள்?

பதில்: கடவுள் ஒழியவேண்டும் என்பது கொள்கை. அனைவருக்கும் அந்த வாய்ப்பு இருக்கவேண்டும் என்பது மனித உரிமை. ஒரு மனிதனுக்குள்ள உரிமை இன்னொரு மனிதனுக்கு மறுக்கப்படக் கூடாதே தவிர வேறொன்றுமில்லை.

இந்த மண்டபத்திற்குள் வந்து நான் சாப்பிடலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்வது என்னுடைய உரிமை. எல்லோரும் பந்தியில் உட்கார்ந்திருக்கும்பொழுது, சிலரைப் பார்த்து, நீ குட்டையாக இருக்கிறாய்; நீ கருப்பாக இருக்கிறாய், நீ எழுந்து போ என்றால், நீங்கள் விட்டுவிடுவீர்களா? நான் ஏன் சாப்பிடக்-கூடாது என்று கேட்பீர்களா? இல்லையா? அதுபோன்றுதான் மனித உரிமைகளுக்காகப் போராடுவது.

ஆகவே, கடவுள் மறுப்பு என்பது கொள்கை. அதிலிருந்து நாம் மாறவில்லை. நாங்கள் யாரும் கடவுள் மறுப்பாளரை அர்ச்சகராக நியமிக்கவேண்டும் என்று சொல்லவில்லை.

அந்த வாய்ப்பை எல்லோருக்கும் கொடு. அதில் ஏன் ஜாதியை நிலைநாட்டுகிறீர்கள்? என்பதே நம் கேள்வி. அதேபோன்றுதான், நாங்கள் சபரிமலைக்குப் போகவேண்டும் என்று பெண்களும் கேட்கிறார்கள்; எங்களை ஒதுக்காதீர்கள் என்கிறார்கள்; அந்த உரிமையைப் பெண்களும் கேட்கிறார்கள். நீதிமன்றமும் அவர்களை ஏன் ஒதுக்குகிறீர்கள், அது நியாயம்தானே என்று சொல்லியிருக்கிறது.

கேள்வி: வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவரை, தாழ்த்தப்பட்டவர் ஒருவர் திருமணம் செய்தால், வாழ முடியாத நிலை உள்ளதே, இந்தக் கொடுமை எப்பொழுது தீரும்?

பதில்: நம் எல்லோருக்கும் புத்தி வந்தால் தீரும். அதிலொன்றும் சந்தேகமில்லை. ஜாதி என்பதே அர்த்தமில்லாதது என்று தெரியவேண்டும்.

முதலில் மன மாற்றம் வரவேண்டும். திராவிடர் கழகத்தில் நிறைய ஜாதி மறுப்புத் திருமணங்கள் எந்தவிதமான பிரச்சினைகள் இல்லாமல் நடைபெறுகிறதே _- நம்முடைய சுயமரியாதை திருமண நிலையத்தில் நடைபெறுகிறதே!

என் ஜாதி மேலானது; உன் ஜாதி கீழானது என்று மனதில் ஒரு பைத்தியக்காரத்தனம் இருப்பதினால் _- பெற்றோர்களுக்கு அறிவை கொடுக்கவேண்டும்; தெளிவை உண்டாக்க வேண்டும். அதைத்தான் இந்த இயக்கம் செய்து வருகின்றது.

கேள்வி: நாட்டிலுள்ள மக்கள் சுதந்திர மாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ ஒழிக்கப்படவேண்டியது எது?

பதில்:முதலில் அதற்குத் தடையாக இருக்கின்ற கடவுள், மதம், ஜாதி, போலி அரசியல், வித்தை காட்டுகின்ற அரசியல், கவர்ச்சி அரசியல் இவை அத்தனையையும் ஒழித்துவிட்டு, அறிவார்ந்த சிந்தனை வந்து, உண்மையான மக்கள்நாயகம் வரவேண்டும் என்றால், இன்றைய தேர்தல் முறைகளை மாற்றி, ஒரு நல்ல தெளிவுள்ள, மக்கள் நலம் சார்ந்த அரசாங்கம் வந்தால், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இரண்டாவதாக, மகிழ்ச்சியைப்பற்றி பெரியார் ஒரு கருத்தை சொன்னார். எல்லோரும் _ சமவாய்ப்பு, சமஉரிமை பெற்றிருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

எனவே, பேதமற்ற நிலையே, வருத்தமற்ற நிலை, மகிழ்ச்சியான நிலை _- அதனை உருவாக்குவதுதான் சமதர்மத்தின் எல்லை   _ சமதர்மத்தின் நோக்கம் _- அதனைச் செய்வதுதான் திராவிடர் கழகத்தின் பணி.

கேள்வி: செவ்வாய் தோஷம், ராகு, கேது தோஷம்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: செவ்வாய்க்கோளுக்கு  செவ்வாய்க் கிழமையன்று ராக்கெட்டை அனுப்பி விட்டார்கள். அங்கேயே இறக்கிவிட்டார்கள். இன்னமும் இங்கே உள்ளவன் செவ்வாய் தோஷத்தைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறான். வெளிநாட்டுக்காரர்களிடம் செவ்வாய் தோஷத்தைப்பற்றிக் கேட்டுப்பாருங்கள்; ஒரு தோஷமும் இல்லை என்பார்கள்.

செவ்வாய்க்கிழமை அன்று சாப்பிடுபவர்-களுக்கு அஜீரணம் ஆகிவிடுகிறதா? செவ்வாய்க்கிழமையில் எல்லா பணிகளையும் செய்கிறார்களா இல்லையா? எந்த வேலையை நிறுத்துகிறார்கள்? சொல்லுங்கள் பார்ப்போம்!

அப்பாவிப் பெண்களை ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் செவ்வாய்த் தோஷம் என்று சொல்லி. திருமணம் ஆகாமல் எவ்வளவோ பெண்கள் மூடத்தனத்தில் மூழ்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவையெல்லாம் மூளையில் இருக்கின்ற அழுக்கு; வீட்டின் மூலையில் உள்ள குப்பைகளையெல்லாம் வெளியில் தூக்கி எறிகிறோம்; மூளைக்குள் இருக்கும் குப்பைகளை, ஈரோட்டுப் பணியின்மூலம்தான் வெளியில் தள்ள முடியும்.

கேள்வி: நம் இயக்கம் வேகமாகப் பரவ நாம் என்ன செய்யவேண்டும்?

பதில்: நாம் ஒவ்வொருவரும் நடமாடும் பிரச்சார இயந்திரமாக வேண்டும். இந்தப் பயிற்சிப் பட்டறை முடிந்து ஊருக்குப் போகும்போது, ஒருவர் கேள்வி கேளுங்கள்; இன்னொருவர் பதில் சொல்லுங்கள். அதனைக் கேட்பவர்கள், என்னவென்று கேட்பார்கள். இதுதான் பிரச்சாரம். ஆகவேதான், யாரோ செய்வார்கள் என்று நினைக்காதீர்கள். ஒவ்வொரின் பங்களிப்பும் இருக்கவேண்டும். தன்னந்தனியராகத்தான் பெரியார் இயக்கத்தைத் தொடங்கினார். இன்றைக்கு உலகளாவிய அளவிற்கு அந்த இயக்கம் எப்படி வளர்ந்திருக்கிறது. பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!!

எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்படாத பிரச்சாரம்! எதிர்நீச்சலைப்பற்றி கவலைப்படாத பிரச்சாரம்!! தங்களைப்பற்றி அவதூறு பரப்புகிறார்களே என்பதைப்பற்றி கவலைப்-படாத பிரச்சாரம்!!! தங்கு தடையற்ற பிரச்சாரம்.

எனவே, பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!! என்பதை செய்யுங்கள். அதுதான் மிக முக்கியமானது.

கேள்வி: மாணவர்கள் தங்கக்கூடிய விடுதிகளில், எஸ்.சி., விடுதி, பி.சி., விடுதி என்று இருப்பது ஜாதியை வளர்க்காதா?

பதில்: முதலில், அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கவேண்டும் என்றுதான் ஆரம்பித்தார்கள்.
நம்மைப் பொறுத்தவரையில் அப்படி இருக்கக்கூடாது என்பதுதான் நம்முடைய கருத்து.
“பொதுக் கிணறு, பொது சுடுகாடு, பொதுக் குளம், பொது வாய்ப்பு என்று இருக்கவேண்டும்.

தனித்தனியாக வைத்தால், அவர்களைப் பிரித்து பிரித்து காட்டுவதாகத்தான் இருக்கும். ஆகவே, அது கூடவே கூடாது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்றார் பெரியார்.

சிங்கப்பூரில், மலாய் என்று ஒரு இனம்; சைனீஸ் 78 சதவிகிதத்தினர். இந்தியன்ஸ் என்று சொல்லகூடிய தமிழர்கள், மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து 10, 12 சதவிகிதம். அங்கே அவர்கள் வீடு கொடுக்கும் பொழுது எப்படி கொடுப்பார்கள் என்றால், ஒரு சைனீஸ், ஒரு மலாய்க்காரர், ஒரு தமிழர் அல்லது இந்தியர்.
மாறி, மாறித்தான் கொடுப்பார்கள். யாரையுமே தனியே விடமாட்டார்கள்.

தனிப்பட்ட இரண்டு மாணவர்களுக்குத் தகராறு ஏற்பட்டால், நம்ம சமுதாய மாணவர்களே ஒன்று சேருங்கள், என்று சொல்லி ஒன்று சேருகிறார்கள். இதற்கெல்லாம் இடமே இருக்கக்கூடாது.

ஆகவே, அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைக்காமல், அவர்கள் எல்லோரும் கலந்துதான் இருக்கவேண்டும்.

ஒவ்வொன்றும் பெரியார் சமத்துவபுரத்தை கலைஞர் கண்டதைப்போல, சமத்துவபுரமாக எல்லா பகுதிகளும் இருக்கவேண்டும்.

கேள்வி: தந்தை பெரியார் கருப்புச் சட்டை ஏன் அணிந்தார்?

பதில்: குறிக்கோளோடு கூடிய கொள்கையின் அடையாளம் கருப்புச் சட்டை. நட்பில் சமரசம் உண்டு – லட்சியத்தில் சமரசம் கிடையாது என்று கருதக்கூடிய கருப்புச் சட்டைகள் இருக்கவேண்டும். எனவே, சமூக இழிவை நீக்கி, ஒரு சமுதாயப் புரட்சியை உருவாக்குவதற்கு, நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள இதை அணிகிறோம்.

நீதிமன்றத்தில் ஏன் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறார்கள் _- சமூகநீதிக்காக அணிகிறார்கள்.
இவ்வளவு நேரம் கேள்வி கேட்டீர்கள், சிந்தியுங்கள்! ஆழமாக சிந்தியுங்கள்!! மேலும் சந்தேகம் என்றால், கேள்வியை எழுதி அனுப்பலாம்.

வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
வணக்கம், நன்றி!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *