மருத்துவர் இளவழகன்
காலை எழுந்தவுடன் செய்தித் தாள்களில் ராசிபலன் படிப்பதிலிருந்து தொடங்குகிறது படித்தவர்களின் மூடநம்பிக்கை. அதுவே இரவில் அறிவியல் பூர்வமாக நிரூபணமாகாத பாலியல் தீர்வுகளை முன்வைக்கும் மாற்று மருத்துவ பித்தலாட்ட நிகழ்ச்சிகள் வரை அது நீடிக்கிறது…
மூடநம்பிக்கையானது பழங்காலந்தொட்டு மக்களிடையே நிலவி வரும் ஒன்று. ஏதோ ஒரு காரணத்திற்காக சொல்லப்பட்டு மக்களிடையே கடவுள் மீது ஒரு பக்தியையும், பேய்கள் மீது ஒரு பயத்தையும் உண்டாக்கிட்டால் மக்கள் நிச்சயம் அந்தச் செயலை செய்யமாட்டார்கள் என்ற நோக்கத்தில் இம்மூடநம்பிக்கைகள் நிறுவப்பட்டன. உதாரணத்திற்கு இரவு நேரங்களில் பேய்கள் உலா வருவதால் புழற்கடைக்கு செல்லக்கூடாது என்பதும், இரவு நேரங்களில் கூரான பொருட்களை உபயோகிக்கக் கூடாது என்பனவும் மேற்கூறிய மூடநம்பிக்கைகளில் சில… இவை ஏன் கூறப்பட்டிருக்க கூடும் என்பதைப் பார்ப்போம். அக்காலங்களில் புழற்கடையில் தான் கிணறு இருக்கும், பெரும்பாலும் தரைக்கிணறுகள் தான்.. மதிலிருக்காது.. இரவு நேரங்களில் சென்றால் ஒளி குறைவாக இருப்பதால் கிணற்றுள் எங்கே விழுந்து விடுவார்களோ என்ற நோக்கில் பரப்பப்பட்ட மூடநம்பிக்கை இது.. இதேபோல ஒளிகுறைப்பாட்டினால் இரவு நேரங்களில் கூர்மையான பொருட்களை உபயோகித்தால் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கும் என்பதால் பல கட்டுக்கதைகள் கட்டப்பட்டன. அதில் ஒன்று தான் சரசுவதி மலையில் ஊசி முனையில் தவம் புரிகிறார் என்ற மூடநம்பிக்கை. இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகள் உலகம் பூராவும் பரவிக் கிடக்கின்றன. படிப்பறிவு வளர வளர பல நாடுகளில் மூடநம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருகின்றன. பல நாடுகளில் கடவுள் மறுப்பாளர்கள் பெரும்பான்மையாக இருக்கும் அளவு முன்னேறியுள்ளனர்.
நம் நாட்டிலோ படிப்பறிவு வளர்ந்தாலும் மூடநம்பிக்கையும் அதனோடு போட்டி போட்டுக்கொண்டு வளர்கிறது. முன்பு நிலவிய மூடநம்பிக்கைகளைவிட இப்போது படித்தவர்கள் மத்தியில் நிலவும் மூடநம்பிக்கை-யானது உடல்ரீதியான, பொருளாதார ரீதியான, பாலியல் ரீதியான சுரண்டல்களை அதிகரிக்கச் செய்ததோ டல்லாமல் சமூகநீதிக்கு எதிராகவும் மக்களை திருப்புகிறது. பாமரத்தனமான மூடநம்பிக்கைகளின் பின் ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம். ஆனால் படித்தவர்கள் மத்தியில் நிலவும் மூடநம்பிக்கைக்குப் பின்னால் நிலவும் ஒரே காரணம் சுரண்டல் மட்டுமே.
பிறந்த குழந்தைகளுக்கு ஜாதகம் பார்த்த காலம் மாறி இன்று ஜாதகத்திற்கு ஏற்ப குழந்தைகள் பிரசவிக்கப்படுகின்றன. இது படித்த மக்களிடம் மட்டுமே நிலவும் மூடநம்பிக்கை. சுகப் பிரசவமாகக் கூடிய வாய்ப்பிருந்தும் அதை வலுக்கட்டாயமாக அறுவை சிகிச்சையாக மாற்றப்படுகிறது. இதனால் தாய்க்கோ சேய்க்கோ பாதிப்பு ஏற்படலாம் என சம்பந்தப்பட்டவர்கள் உணர மறுக்கின்றனர். இதற்கு மெத்தப் படித்த மருத்துவர்களும் துணை போவது கவலை அளிக்கிறது. இத்தகைய மூடநம்பிக்கைகளின் உச்சமாக உயிர்காக்கும் உயர் சிகிச்சை பெற்றுக்கொள்ள நல்ல நேரம், நாள், கிழமை பார்ப்பது. இத்தகைய செய்கையால் உயிரிழந்த பல பேரை மருத்துவர் என்ற முறையில் நான் அறிவேன்.
படித்த வர்க்கத்திடம் பிரத்தியேகமாக காணப்படும் பொருளாதாரச் சுரண்டல்களில் முக்கியமானது வாஸ்து சாஸ்திரம். இது இன்று பல கோடிகள் புழங்கும் தொழிலாகவே மாறிவிட்டது. அதேபோல் அட்சய திருதியை. 10 வருடங்களுக்கு முன் இப்படி ஒரு சொல்லையே பல பேர் அறிந்திருக்க மாட்டார்கள். இது மத்திய மற்றும் உயர்தட்டு மக்களை நோக்கி தொடுக்கப்படும் பொருளாதார மோசடி. இந்நிகழ்வானது தங்க வியாபாரம் குறைவாக உள்ள நாட்களில் வருவது தான் இதன் கூடுதல் சிறப்பு.
இன்று கொடிகட்டிப் பறக்கும் இன்னொரு சுரண்டல் சாம்ராஜ்ஜியம்- _ கார்பரேட் மடங்கள். இதில் சிக்குவதும் பெரும்பாலும் படித்தவர்கள் தான். ஏழைகளால் அம்மடங்களின் கதவைக் கூட தாண்ட முடியாது. எத்தனை குற்றச் சாட்டுகள் வந்தாலும் அம்மடங்களின் தொழில் மட்டும் தடையின்றித் தொடர்வதற்கு தங்களைப் பொருளாதார ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் சுரண்ட அனுமதிக்கும் படித்த, உயர்தட்டு மக்களின் மூடநம்பிக்கையே காரணம்.
மேற்கூறிய மூட நம்பிக்கைகள் தனிநபர்-களை பாதிப்பவை. சமூக நீதிக்கு எதிரான மூடநம்பிக்கைகள் ஓரு சமூகத்தையே பாதிப்பவையாகும். இதில் முக்கியமானது இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவை. இட ஒதுக்கீட்டினால் பலன் அனுபவித்தவர்களும் இட ஒதுக்கீடுக்கு எதிராக மல்லுக்கட்டுவது தான் வேதனை. தங்கள் சமூகம் கடந்து வந்த போராட்டங்களை மறந்து, திட்டமிட்டு பரப்பப்படும் பொய் பிரச்சாரத்திற்கு பலியாகி தங்களின் உரிமையை இழக்கவும் செய்யும் மிகப்பெரிய மூடநம்பிக்கை இது.. கல்வி கற்ற உடனே வேலைக்கு சேர்ந்து ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் நல்ல ஊதியத்திற்கு வேலை செய்யும் மக்கள் நாற்பது வயது வரை இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவே உள்ளனர். நாற்பது வயதைக் கடந்த தங்களுக்கு நியாயமாக வரவேண்டிய பதவி உயர்வு தடுக்கப்படும் போதே அவர்கள் இடஒதுக்கீட்டின் மேன்மையை உணர்கிறார்கள்.
படித்த மக்களிடம் நிலவும் மூடநம்பிக்கைகள் மலையளவு, மேல் குறிப்பிட்டவை கடுகளவு மட்டுமே. படிக்காத பாமர மக்களிடம் நிலவும் மூடநம்பிக்கைகள் அறியாமை இருள் விலகும்போது பனியாய்க் கரைந்துவிடும். படிக்கும் மக்களிடம் நிலவும் மூடநம்பிக்கை-களை போக்குவது மிகக் கடினம். இவை திட்டமிட்டு பரப்பப்படும் விஷமங்கள். இதற்கு முக்கிய காரணம் படிப்பறிவுக்கும் பகுத்தறிவுக்கும் உள்ள இடைவேளியே ஆகும். பள்ளி கல்லூரிகளில் படிப்பறிவு போதிக்கப்-படும் அளவு பகுத்தறிவு போதிக்கப்படுவது இல்லை. மேலும் படிப்பறிவும் இங்கே மாணவர்களை அடிபணிய கற்றுக் கொடுக்கின்றனவே தவிர சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கத் தவறிவிட்டன.
இது சமூக ஊடகங்களின் காலம். மூடநம்பிக்கையை வளர்ப்பதில் அவை மிக முக்கிய பங்காற்றுகின்றன. திருநள்ளாறில் செயற்கைகோள் வேலை செய்யாது, இதை சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று தொடங்கி, ஆண் குழந்தை பிறக்க வழிமுறைகள் வரை சகலவிதமான மூடநம்பிக்கைகள் சமூக வலைத்தளங்களில் உலவுகின்றன. இதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் நம் மக்கள் இதைப் பகிரவும் செய்கின்றனர். மக்கள் உண்மை எது பொய் எது என்று உணராத வரை மூடநம்பிக்கையைப் போக்குவது இயலாத காரியம்.
உலகெங்கிலும் பகுத்தறிவும் கடவுள் மறுப்பும் வேகமாகப் பரவி வரும் சூழலில் நம் நாட்டில் மூடநம்பிக்கைகள் பரவி வருவது வருத்தத்திற்குரிய செய்தி. திராவிட அரசியலின் மறுமலர்ச்சியான நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடும் வேளையில் இம்மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போரை தொடர்வது பெரியாரிய இயக்கங்களின் கடமையாகும். பள்ளி கல்லூரிகள் தோறும் பகுத்தறிவுப் பாசறைகளையும், அம்பெத்கர் பெரியார் வாசக வட்டங்களை உருவாக்குவதுமே இதற்குச் சரியான தீர்வாக அமையும் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் இல்லை.