சு.அறிவுக்கரசு
அண்மைக்காலமாக புதிதாகச் சேர்ந்திருக்கும் கற்பனைச் சாத்திரம் வாஸ்து. பூமிக்கு சாத்திரம் வாஸ்து. பூமிக்கு வஸ்து என்று பெயராம். இந்த வஸ்துவின் மேல் கட்டப்படுவதால் வீடு வாஸ்து என்று பெயர் பெறுகிறதாம். வாஸ்து சாத்திர வல்லநர்களாகக் கீழ்க்காணும் நபர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
1.பிருகு, 2.அத்திரி, 3.விசுவகர்மா,
4.வசிஷ்டன், 5.மயன், 6.நாரதன், 7.நக்னஜித், 8.விசாலாட்சன், 9.புரந்தான், 10. பிரம்மா, 11.குமாரசாமி, 12.நதி, 13.சவுனகன், 14.பர்கன், 15.வாசுதேவன், 16.அநிருத்தன், 17.சுக்கிரன், 18.பிரகஸ்பதி.
இவர்களன்றி காஸ்யசில்பம் எனும் நூலெழுதிய கஸ்யப முனிவனும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமாம். இன்றைய மராட்டிய, ஆந்திராவில் மயனின் வாஸ்துவும், தமிழ்நாட்டில் பிருகுவின் வாஸ்துவும் வடநாட்டில் காஸ்யப வாஸ்துவும் கடைப்-பிடிக்கப்படுகிறதாம்.
தெனாலி இராமன், வேமண்ணா, இராமசுவாமி சவுத்தி£, வீரேசலிங்கம் போன்ற சீர்திருத்தவாதிகளைத் தந்த ஆந்திரம் தான் – இந்த வாஸ்து சாத்திரத்திற்குத் தந்தை, தாய் எல்லாம். நாடு முழுக்க மூடநம்பிக்கையைப் பரப்புவதில் முழுமூச்சாக இவர்கள்தான் இருக்கின்றனர்.
நால்வருணப் பாகுபாட்டை வாஸ்து சாத்திரமும் வலியுறுத்துகிறது. இனிப்பாகவும் நெய்போல் மணப்பதும் வெண்மையாக உள்ளதுமான மனை – பார்ப்பனர்க்கு, காரமாகவும் இரத்த வாடையுள்ளதும் சிவந்த நிறமும் உடைய மனை – சத்திரியர்க்கு, கசப்பாகவும் சோற்றின் மணமும் மஞ்சள் நிறமும் உடைய மனை – வைசியர்க்கு. வழக்கம்போலவே கள்ளின் மணமும் தாயச் சுவையும் கருப்பு நிறமுமுள்ள மனை – சூத்திரர்க்காம். கலப்பட நிறமும் ரசவாசனையும் உள்ள மனையை கலப்புமணச் சந்ததியர்க்கு உரியது என புதிய பிரிவு இந்தச் சாத்திரத்தில் மட்டும் உள்ளது. வியப்புதான். வருணக்கலப்பு ஏற்பட்டுவிட்ட பிந்தைய காலத்தில் எழுதப்பட்ட பிந்தைய பிற்போக்குச் சாத்திரம்.
தகுந்த விகித முறையில் பஞ்ச பூதங்களின் சேர்க்கைதான் வாஸ்து என்கிறார்கள். பஞ்ச பூதங்கள் எனப்படும் அய்ந்து தனிமங்களில் நான்குதான் உண்டு. வானம் தனிமம் அல்ல என்கிற சார்வாகத் தத்துவம் 5000 ஆண்டுகட்கு முன்பே இந்நாட்டில் நிறுவப் பெற்றது. வானம் எனும் தனிப் பொருளே கிடையாது எனும்போது அதையும் உள்ளடக்கிய அய்ந்து தனிமங்களின் சேர்க்கை வாஸ்து என்பது ஆகாயக் கட்டடம்.
நிலம், நீர், நெருப்பு ஆகிய மூன்று தனிமங்களோடு தாமிரம், வெள்ளி ஆகிய இரண்டையும் சேர்த்து அய்ந்து தனிமங்களாகச் சீனமரபு கூறுகிறதாம். எதை ஏற்பது?
சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலகக் கண்காட்சியில் இந்தியாவும் பங்கு பெற்றது. இதற்கான ஸ்டால் வடிவமைக்கும் பொறுப்பு புகழ்பெற்ற பெண் கட்டடக் கலைஞருக்கு தரப்பட்டு அவரும் அழகாகக் கட்டி முடித்தார். கண்காட்சி திறப்பு விழாவுக்குச் சில நாட்கள் முன்னதாக கட்டடங்களைப் பார்வையிட்ட அரேபிய அதிகாரிகள் இந்தியக் கட்டடத்துக்கு அனுமதி மறுத்துவிட்டனர். காரணம் என்னவென்றால் கழிப்பறை மெக்கா நகரம் இருந்த திசைநோக்கி கட்டப்பட்டிருந்தது. அவர்கள் மதக் கருத்துப்படி கூடாதாம். எனவே, அவசர அவசரமாகக் கழிப்பறை இடிக்கப்பட்டு வேறு திசையில் மாற்றிக் கட்டப்பட்டது. அந்தச் செய்தியை இந்தியப் பத்திரிகைகள் வெளியிட்டு அரேபியர்களைக் கிண்டல் செய்திருந்தன. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி இது. பாரத புண்ணிய பூமியின் வாஸ்து சாத்திரப்படி கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ கழிப்பிடத்தில் அமரக் கூடாதாம். வடக்கு, தெற்குப் பக்கங்களைப் பார்த்தாற்-போல்தான் அமர வேண்டுமாம். அதற்குத் தக்காற்போல்தான் கழிப்பிடம் கட்டப்பட வேண்டுமாம். இஸ்லாமியனைக் கிண்டல் செய்ய இந்துவுக்கு ஏது யோக்கியதை? யோசிக்க வேண்டும்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலின் வருமானம் 420 கோடி என்று பத்திரிகைச் செய்தி கூறுகிறது. பணம் கொட்டுவதற்கு – பெரிய கல் முதலாளியாக – பாலாஜி இருப்பதற்கு – மக்களின் மடமை காரணம். கள்ளநோட்டுக்காரனும் கருப்புப் பணக்காரனும் கடத்தல் வணிகனும் கத்தை கத்தையாகப் பணத்தை இரண்டு இடத்தில் கொட்டு-கிறார்கள். ஒன்று திருப்பதி உண்டி. மற்றது ஆர்.எஸ்.எஸ். கட்சியிடம், விஜயதசமியன்று. இரண்டில் முதல் கல் முதலாளியாவது கணக்கு தருகிறார். இரண்டாவது இடம் இரசீதும் தருவதில்லை. கணக்கும் கிடையாது. தணிக்கையும் கிடையாது. காரணம் குரு தட்சணையாம். இந்தத் திருப்பதி கோயிலுக்கு இவ்வளவு பணம் வருவதற்குக் காரணம் வாஸ்துதானாம்.
வாஸ்துவைத் தூக்கிப் பிடிப்பதற்கு ஆதிசங்கரனை அதல பாதாளத்தில் தூக்கியெறிந்து விட்டனர். திருப்பதி மலையில் பெருமாளுக்கு சிறீசக்கரம் போட்ட ஆதிசங்கரன் காளஹஸ்தி சிவனுக்கும் சிறீசக்கரம் போட்டாராம். இரண்டு கடவுளுக்கும் போடப்பட்டது ஒரு சக்கரம். போட்டது ஒரே நபரால். ஒருவர் மட்டும் ஓகோ என்று பணத்தில் புரளுகிறார். காளஹஸ்தி சிவபெருமான் கஷ்ட திசையில் இருக்கிறார் என்றால் சக்கரம் ஒன்றும் கிழிக்கவில்லை என்று சொல்கிறார்கள். சக்கரம் செய்து விற்றுக் கொண்டிருக்கும் குமுதங்கள் என்ன பதில் கூறும்?
வாஸ்துக் கோளாறால் பாதிக்கப்பட்டோர் எனக் கூறப்படும் பட்டியலைப் பார்த்தால் பயமே வரும்.
1. திருப்பதியில் முதன்முதல் தரிசிக்கப்பட வேண்டிய வராகசாமி.
2. சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேசுவரசாமி.
3. காஞ்சிபுரம் வரதராஜசாமி.
4. திருப்பதியின் முதல் வாசல் எனப்படும் பிரசன்ன வெங்டேசுவரசாமி.
5. அகோபிலம் இலட்சுமி நரசிம்மசாமி.
6. காளஹஸ்தி பரமசிவன்.
7. கர்நூலில் உள்ள சீர்டிசாயிபாபா.
8. பத்ராசலம் இராமன்.
9. சிம்மாச்சலம் நரசிம்மசாமி.
10. அய்தராபாத் மைசம்மா (பாக்கியலட்சுமி தேவி)
11. ஒரிசா கோனார்க் சூரியன்.
12. தமிழ்நாடு கலைஞரின் சிலை.
13. புட்டபர்த்தி சாயிபாபா மடம்.
பார்ப்பனர்கள் எனக்கு கடவுள்கள் என்று கிருஷ்ணனே கூறியதாக கதையில் எழுதி வைத்து அதன் வாயிலாகத் தங்களை உயர்த்தி கடவுளை விடத் தாங்கள் உயர்வு என்று எழுதி வைத்துக் கொண்டிருப்பதைப்போல – கோயில்கள் வருமானமின்றி வறுமையில் வாடக் காரணம் வாஸ்து கோளாறு என்று எழுதி வாஸ்துவை உயர்த்திப் பிடிக்க முயலுகிறார்கள். அப்படியானால் வாஸ்துவை சமாளிக்கக் கையாலாகாத கடவுள் என்று ஆகிவிடுமே என்று யோசித்துப் பார்க்க வில்லை. இவர்கள் சம்பாதிக்க வேண்டும். அதற்கு மக்கள் மடமையில் ஆழ்ந்திருக்க வேண்டும். இதற்காகக் கடவுளையே காவு கொடுக்கத் தயங்க மாட்டார்கள்.
போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலை வாஸ்து சாத்திரப்படி இல்லாததால் அழிவு ஏற்பட்டது என்கிறார்கள். கவனக்குறைவான இயந்திர பராமரிப்புதான் காரணம் என்கிறது நீதிமன்றம். எதை ஏற்றுக் கொள்வது? ஆண்டுதோறும் ஆர்ப்பாட்டம் செய்யும் போபால் நகர மக்களிடம் கம்பெனி காரணமல்ல – வாஸ்துதான் காரணம் என்று உபதேசம் செய்யலாமே. செய்தால் வாஸ்துகாரர்கள் செமையாக உதை தின்பார்கள்.
உலகின் உயரமான கட்டடங்களெல்லாம் வாஸ்து பார்த்துதான் கட்டப்பட்டவையா? இவர்கள் புளுகும் இந்துக் கோயில்களைவிடப் பழைய சிறந்த, பெரிய கட்டடங்களெல்லாம் உலகம் முழுவதும் கட்டப்பட்டு இருக்கின்றனவே வாஸ்து சாத்திரப்படிதானா? பக்கிங்காம் அரண்மனையில் உள்ள அரச வம்சம் தொடர்ந்திருப்பது வாஸ்து பலமா? செர்மனியின் கெய்சர் மன்னரும், ஃபிரான்சின் லூயி மன்னரும், ஒழிந்தது வாஸ்து வலிவின்மையாலா? பிரமிடு வாஸ்து பலம் என்றால் அதைக் கட்டிய பாரோ மன்னர்களின் மாளிகைகள் எங்கே? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
திரு. திருப்பதி ரெட்டி (முன்னாள் வாஸ்து ஆலோசகர் திருப்பதி தேவஸ்தானம்) என்பார் எழுதி தெலுங்கில் 20 பதிப்புகள் வெளிவந்ததும் தமிழில் எட்டு பதிப்புகள் வெளிவந்ததுமான வாஸ்து சாஸ்திர வாஸ்தவங்கள் எனும் நூலில் அடுக்குமாடி ஃபிளாட்களுக்கு வாஸ்து சாஸ்திரம் கிடையாது என்றும், இருப்பினும் சாஸ்திரம் உள்ளதாகப் பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குமுதம் போன்ற கும்பலைச் சாடியிருக்கிறார். எதை நம்புவது?
அம்மன் தரிசனம் எனும் இதழ் வாஸ்து புருஷன் ஒவ்வொரு நாளும் முதல் ஜாமத்தில் வடக்கு திசையில் படுத்து கிழக்கு திசையைப் பார்க்கிறார். மூன்றாம் ஜாமத்தில் விசேசமாக வாஸ்து புருஷன் இல்லையாம் (வேறு சோலி பார்க்கப் போய்விடுவார் போலிருக்கிறது) நான்காம் ஜாமத்தில் மேற்கில் தலைவைத்து வடக்குப் பக்கம் சுப பார்வையை வீசுகிறார் என்றெல்லாம் எழுதியுள்ளது. இதனடிப் படையில் வீடு கட்ட காலநேரம் குறித்துள்ளது.
அய்ப்பசி, கார்த்திகை மாதங்களில் கிழக்குத் திசையில் வீடு கட்டலாம். தை, மாசி மாதங்களில் கிழக்கு அல்லது மேற்கு திசையில் கட்டலாமாம். பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் கிழக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் கட்டலாமாம். ஆனி, ஆவணி மாதங்களில் வடக்கே வீடு கட்டலாம் என்றெல்லாம் கூறியுள்ளது. ஒரு மாதம் இரண்டு மாதத்தில் வீடு கட்டி முடியாது. எனவே, இவர்கள் குறித்துள்ள மாதங்களில் வீட்டைக் கட்ட ஆரம்பித்து முடிக்க முடியாது. பின் எப்படி இது சாத்தியம்? கட்டடம் கட்ட ஆரம்பித்தலைச் சொல்கிறார்களா? வாஸ்து பண்டிதர்கள் விளக்கவில்லை.
இதை திரு. திருப்பதி ரெட்டி தம் நூலில் ஏற்றுக் கொள்ளாமல் மறுக்கிறார். அய்தராபாத் திரு.திருப்பதி ரெட்டி, வீட்டுமனை சதுரமாகவோ, செவ்வகமாகவோ எப்படி இருந்தாலும் கட்டடம் சதுரமாகக் கட்டப்பட வேண்டும் என்கிறார். ஆனால், அம்மன் தரிசனம் சதுரமனை நிறை யோகத்தைத் தரும் என்றும், செவ்வகமனை அதிர்ஷ்டமானது என்றும் எழுதுகிறது. வாஸ்து வீட்டுமனைக்கா, வீட்டுக்கா? வீட்டுமனை வஸ்து – வீடு வாஸ்து. எனவே, வாஸ்து சாஸ்திரம் வீட்டுக்குத்தான் என்கிறார் திருப்பதி ரெட்டி. அம்மன் தரிசனம் ஏன் குழப்புகிறது?
போர்வெல், செப்டிக் டாங்க், டாய்லட், டைனிங் டேபிள், கிரைன்டிங் மெஷின், கேஸ்ஸ்டவ் இவையெல்லாம் எங்கெங்கே வைக்கப்பட வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வாஸ்து சாஸ்திரம் வராக புராணத்திலும், மத்ஸ்ய புராணத்திலும் சொல்லப்பட்ட 18 முனிவர்கள் காட்டும் நெறி என்றெல்லாம் புராண அளப்புகளை அளந்து விட்டுவிட்டு நவீன கண்டுபிடிப்புகளை வைக்கும் இடம் பற்றி வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது என்றால் இந்தப் புளுகு கந்தபுராணத்திலும் இல்லையென்பார்கள். கந்தபுராணத்தையே வாஸ்து சாஸ்திரம் தோற்கடித்து விடும்போல் தெரிகிறதே.
இந்த சாஸ்திரப்படி பெட்ரூமும், டாய்லட்டும், டைனிங்ஹாலும் வைத்து அந்தக் காலச் செல்வந்தர்கள் வாழ்வாங்கு வழ்ந்ததாகப் பழம்பெரும் இலக்கிய வரலாறுகள் கூறுகின்றன என்று அம்மன் தரிசனம் எழுதுகிறது. எந்த இலக்கியம், எந்த வரலாறு என்று குறிப்பிட்டுக் கூற முடியுமா? பொத்தாம் பொதுவில் புளுகிவிட்டுப் போகக் கூடாது. பொறுப்போடு எழுத வேண்டும். வாஸ்து என்பதெல்லாம் பார்ப்பனக் கயிறு திரிப்புதானே. இலக்கிய வரலாற்று ஆதாரம் எது?
ஓவர்ஹெட் டாங்க் பற்றியும் வாஸ்து என்ன சொல்கிறது என்று அம்மன் தரிசனம் எழுதுகிறது.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி எப்பொழுது வந்தது? அதை ஈசான்ய மூலையைத் தவிர வேறு இடங்களில் அமைப்பது நல்லது என்று எழுதுகிறவர், வடக்கு ஈசான்யத்தில் தண்ணீர் டாங்க் இருந்தால் அவர்களுக்கு பணத்திற்கும் புகழுக்கும் குறைவே இருக்காது என்றும் எழுதுகிறார். எதை எடுத்துக்கொள்வது? பக்கத்துக்குப் பக்கம் பத்துவிதப் புளுகு புளுகுகிறார்களே, இதற்குப் பெயர்தான் வாஸ்து விஞ்ஞானம் எனும் வாஸ்தவ விஞ்ஞானமா?
அம்மன் தரிசனம், குளியலறை, கழிப்பறை ஆகியவற்றை தெற்கில், மேற்கில் அமைத்தால் 50 சதவீதம் சுப பார்வையை வாஸ்து புருஷனிடம் பெறலாம் என சிபாரிசு செய்கிறார். ஆனால், வளம் சேர்க்கும் வாஸ்து தேவன் எழுதும் திரு.ஜி.விஜய் கிருஷ்ணராவ் என்பவர் (மாத ஜோதிடம் இதழில்) வடமேற்கில் குளியலறை கழிவறை வரவேண்டும் என்பது வாஸ்து விதி என்று எழுதுகிறார். எது சரி? ஆளாளுக்கு, சாஸ்திரம் மாறுகிறதே. சோதிடம் போன்ற புளுகுதான்- புரட்டுதான் – மோசடிதான் வாஸ்துவும்.
பழைய வாஸ்து சாஸ்திரம் அரச மாளிகைகளுக்கும், ஆலயங்களுக்கும், மிகப் பெரிய மாளிகைகளுக்கும் மட்டும் உகந்ததாக இருந்தது. காலத்திற்கேற்ப அரசு மாளிகை அமைப்புகள் என்ற இடத்திலிருந்து சாதாரண கட்டட அமைப்புகளைக் கூறும் நிலைக்கு வந்துள்ளது என்று திருப்பதி ரெட்டி எழுதுகிறார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அரசரும் மாளிகைகளும் அற்றுப்போய்விட்ட காலத்தில் போஜனத்துக்கு வழியற்ற சோம்பேறிகள் அளந்துவிடும் அளப்புகள்தான் வாஸ்து என்பது இப்போது புரிகிறதா?
சாண எரிவாயுத் தொட்டி எங்கு அமைப்பது ஃபிரிட்ஜ், டி.வி. ஆன்டெனா எங்கு வைப்பது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறதாம். சாண எரிவாயு, டி.வி. போன்றவை வராகமிகிரர் காலத்தில் இருந்ததா? நம் பிரச்சாரத்தின் விளைவு அவர்கள் மூடப்பழக்கங்களுக்கு விஞ்ஞான விளக்கங்கள் கொடுக்க நினைக்கிறார்கள் – அல்லவா? அதேபோல தற்கால நாகரிக வாழ்வுக்குத் தக்கவாறு வாஸ்துவை வளைத்துக் கொள்கிறார்கள் என்பதல்லாமல் வேறொன்றுமில்லை.