காலஞ்சென்ற மேனாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடவுள், சோதிடம், இராசி இவற்றில் ஆழமான நம்பிக்கை உள்ளவர். ஆனால், மதச்சார்பின்மையில் பெருமளவு உறுதியாய் நின்றவர். சிறுபான்மையினர் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல், போன்ற மத நல்லிணக்கச் செயல்பாடுகளைச் செய்யத் தவறாதவர்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை பேரவைத் தலைவராக்கி, தாம் உட்பட அனைவராலும் வணங்கத்தக்க நிலையைக் கொண்டு வந்தார்.
தான் ஒரு பார்ப்பனப் பெண்ணாக இருந்தும் தன்னுடன் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகம் சார்ந்த ஒரு பெண்ணை சகோதரியாய் ஏற்று வாழ்ந்தார்.
அவர் நினைத்திருந்தால் ஒரு பார்ப்பனப் பெண்ணை தோழியாக்கி வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
இதுவெல்லாம் ஆரிய வட்டத்தை விட்டு அவர் வெளிவந்து மரபுகளைத் தகர்த்த செயல்பாடுகள் ஆகும். இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தார் போன்று அவர் இறப்பிற்குப் பின் நிகழ்ந்த செயல்பாடுகள் அமைந்தன என்பதோடு, இந்து மதவாதிகள், குறிப்பாக ஆரிய பார்ப்பனர்கள் கட்டிக் காத்த அனைத்து மரபுகளையும் அவரது இறப்பு நிகழ்வில் தகர்த்துத் தரையில் புதைத்துவிட்டார்.
பார்ப்பன மரபுப்படி உடலை எரிக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்டது. இதன்மூலம் இந்துத்துவா கொள்கைக்கு ஒரு மரண அடிகொடுத்தார்.
இரண்டாவதாக ஒரு பெண் இடுகாட்டிற்குச் சென்று இறுதிச் சடங்கு செய்வதை இந்து சம்பிரதாயம் ஏற்பதில்லை. ஆனால், தன் தோழி சசிகலாவே இறுதிச் சடங்கு செய்ய வழிசெய்தார். இது இந்துத்துவாவின் மீது அவர் தொடுத்த இரண்டாவது தாக்குதல்.
ஒரு பார்ப்பன பெண்மணிக்கு ஒரு பிற்படுத்தப்பட்ட பெண் இறுதிச் சடங்கு செய்ய வழிசெய்தது அவர் இந்துத்வாவின் மீது தொடுத்த மூன்றாவது தாக்குதல்.
இவையெல்லாம் ஒரு பார்ப்பன புரோகிதர் முன்னிலையிலே நடத்தப்பட்டதன் மூலம் எல்லாவற்றையும் அவாள் மூலமே நொறுக்கிவிட்டார்.
எந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும்? யார் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்பது உட்பட அவர் உயிருடன் இருக்கும் போதே அவர் கருத்து தெரிவித்திருந்தால்தான் இப்படியெல்லாம் நடந்திருக்க முடியும்! அவர் எண்ணத்தை மீறி அவர் இறப்பிற்குப் பின்கூட செயலாற்றும் துணிவு அங்கு யாருக்கும் இல்லை.
எனவே, தன் இறப்பின் இறுதிச் சடங்கின் மூலம் ஜெயலலிதா அம்மையார் இந்துத்துவாவை இடுகுழியில் புதைத்துவிட்டார் என்பதே, யார் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் மறுக்க முடியாத உண்மை!