ஆரிய தர்மத்தை ஆதரித்த அன்னிபெசண்ட்

டிசம்பர் 16-31

1847ஆம் ஆண்டில் லண்டனில் பிறந்த அன்னி வூட் தனது 19ஆவது வயதில் ‘ஆண்டில் பிராங்க் பெசண்ட்’ என்ற பாதிரியாரை மணந்து கிறித்துவப் பணியில் ஈடுபட்டார். 1870இல் சார்லஸ் பிராட்லாவோடு இணைந்து ‘நேஷனல் ரிபார்மர்’  என்ற ஆங்கில ஏட்டை நடத்தினார். பெண்ணுரிமை, பெண்கல்வி, பெண்களுக்கான ஓட்டுரிமை, குடும்பக் கட்டுப்பாடு (கர்ப்பத்தடை) போன்ற புரட்சிகரமான திட்டங்களை வகுத்து அதற்கான இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.

தனது “லிங்க்” பத்திரிக்கையில்  விடுதலைப் பேராட்டங்களுக்கு ஆதரவாக எழுதியதன் மூலம் உலக அளவில் அனைவராலும் அறியப்பட்டார். தொடர்ந்து அன்னி பெசண்டிற்கு பெசண்டோடு இணைந்து  கிறித்துவ மதப்போதகராக பணியாற்றுவதில் நாட்டமில்லாமல் போனதால் 1873இல் தன் கணவரை விட்டுப் பிரிந்தார். விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக 1913இல் ‘காமன்வீல்’ பத்திரிகையைத் துவங்கிய அன்னி பெசன்ட் 1914இல் சென்னையில் இருந்தபடி ‘நியூ இந்தியா’ இதழைத் துவக்கினார். காங்கிரஸில் தன்னை இணைத்துகொண்ட அன்னி பெசண்ட் அங்கிருந்த பார்ப்பனர்களால் சுவீகரிக்கப்பட்டு பார்ப்பனீயத்திற்கு ஆதரவாகவே தன் வாழ்நாளை கழிக்கும் நிலைக்கு ஆளானார்.

‘பெண்களைப் பாவயோனியில் பிறந்தவர்கள்’ என்று பகரும் பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் குப்பைகளிலும், இந்து சாஸ்திரச் சாக்கடையிலும் மூழ்கி அவற்றைப் புத்தகமாக்கி புளகாங்கிதம் அடைந்தவர். சென்னை அடையாறு பகுதியில் செத்துப்போன சமஸ்கிருதத்திற்கென்றே தனி நூலகம் அமைத்து அதில் இத்துப்போன நூல்களையெல்லாம் தேடித்தேடி சேகரித்தவர். மதம் மற்றும் மதம்சார்ந்த கல்வியைப் பரப்புவதில் ஆர்வம் காட்டியவர்.

1912இல் பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிக்க துவங்கப்பட்ட சென்னை அய்க்கிய சங்கம் பார்ப்பனரல்லாதாரின் பலத்த ஆதரவோடு முதலாம் ஆண்டு விழாவில் திராவிடர் சங்கமாக பெயர் மாற்றம் பெற்றது. இந்தக் காலக்கட்டத்தில் ‘ஹோம் ரூல்’ இயக்கத்தை துவக்கிய அன்னி பெசன்ட் அதனை முற்றிலுமாக பார்ப்பனர் நலனுக்காகவே பயன்படுத்தினார். இதனைப் புரிந்துகொண்ட திராவிடர் சங்கத் தலைவர்களான நடேசனார், தியாகராயர், நாயர் போன்றோர் அன்னிபெசண்டின் ‘சுயாட்சி’ என்பது பார்ப்பன ஆட்சியே என்று அம்பலப்படுத்தினர். வர்ண பேதத்தைப் போற்றி இந்து மதத்திற்கு ஆதரவாக அவர் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினர். ஹோம் ரூல் இயக்கத்தின் யோக்கியதையைத் தோலுரித்து ஆங்கில ஏடான ‘மெயில்’ பத்திரிகையில் எழுதிய டி.எம்.நாயரின் கட்டுரைகள் அன்னி பெசண்டடின் அரசியல் வீழ்ச்சிக்கு வித்திட்டன. அன்னி பெசன்டின் ஹோம் ரூல் இயக்கத்தின் மீது ஆரம்பத்தில் நல்ல எண்ணம் கொண்டிருந்த பெரியார், பின் அதன் நோக்கம் புரிந்து அதனை ஒழிப்பதற்காக ஏற்படுத்தப்-பட்ட ‘நேஷனல் அசோஷியேஷன்’ அமைப்பில் தமிழ்நாடு காரியதரிசியாக செயல்பட்டதை தனது ‘குடிஅரசு’ பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.

 பார்ப்பனர்களின் முழு ஆதரவோடு நடத்தப்பட்ட அன்னிபெசன்டின் ‘ஹோம் ரூல்’ இயக்கத்தால் பார்ப்பனரல்லாதாருக்கு பெரும் கேடு விளையக்கூடும் என்று அறிந்த திராவிடச் சங்க தலைவர்கள் ஒன்றுகூடி 1916இல் ‘தென்னிந்திய மக்கள் சங்கம்’ எனும் அரசியல் கட்சியைத் துவக்குவது என முடிவெடுத்தனர். அதுவே தென்னிந்திய நலஉரிமைச்சங்கமாகி பின்னாளில் அவர்கள் நடத்திய ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகையின் பெயரால் ஜஸ்டிஸ் பார்ட்டி அல்லது நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்டது.

தொழிலாளர்களின் தோழனாக இவரைப் பார்ப்பன ஊடகங்கள் தூக்கி நிறுத்துவது எந்தளவுக்குப் போலியானது என்பதை குடியரசில் (15.1.1928) பெரியார் விளக்கினார்.

ஸ்ரீமதி பெசண்ட் அம்மைக்கும், ஸ்ரீனிவாசய்யங்காருக்கும், சிவராவுக்கும், சத்திய மூர்த்திக்கும், வரதராஜுலுவிற்கும் மற்றும் இவர்கள் போன்றோர்க்கும் தொழிலாளர் சம்பந்தமோ, தலைமை ஸ்தானமோ இருக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்கிறோம். இவர்கள் தொழிலாளர்களா? அல்லது தொழில் திறம் அறிந்தவர்களா? அல்லது தொழிலாளி போன்ற ஏழ்மை வாழ்வு வாழ்கின்றவர்களா? எனக் கேட்டார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஈடுபட்ட காலத்திலும் பல நேரங்களில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டார். ஆங்கில அரசு அனுப்பிவைத்த சைமன் குழுவைக்கூட பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு கடுமையாக எதிர்த்தவர் அன்னி பெசன்ட்.

சைமன் குழுவை வரவேற்ற தந்தை பெரியார் அவர்கள், “பெசன்ட் அம்மையின் புதிய உபத்திரம் என்னவெனில், நம் நாட்டு பார்ப்பனர்கள் இப்போது தங்களுக்குள்ள சகல நாடிகளும் விழுந்து விட்ட பிறகு அம்மையை (அன்னிபெசன்ட்) பற்றியிருக்கி றார்கள். இது பார்ப்பனர் அல்லாதாருக்கு பேரபாயம். இந்நாட்டில் பார்ப்பனரல்லாத மக்கள் பெரும்பான்மையும் தோட்டி நிலையிலேயே இருக்கிறார்கள். அத்தோட்டி நிலைமாற ஏதாவது மார்க்க முண்டானால் எந்த துரையையும் கமிஷனையும் வரவேற்கவும் செய்யலாம். பகிஷ்கரிக்கவும் செய்யலாம்.

கமிஷனில் அங்கம் வகிக்கக்கூடியவர்கள் ஏகபோக உரிமையாளர்களான பார்ப்பனர் களாகவே இருந்துவிடக் கூடும் என்கிறதை நினைக்கும்போது அக்கமிஷனில் இந்தியர்களை நியமிக்காதது ஒரு பாக்கியமென்றே சொல்ல வேண்டும்” என்று குடியரசில் கட்டுரை எழுதினார்.

இப்படி அன்னிபெசன்ட் அம்மையார் பார்ப்பனர்களுக்கு பலவகையிலும் உதவியாக இருந்ததோடு இந்துமதத்தை பரப்புவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால்தான் இன்றுவரை அவரை பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடிக்கிறார்கள்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *