இயக்க வரலாறான தன்வரலாறு(168)

டிசம்பர் 16-31


வகுப்புரிமைக்கு வழிகாட்டி தமிழ்நாடு!

தந்தை பெரியார் _- அன்னை மணியம்மையார் ஆகியோரால் வளர்க்கப்பட்ட வரும், திருச்சி நாகம்மை குழந்தைகள் இல்லத்தைச் சார்ந்த என் அன்புச் சகோதரிகளில் ஒருவருமான செல்வி, அரசத்தரசி என்கிற அரசம்மை அவர்களுக்கும், உடுமலை நண்பர் செல்வன் அ.ப.நடராசன் அவர்களுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழா, திராவிடர் கழகப் பொருளாளர் திரு. கா.மா.குப்புசாமி அவர்களது தலைமையில் 11.11.1979 அன்று திருச்சி பெரியார் மாளிகையில், பெரியார் மணியம்மை மன்றத்தில் நடை-பெற்றது. விழாவில் நான் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றுச் சிறப்புரை நிகழ்த்தினேன். அப்போது,

“இந்தக் கல்வி நிலையத்திலே _- குழந்தைகள் இல்லத்திலே நீண்ட நெடுங்காலமாக வளர்க்கப்-பட்டு நம்முடைய அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களுடைய பேரன்பாலும், அந்த அறிவு ஆசானைப் பாதுகாத்து அத்துடன் இந்த இயக்கத்தினையும் தம் இறுதி மூச்சு அடங்குகின்ற வரையிலே பாதுகாத்து நம்முடைய உணர்வுகளிலேயே ஒட்டிப்போய் இருக்கின்ற அன்னை மணியம்மையார் அவர்களால் வளர்க்கப்பட்டு ஆளாக்கப்பட்ட செல்வி அரசம்மையினுடைய வாழ்க்கை ஒப்பந்த விழாவானது _-

அனைவருடைய உள்ளத்தில் மகிழ்ச்சியை மட்டுமல்ல மிகுந்த நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தக்கூடிய ஓர் விழாவாகும்’’ என்று குறிப்பிட்டேன்.

15.11.1979 இரவு திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி உறுப்பினரும் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவரும் மிக நீண்டகால இயக்க வீரரும், கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் ஈடுபட்டுச் சிறைத் தண்டனை ஏற்றவரும் தள்ளாத வயதிலும் கூட இயக்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவரும், தந்தை பெரியார் அவர்களின் கட்டுப்பாடு மிக்க அரிய சீடருமாகிய குடந்தை டி.மாரிமுத்து அவர்கள் தனது 86ஆவது வயதில் குடந்தையில் அவரது இல்லத்தில் மறைவுற்றார்.

மறைந்த இயக்கப் பெரியவர் மாரிமுத்து அவர்களுக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் இருந்தனர். அவர்கள் பிரிவால் வாடும் அவரது துணைவியார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தந்தியின் மூலம் தெரிவித்தேன்.

தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 (1979) அன்று கவிஞர் கருணானந்தம் அவர்கள் எழுதியுள்ள தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு நூலுக்குப் பாராட்டு விழா சென்னை பெரியார் திடலில் சிறப்புடன் நடைபெற்றது. நான் விழாவில் கலந்துக் கொண்டு பேசுகையில்,

சிறுவனாக இருந்து நான் மேடையிலே பேசிய அந்தக் காலத்திலே நான் சந்தித்த முதல் பேச்சாளர்களில் ஒருவர் கவிஞர் கருணானந்தம் ஆவார்! என்றைக்குமே தந்தை பெரியார் அவர்களின் தொண்டராக உறுதியாக இருந்து வரும் அவர்கள் இந்த நூலை மிகச் சிறப்பாக அவர்களே, எல்லா முயற்சிகளையும் எடுத்து எழுதி முடித்திருக்கிறார்கள்! இந்த நூலுக்கு தலைப்புகள் அமைக்கப்பட்ட முறையே மிகச் சிறப்பாக இருக்கிறது! எனக்குத் தெரிந்த வரை – இவ்வளவு சிறப்பான தலைப்புகளில் இது வரை தமிழ் நூலே வந்தது இல்லை என்று கூறலாம்.

இந்த நூலை எழுதப்போவதுபற்றி என்னிடம் கூறியபோதே, “மகிழ்ச்சி தெரிவித்து, அன்பின் அடையாளமாக ஒரு பார்க்கர் பேனா கொடுத்து அனுப்பினேன்’’ என்று குறிப்பிட்டேன்.

28.11.1979 அன்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் நூற்றாண்டு விழா மண்டபத்தில் சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் எழுதிய ‘புரட்சியாளர் பெரியார்’ என்ற நூலை அமைச்சராக இருந்த அரங்கநாயகம் அவர்கள் வெளியிட நான் அதனைப் பெற்றுக் கொண்டேன்.

நூலினைப் பெற்றுக் கொண்டு, சிறப்புரை ஆற்றுகையில், “சுந்தரவடிவேலு அவர்கள் தந்தை பெரியார் அவர்களோடு நெருக்கமாக இருந்தவர்கள்; இயக்கத்தின் மூன்று தலைமுறையை அறிந்தவர்கள்; 1925 முதல் தந்தை பெரியாரை அறிந்த ஒருவர் இந்த நூலின் ஆசிரியர்.

தந்தை பெரியார் அவர்கள் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவரவேண்டும்; அதே நேரத்தில் தந்தை பெரியார் பற்றிய சரியான கருத்துச் சொல்லப்படுகிறதா என்பதைக் கவனிப்பதும் முக்கியம்; அதில் நாம் விழிப்பாக இருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டேன்.

“ஒவ்வொரு மாநிலத்திற்கும் பெரியார் தேவை என்று பிரதமர்கள் சொல்லும் அளவுக்கு நாட்டில் நிலைமை வளர்கின்றது. பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் நுழையாவிட்டாலும் பல்கலைக் கழகங்கள் ஆராயும் அளவுக்கு தந்தை பெரியாரின் கருத்துக்கள் உயர்ந்துள்ளன. புரட்சியாளர் பெரியார் போன்ற நூல்கள் பல்கலைக் கழக பாட நூல்களாக அமைக்கப்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டு என்னுரையை முடிவு செய்தேன்.

விழாவில், நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் உரையாற்றுகையில்,

“மகிழ்ச்சி நிறைய இருக்கிறது பேசுவது கடினம், மூன்று தலைமுறையை அறிந்தவன் என்று நண்பர் வீரமணி சொன்னார், 10 வயது வரை பெரிய ஜாதியாக வாழ்ந்தவன் நான் என்றும் 13ஆவது வயதிலேயே பெரிய ஜாதியா? மனித ஜாதியா? என்ற வினாவை எழுப்பியவர் பெரியார் அன்று முதல் மனித ஜாதியாக வாழ்ந்து வருபவன் நான்’’ என்று குறிப்பிட்டார்கள்.

விழாவிற்கு சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜி.ஆர்.தாமோதரன் அவர்கள்  தலைமை தாங்கினார்கள். விழாவில் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் உள்ளிட்ட பெருங் கல்வியாளர்கள் பலரும், கழகத் தோழர்கள், தோழியர்கள் உள்பட பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.

08.12.1979 அன்று நாகரசம்பட்டி திரு.என்.வி.சுந்தரம் (முன்னாள் விடுதலை நிர்வாகி சம்பந்தம் அவர்களின் தந்தையார்) அவர்களின் 80ஆம் ஆண்டு நிறைவுவிழா சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது. ஏராளமான நண்பர்களும், அதிகாரிகளும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைக் கூறினர். விழாவில் நானும் என் துணைவி-யாருடன் நேரில் சந்தித்து மாலை அணிவித்து புத்தாடையும் அளித்தோம். என்னுடன் கழகப் பொருளாளர் திரு.கா.மா.குப்புசாமி அவர்களும் கழகத் தோழர்களுடன் பலரும் கலந்து கொண்டார்கள். விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வகுப்புரிமைக்குக் குழிபறித்த ஆட்சிக்கு மக்கள் தந்த மரண அடி!

தமிழகத்தில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திராவிடர் கழகத்தின் மத்திய கமிட்டி நிர்வாகக் கமிட்டி கூட்டம் 16.12.1979 அன்று திருச்சி பெரியார் மாளிகையில் பெரியார் மணியம்மை அரங்கில் எழுச்சியுடன் கூடியது.

மத்திய கமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலுமிருந்து கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஏராளமான அளவில் கழகப் பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும் திரண்டிருந்தனர். அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது. கமிட்டிக் கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை, பிற்படுத்தப்பட்டோர் பிரச்சினையை அடிப்படை-யாகக் கொண்டு அணுகிடுவது என்று மத்திய திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டி ஒருமனதாக முடிவெடுத்து வரும் டிசம்பர் 24 அன்று அய்யா அவர்களின் நினைவு நாளன்று மாவட்டத் தலைநகரங்களில் ஸ்டேட் பாங்க் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, ஸ்டேட் பாங்க் முன் கழகத்தின் சார்பில் மாபெரும் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்-படும், ஸ்டேட் பாங்க் இன்று முழுக்க முழுக்க பார்ப்பனர்களின் ஆதிக்கக் கூடாரமாக இருக்கிறது. வேலை வாய்ப்புகள் எல்லாம் பார்ப்பனர்களுக்குத் தான், பார்ப்பனர்கள் மட்டும்தான் ஸ்டேட் பாங்கில் டெபாசிட் செய்கிறார்களா? பார்ப்பனரல்லாத மக்கள் எல்லாம் டெபாசிட் செய்வதில்லையா? தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என்றால் பார்ப்பனர்-களுக்குத் தேசிய மயமாக்கப்பட்டது என்று பொருளா? ஸ்டேட் பாங்கில் நடக்கும் கொள்ளைகள் பற்றி விடுதலையில் பட்டியல் போட்டு வெளியிட்டோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

கம்யூனல் ஜீ.ஓ.வை அமல்படுத்தாத ஒவ்வொரு அலுவலகங்களுக்கு முன்பும் அடுத்த மறியல் செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. ஏராளமான கழகத் தோழர்கள், தோழியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகரசம்பட்டியின் பழம்பெரும் சுயமரியாதை வீரர் திரு.என்.வி.சுந்தரம் அவர்களின் மகனும் விடுதலை நிர்வாகி திரு.என்.எஸ்.சம்பந்தம் அவர்களின் இளவலுமான டாக்டர் எஸ்.சுகவனத்திற்கும், சென்னை, அயனாவரத்தில் உள்ள திரு. என்.ராமதாஸ் அவர்களின் மகள் செல்வி சாந்திக்கும் என்னுடைய தலைமையில் 09.12.1979 அன்று வாழ்க்கை ஒப்பந்த விழா சிறப்புடன் நடைபெற்றது.   இந்தக் குடும்பம் எனது அருமை நண்பர் விடுதலை நிர்வாகி நாகரசம்பட்டி சம்பந்தம் அவர்களுடைய குடும்பம், தந்தை பெரியார் அவர்களிடம் நெருக்கமான பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைக் குடும்பங்களில் ஒன்றாகும்.

இந்திய நாடாளுமன்றத்துக்கான ஏழாவது பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., ஜனதா கூட்டணிக்கு மரண அடி  கிடைத்தது. தமிழ்நாட்டில் கோடானுகோடி பிற்படுத்தப்-பட்ட சமுதாய மக்களின் உரிமைக்கு வேட்டு வைக்க எம்.ஜி.ஆர் முயற்சித்தார்; பெரியார் போராடி பெற்றுத் தந்த வகுப்புரிமையை அழிக்க ரூபாய் 9 ஆயிரம் உத்தரவைக் கொண்டு வந்தார்; பொதுமக்கள் மத்தியில் – தனது உத்தரவுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தத் தயார் என்றார்! மக்கள் மன்றம் சரியான பதிலடியைத் தந்திருந்தது. ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க. 24 தொகுதிகளில் போட்டியிட்டு 22 தொகுதிகளில் தோல்வி-யடைந்தது. அதன் கூட்டணி கட்சிகளும் எல்லா இடங்களிலும் தோல்வியைத் தழுவின.

இதுகுறித்து 08.01.1980 அன்று விடுதலையில் வகுப்புரிமைக்கு குழிபறிக்க முயன்ற ஆட்சிக்கு நல்ல பாடம் என்று தலையங்கம் எழுதியிருந்தேன். அதில்,

என் வாழ்நாளில் தோல்வியே கண்டறி-யாதவன் நான் என்று தோள் தட்டிய முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் இந்த அதல பாதாளத் தோல்வியைக் கண்டுள்ளார்!

ஆட்சி பலம், பண பலம், (இங்கிலீஷ் -_ தமிழ்) பத்திரிகையின் பலம் ஆகிய இவ்வளவு இருந்தும், மக்கள் பலத்தை இவ்வளவு விரைவில் இழப்பதற்கு, இழந்து நிற்பதற்கு என்ன உண்மையான காரணம் என்பதை அத்தோல்விக்குரியவர்கள் மட்டும் அல்ல; பொதுவான அத்தனைப் பேரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இந்திரா அலை, புயல்தான் தமிழகத்தில் என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடும், ‘தினமணி’யின் ஆசிரியரும் சுட்டிக் காட்டியது போல, இங்கே தேர்தல், கலைஞர், எம்.ஜி.ஆர் இருவருக்கும் ஏற்பட்ட போட்டிதான் என்ற நிலையை மறைத்துப் பயனில்லை.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பேரிடியான பார்ப்பன சதியாணையைப் போட்டு, அதை முதலைப் பிடிவாதமாகக் கொண்டதை, திராவிடர் கழகம் எவ்வளவு உறுதியாக எதிர்த்து நிற்கின்றதோ, அதேபோன்று தி.மு.க. அவ்வாணையை எதிர்த்து நின்றது; நிற்கிறது, தேர்தல் அறிக்கையிலும் இதனை ஒரு பிரச்சாரமாக வைத்துப் போட்டியிட்டுள்ளது என்பதை உணர்ந்தே மக்கள் அதற்கு அப்படிப்பட்ட அபரிதமான வெற்றியைக் குவித்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தேன்.

09.01.1980 அன்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தான் பதவியிலிருந்து ராஜினாமா செய்யப் போவதில்லை என்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இந்திரா காங்கிரஸ் அரசை, தான் ஆதரிப்பதாகவும், மேலும் 9 ஆயிரம் ரூபாய் உத்தரவு பற்றி தமது அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட சரமாரியான கேள்விகள் எம்.ஜி.ஆரைத் திணறச் செய்தன.

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பதவிகளில் இடஒதுக்கீடு கொண்டு வருவது போன்ற நல்ல திட்டங்களை இந்திரா கொண்டு வந்தால் ஆதரிப்போம் என்று எம்.ஜி.ஆர் சொன்னவுடன், தமிழ் நாட்டில் ரூ.9 ஆயிரம் உத்தரவைக் கொண்டு வந்திருக்கிறீர்களே என்று ஒரு நிருபர் கேட்டதற்கு,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதை ரூபாய் 12 ஆயிரமாக உயர்த்தலாம் என்கிறார்-கள், இந்த உத்தரவு பற்றி நாங்கள் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.

இச்சூழலில், 12.01.1980 அன்று விடுதலையின் இரண்டாம் பக்கத்தில் இந்தியா முழுவதுமாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் பெருங்கேடாய் அமையக்கூடிய சில வினாக்களை எடுத்துக் கூறி அன்று தலையங்கம் எழுதியிருந்தேன்.

“பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், சிறு சிறு அரசியல் லாபங்களைப் பெரிதாக எண்ணாமல், சமுதாய உணர்வுடன், சமூக நீதிக்காக ஒரே அணியில் நிற்கவேண்டிய தருணம் –  மிக முக்கியத் தருணம் இதுதான்’’ என்று குறிப்பிட்டு இருந்தேன்.

வருமான வரம்பு ஆணை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம்

தேர்தலில் தோல்வியடைந்த அ.தி.மு.க. அரசு பிற்படுத்தப்பட்டோர் வருமான வரம்-பாணையை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை 21.01.1980 அன்று கூட்டவிருப்பதாக, தலைமைச் செயலாளர் அவசரக் கடிதத்தில் குறிப்-பிட்டிருந்தார். அந்த கடிதத்தில் வேலை மற்றும் கல்விச் சலுகைகளுக்குத் தகுதி பெற, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் வருமான வரம்பை ரூபாய் ஒன்பதாயிரம் என்று நிர்ணயித்து சமூக நலத்துறையிலிருந்து பிறப்பிக்கப்-பட்டுள்ள 02.07.1979 தேதியிட்ட அரசு ஆணை எண் 1156-பற்றி எழுப்பப்-பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தமிழக முதல்வர் அவர்கள் அனைத்து கட்சித் தலைவர்களுடன் விவாதிக்க விரும்புகிறார்கள். இது குறித்து தலைவர்கள் கூட்டம் 21ஆம் தேதி தலைமைச் செயலகத்தின் பத்தாவது மாடியில் உள்ள மாநாடு கூடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து 16.01.1980 அன்று விடுதலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையை வெளியிட்டு, அதற்கு ரூ.9 ஆயிரம் ஆணையும் தமிழக அரசும்! என்று தலைப்பைக் கொடுத்து பல்வேறு சம்பவங்களையும் நீதிக்கட்சி தொடங்கி பெரியார் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் வரை அயராத உழைப்பின் காரணமாக பெற்ற கம்யூனல் ஜீ.ஓ. என்ற வகுப்புரிமையின் அடிப்படையையே மாற்றி-யமைத்த வரலாற்றை விரிவாக விளக்கி எழுதியிருந்தேன்.

அதில், வகுப்புரிமை என்பதை இந்தியாவுக்கு வழிகாட்டியாக தந்த தமிழ்நாடு அதனை உடைப்பதில் இப்போது வழிகாட்டியாக முயலும் தவறான நிலைக்கு ஆளாகி விடலாமா?

வருமான வரம்பினை உயர்த்துவது என்பதோ, இவ்வாணையில் கல்வி, உத்தியோகம் இரண்டில் ஒரு பகுதிக்கு மாத்திரம் (அதாவது கல்விக்கு மாத்திரம்) வருமான வரம்பு என்று கூறுவதோ, தகுந்த பரிகாரம் ஆகிவிடமுடியாது அதனால் பாதி கிணறு தாண்டிய பேரபாயம்தான் ஏற்படும்.

100க்கு 65 சதவிகிதம் எழுதப் படிக்கத் தெரியாத தற்குறி மக்கள் நிறைந்த ஒரு சமூகத்தில், அதுவும் முன்னேறிய ஜாதியினர் எவரும் தற்குறிகளாக இல்லாது, தற்குறிகள் எண்ணிக்கை முழுவதும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து தான் என்ற நிலை உள்ள ஒரு நாட்டில், அச்சமுதாயப் பிள்ளைகள் ஆர்வத்துடன் படிக்க முன் வருவதே அபூர்வம்; அத்தி பூத்ததுமாதிரி என்ற நிலை உள்ளது. இதில் படிக்கவரும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வாய்ப்புக் கதவுகளை அகலமாகத் திறப்பது நல்லதா? அல்லது எப்படியெப்படிதடுக்கலாம் என்று முனைவது முறையா? என்பதே நாம் கேள்வியாகும்.

வேலை வாய்ப்புகளைப் பொறுத்து இவ்வாணை பிற்படுத்தப்பட்டோரை எப்படி பாதிக்கிறது என்பதற்கு இரண்டு எடுத்துக்-காட்டுகள்:-

ஒன்று, ரூ 9000 காரணமாக பல ஆண்டு பணிபுரிந்து -நியாயம் நீதி அடிப்படையில் நிரந்தரம் ஆக்கப்பட வேண்டிய பிற்படுத்தப்-பட்ட சமுதாயத்தினைச் சார்ந்த நபர்கள் நியமிக்கப்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்ற அவல நிலை உள்ளது. மற்றொன்று, பெருவழித்துறை பொதுப்-பணித்துறை போன்றவைகளில் ஜுனியர் என்ஜினியர்களை அவசரத்திற்கு தற்காலிகமாக நியமிக்கின்றனர். அவர்கள் நிரந்தரமாக சர்வீஸ் கமிஷனில் மனு போடுகின்றனர்.

அவர்களுக்கு மொத்த வருமானம் மாதம் ஒன்றுக்கு 800 ரூபாய் வருகிறது. அதாவது ஆண்டு ரூ. 9600 வருகிறது. அவர்களது பெற்றோர் பலர் ஏழைகள் மாத்திரம் அல்ல தற்குறிகளும்கூட; சாதாரணமாக டீக்கடை, பெட்டிக்கடை மாதிரி தொழில் செய்து தங்களது  டஜன் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அவர்கள்.

அதையெல்லாம் இவ்வாணை கணக்கில் எடுத்துக் கொள்ளாது 9000 ரூபாய் ஒட்டு மொத்த வருவாய் என்றால் மூன்று, நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த தற்காலிகமானவர் அந்த வேலையை சர்வீஸ் கமிஷனில் பெறமுடியாது என்றால் இதைவிடபெருத்த சமூக அநீதி வேறு இருக்க முடியுமா?

(நினைவுகள் நீளும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *