மருத்துவத்தைத் தொண்டாய் செய்த மனிதநேய மருத்துவர்!

டிசம்பர் 16-31

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியிலுள்ள விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு 1978இல் டாக்டர் பணிக்கு வந்திருக்கிறார். நெல்லை, பழனி, உசிலம்பட்டி, சென்னிமலை என்று பல இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்திருக்கிறார். மாற்றலாகி புது இடம் போகுமிடமெல்லாம் அந்த ஊரில் கையோடு ஒரு கிளினிக் ஆரம்பித்து விடுவார். கூடுதல் வருமானத்துக்காக அல்ல. கூடுதல் சேவைக்காக. ஆமாம். ரெண்டு ரூபாய், அய்ந்து ரூபாயைத் தாண்டியதில்லை இவரது கட்டணம்.

அந்த வகையில்தான் பல வருடங்களுக்கு முன் கோவை வந்தார் டாக்டர். அரசு மருத்துவப் பணியோடு கோவை ஆவாரம்பாளையத்தில் ஒரு கிளினிக்கை துவக்கிவிட்டார். கட்டணம் வெறும் இரண்டு ரூபாய்தான். எந்தப் புண்ணையும், கட்டியையும் கொஞ்சம்கூட தயக்கமில்லாமல் தொட்டு கனிவாகப் பேசியபடியே சிகிச்சை செய்வதில் பாலு திறமையானவர்.

‘டாக்டர் நீங்க ரெண்டு ரூபா, அஞ்சு ரூபான்னு பொடி சில்லறையாதான் ஃபீஸ் வாங்குறீங்க. சில்லறை கிடைக்குறது கஷ்டமா இருக்குது. அதனால தயவு செஞ்சு கட்டணத்தை உயர்த்துங்க.’ என்று சிகிச்சை பெறுவோர் தொடர்ந்து கேட்டே, அவரை கட்டணத்தை உயர்த்த வைத்திருக்கின்றனர். எல்லோரும் டாக்டர் அய்ம்பது ரூபாய் ஆக்குவார் என்று எதிர்பார்த்திருக்க, நீண்ட யோசனைக்குப் பின் இருபது ரூபாய் ஆக்கியிருக்கிறார். அதையும் ‘ரொம்ப அதிகமா கட்டணம் வாங்குறேனோன்னு மனசுக்கு நெருடலா இருக்குது’ என்று சிகிச்சை பெறுவோரிடம் புலம்பியிருக்கிறார்.

டாக்டர் பாலுவால் காப்பாற்றப்பட்ட ஏழை உயிர்கள் ஏராளம். சாலையில் ஏதாவது விபத்தென்றால் காரை ஓரங்கட்டிவிட்டு ஓடிவந்து முதலுதவி அளிப்பது, தனது லெவலை மீறிய சிகிச்சை தேவையெனில், அந்த நோயாளி ஏழையாக இருந்தால் பண உதவி செய்வது, நடக்க முடியாமல் வரும் ஏழை நோயாளிகளை வீட்டுக்கு தன் செலவில்ஆட்டோவில் அனுப்பி வைப்பது, மருத்துவம் படிக்கும் ஏழை மாணவர்களை தேடிக் கண்டுபிடித்துப் போய் பல வகையில் உதவுவது என்று நெகிழ்வும், உருக்கமுமாக இவர் செய்த மனிதநேய பணிகளைப் பட்டியலிடலாம்.

இப்பேர்ப்பட்ட மருத்துவரை இழந்து தவிக்கும் அவரது மனைவி கூறுகையில், “அவருக்கு மனைவி என்பதே எனக்குப் பெரிய பெருமை! வைத்தியத்துக்கு ஏத்த மாதிரி நூறு, ஆயிரங்கள்ன்னு கட்டணம் வாங்கியிருந்தா கோடீஸ்வரங்களா இருந்திருப்போம். ஆனா இவர் மனசு நிறைஞ்சிருக்காதே! அவரோட ஒரே எண்ணமே சல்லிசு காசுல மக்கள் நோயை குணப்படுத்தணும் அப்படிங்கிறதுதானே! நான் பெரிய வீடு, நகைகள்ன்னு ஆசைப்பட்டதில்ல. அவரு என்ன வாங்கி கொடுக்கிறாரோ அதுவே  திருப்தி. என் பொண்ணும், பையனும் அப்படித்தான் அப்பாகிட்டே நடந்துக் கிட்டாங்க. குறைவான காசு வாங்கினதாலே எங்க வாழ்க்கை எதுலேயும் குறைஞ்சு போயிடல. போதுமான வசதியோடதான் இருக்கோம்.

ஓய்வு பெற்ற பிறகும், அந்த கிளினிக்கே கதின்னு இருப்பார். எப்பவுமே நோயாளிகள், சக மனுஷங்கன்னு அடுத்தவங்களோட நலன்தான் முக்கியம் அவருக்கு. தீபாவளி, பொங்கல்னு, ஞாயிற்றுக்கிழமைன்னு எதுக்குமே லீவு விடாம கிளினிக்கே கதின்னு இருப்பார். பண்டிகையிலயாவது வீட்டுல இருங்களேன்னு சொன்னா ‘இன்னைன்கு அநேகமா எல்லா டாக்டர்களும் லீவுல இருப்பாங்க. ஆனா நோய்க்கு லீவெல்லாம் கிடையாது. யாராவது உடம்புக்கு முடியாம இருந்தா யார்தான் அவங்களை கவனிக்குறது?’ன்னு சொல்லிட்டு தன்னோட பையை எடுத்துக்கிட்டு கிளம்பிடுவார்.

இப்பேர்பட்ட உத்தமரோட அர்த்தமுள்ள  வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கேன் கண்ணு. ஆனா இவ்வளவு சீக்கிரமா என்னை விட்டுட்டு கிளம்புவார்னு நான் நினைக்கலை’’ என்றார்.

மருத்துவரின் மனைவிக்கு அறிமுகமேயில்லாத பல நூறு மனிதர்கள் வந்து ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். இந்த மனிதநேய மருத்துவர் இறந்தபோது, மாநகரமே குலுங்கி அழுதது. நகரம் முழுக்க அஞ்சலி சுவரொட்டிகள் கண்ணீர் கொட்டின. இறுதி ஊர்வலத்தின் கூட்டத்தில் நகரத்தின் முக்கிய சாலைகள் திணறிப் போயின.

மருத்துவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர் சரியான எடுத்துக்காட்டு! மருத்துவம் ஆடம்பரப் பணியல்ல, மனிதநேயப் பணி! 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *