கொள்கைப் பிடிப்பு இளைஞர்களுக்கு வேண்டும். தீவிர மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளும் அதே சமயம் எதையும் சிந்தித்துச் செயல்படும் மனோபாவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருவன் ஏழையாக இருப்பதற்கும் \ மற்றவன் பணக்காரனாக இருப்பதற்கும் அவனவன் தலையில் எழுதிய எழுத்து, தலைவிதி என்று ஒருசில அதிமேதாவிகள் கூறி வருவது தெரிந்ததே. இந்த அதிமேதாவித்தனம் ஏழைகளை ஏமாற்றுவதற்குத்தான்.
நிலம் யாருக்குச் சொந்தம்? மழை பெய்கிறதே, அது யாருக்குச் சொந்தம்? எல்லோருக்குந்தானே!
சமுதாயத்தை மாற்றி அமைக்கத்தானே சுதந்திரம்! ஒரு மாறுதலும் வேண்டாம் என்றால், சுதந்திரமே வேண்டாத சமுதாயத்தை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
பிறவியால் யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று கிடையாது. செய்கையால் தாழலாம், உயரலாம்!
ஒருவருக்கொருவர் உதவுவதுதான் கூட்டுறவு! கூட்டு முயற்சி, கூட்டு உழைப்பு, கூட்டுப் பொறுப்பு ஆகியவை இணைந்ததுதான் கூட்டுறவு!
நமது புதிய சமுதாய அமைப்பில் மக்கள் சமமாக வாழ வழி செய்ய வேண்டும். செல்வமும் அதிகாரமும் ஒரே இடத்தில் சேரவிடக் கூடாது. அதிகாரம் ஒரே இடத்தில் சேர்ந்தால் வெகு ஆபத்து. அதனால்தான் ஜனநாயக முறை வேண்டும் என்கிறோம்.
கிராமங்களில் ஜாதி, மத பேதங்களைக் கிளப்பிச் சண்டை போடாமல், ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
பஞ்சாயத்துகளின் வேலை – ரோடு போடுவது, பள்ளிகள் கட்டுவது போன்றவை மட்டுமல்ல, கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தப் பாடுபட வேண்டும்.
விவசாயத்தையே நம்பி எல்லோரும் வாழ முடியாது. மாற்றுத் தொழில் ஏற்படுத்த வழி செய்ய வேண்டுமானால், கல்வித் திட்டங்கள் அவசியமாகும்.
ஜனங்கள் குற்றங்களைக் கண்டுபிடிப்பார்கள் என்ற பயம் இருப்பதுதான், ஜனநாயகம் \ மக்களாட்சியின் சிறப்பு!
மாதத்திற்கு ஒரு கட்சி; ஜாதிக்கு ஒரு கட்சி; மொழிக்கு ஒரு கட்சி என்று ஏற்பட்டுக் கொண்டே போனால், நாடு மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகும்.
வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை அளித்திருக் கிறோம். மக்கள் ஓட்டுப்போட்டுத்தானே மெம்பர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்? எனவே, யாராவது கெட்டவர்கள் வந்துவிட்டால் அதற்கு யார் காரணம், மக்கள்தானே!
யாருக்குப் பொறுப்பு என்று கணக்குப் பார்ப்பது அர்த்தமற்றது, தேவையற்றது. எல்லோருக்கும் கூட்டுப் பொறுப்பு உண்டு என்ற பொறுப்புணர்ச்சி தேவை!
நாடு முன்னேற வறுமையும், அறியாமையும் போக்க வேண்டும். ஏழை, பாமரன் என்ற வார்த்தை இல்லாமலே போக்க வேண்டும். இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாகச் சொல்ல முடியாது.
ஆங்கிலத்தை ஆதரிப்பவர்கள் தமிழில் எல்லாம் முடியுமா? என்று கேட்கிறார்கள். ஏன் முடியாது? தமிழ் என்றும் வளம் குன்றாத மொழி. உலகம் போற்றும் மொழி. தமிழில் முடியாதது எதுவுமே இல்லை.
நாட்டில் இன்று எல்லாவற்றுக்குமே ரெடிமேடு வந்துவிட்டது. உணவுமுதல் உடைவரை எல்லாம் ரெடிமேடுதான். அதுபோலவே மூளையும் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியுமா?