நெசந்தானுங்க…

ஜூலை 16-31

எத்தனைக் காலம்தான்…

முன்னாள் முதல்வரும் மக்கள் நடிகருமான எம்.ஜி.ஆரை சாமி என்றே அழைத்துக்கொண்டு அவருக்கு ஒரு கோயிலையும் கட்டியிருக்கிறாராம் திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தைச் சேர்ந்த கலைவாணன் என்பவர்! பூர்வீக வீடு, மனைவி நகைகளை எல்லாம் விற்று 15 லட்சத்தில் எம்.ஜி.ஆர். கோயில் கட்டியிருக்கும் கலைவாணனிடம், உங்களுக்கு என்று ஒரு சொந்த வீடு கட்டவில்லையா? என்றால், அதற்கும் என் சாமி (எம். ஜி. ஆர்) வழிகாட்டுவார் என்கிறாராம். (ஜூ. வி – 26.6.11)

சரியாகத்தானே சொல்லியிருக்கிறார். 15 லட்சம் முதலீடு போட்டு எம்.ஜி.ஆரை பக்திச் சரக்காக்கியிருக்கிறார். விற்பனை நடந்த பின் லாபம் கிட்டும் அல்லவா? அதைத் தான் சாமி வழிகாட்டுவார் என்று கூறியிருக்கிறார். பக்தி என்பது தனிச்சொத்து என்றார் பெரியார். அவர் என்ன பொருளில் சொன்னாரோ.. ஆனால் இங்கு பக்தி தான் பலருக்கு தனிச்சொத்து உருவாகக் காரணமாகிறது. அதை உணர்ந்துதான் எம்.ஜி.ஆரைக் கடவுளாக்கி யிருக்கிறார்கள். படமாக சுவரில் ஒட்டப்பட்ட பண்டமாக சிலருக்கு அவர், இப்போது சிலையாக சிலருக்கு அவர். எம்.ஜி.ஆர் படப் பாடல் வரிகளிலேயே சொல்ல வேண்டுமானால்….

பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே

 


————திக்…திக்… திக் விஜய்

 

வெண்டைக்காயை விளக்கெண்ணையில் குழைத்து அதை வாழை மட்டையில் வைத்தது போல் வழவழவென்று பதில் சொல்வதில் சமர்த்தர்கள் காங்கிரஸ்காரர்கள். அதிலும் பி.ஜே.பி கிளப்புகிற இந்துத்துவ பிரச்சினை என்றால் அதற்கு காங்கிரஸ்காரர்கள் பல சமயம் பம்முகிற பம்மு காணச் சகிக்காது. ஆனால், நறுக்கென்று குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்-_சைப் போட்டு உடைப்பதில் சரியான ஆள்… முன்னாள் மத்தியப்பிரதேச முதல்வர் திக் விஜய் சிங் அத்தனைத் தலைவர்களிலும் தனித்த இடம் பிடித்திருப்பவர். பா.ஜ.க. சவடால், ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் என்பதனையும் பற்றி துளியும் கவலைப்படாமல் சடார் சடாரென அடித்து விளாசிவிடுவார் மனிதன்! அன்னா ஹசாரே என்றாலும், பாபா ராம்தேவ் என்றாலும் அவர்களின் முகத்திரையைக் கிழித்தெறிவதில் முதல் ஆள் அவர் தான். அவரைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்கள் புலம்புகிறார்கள். இதற்கு அடுத்த இடம் கபில் சிபலுக்கு.

பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு? ஆங்காங்கே அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறது. திக் விஜய் சிங், ஒரு சுப்பிரமணிய சாமியா? என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார் ஜூ.வி_-யின் கழுகார். திக் விஜய் சிங் மாஜி அரசியல்வாதியாம். அவரால் ஒன்றும் பயனில்லையாம். ஆனால், சு.சுவாமியோ செயல்பாடு மிக்கவராம். யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் தான் நினைத்ததைச் சொல்லத் தயங்க மாட்டாராம்.. அவரால் தான் ஸ்பெக்ட்ரம் வழக்கு இவ்வளவு தூரம் வந்ததாம்..

அது தான் தெரியுமே! சு.சுவாமி தான் நினைத்ததை, தன் இனத்துக்கு வேண்டியதை எப்போதும் செய்பவர். ஸ்பெக்ட்ரத்தின் பின்னணியில் பார்ப்பனக் கூட்டம் தான் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு ஒப்புதல் வாக்குமூலம் வேண்டுமா?

அதை மட்டுமா செஞ்சாரு சாமி? சேது சமுத்திரத் திட்டத்தை ராமனைக் காட்டி காலி பண்னாரு! ஈழப்போராட்டத்தில் இருந்த வழக்கறிஞர்களை தமிழக அரசுக்கு எதிரா போராட வச்சு திசை திருப்பினாரு…! அவரு செய்யாத வேலையா? இது மட்டுமல்லாமல், கபில் சிபல் மீதும் பாய்கிறார் ஹாய் மதன். அவருக்கு என்ன கோபம் தெரியுமா? அன்னா ஹசாரேவையும், பாபா ராம்தேவையும் அலட்சியமாக கிண்டல் செய்கிறாராம்.. இவர்களின் அஸ்திரங்கள் எல்லாம் புஸ்-ஆகிப்போவதால் எழும் கோபம் தானே இதெல்லாம்..!


பேச நா…

மக்களை ஒரு காசு கொடுத்து, இந்தியா முழுமைக்கும் பேச வைத்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள். தொலைத்தொடர்புத் துறை சேவை நிறுவனம், எனவே லாபம் மட்டுமே நோக்கம் என்றில்லாமல் செயல்பட வேண்டும் என்று வகுக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தியவர் அவர். ஆனால் ராசா மீது, ஸ்பெக்ட்ரத்தை லாபகரமாக விற்கவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கும் ஜூ.வி – அஞ்சல் நிலையங்கள், அஞ்சல் துறை தொடர்பாகப் பிரசுரித்திருக்கும் வாசகர் தலையங்கத்தின் மய்யக் கருத்து என்ன தெரியுமா மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு துறையில் லாப-நஷ்டக் கணக்குப் பார்ப்பது எத்தனை அபத்தம்

(ஜூ.வி – 26.6.11) என்பது! வேறென்ன சொல்ல? பேச நா இரண்டுடையாய் போற்றி

 


————லாலிக்கோர் வாலி

 

ஆள்வோருக்கு ஆலவட்டம் சுற்றுவதில் ஆரியர்க்கு நிகரில்லை; புலவர்களும் அவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். அதிலும் புலவரே நூலோராய் இருந்தால்..? சோவைக் கொஞ்சம் சொடுக்கியிருக்கும் அதே கவிதையில்

வாக்களித்த சிறீரங்கத்து மக்கள் வாழ்த்துகிறார்கள் இன்று – எங்க நாயகிதான் -அந்த ரங்க நாயகி என்று! என்று பாடியிருக்கிறார். சிறீரங்கத்து மக்கள் சொல்வதில் வியப்புமில்லை; தவறுமில்லை. அவாள் நாயகிதான் அவர்.

ஆனால், அதற்கு முதல் பத்தியில்
பொறுத்தது போதும் எனப்
பொங்கி எழுந்தாள்;
அவள் தாள்தான் – இன்று
அனைத்துத் தமிழரும் தொழுந்தாள்!

என்று அ.தி.மு.க. அமைச்சர்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழர்களையும் கொண்டுபோய் அரங்கநாயகியின் காலடியில் விழவைக்கும் தந்திரத்தை எப்பாடு பட்டாலும் பிறர் கற்க முடியாது. என்னதான் வேலு நாச்சியார் என்று சில மான்கள் கூவினாலும், ரங்க நாயகியோடு ஒப்பிடுவது தானே சாலப் பொருத்தம். சூத்திரச்சியோடு அவரை ஒப்பிடுவதா? சரியாய்த்தான் செய்திருக்கிறார் வாலி.
அவரைப் பற்றிச் சரியாய்ச் சொல்ல வேண்டுமானால்…
ஆயிரம் பேர்
தேரடியில் கூடினாலும்,
ஓரடியில்
லாலி பாடுவதில்
பிறருக்குச் சளைத்தவரா
வாலி?!

 

-பவானந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *