செயலி
Microsoft Pix
மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்-படுத்தியுள்ள ‘Microsoft Pix’ செயலி புகைப்-படங்களுக்கானது.
நாம் எடுக்கும் சாதாரண புகைப்படங்களை, செயற்கை நுண்ணறிவின் மூலம் காமிரா அமைப்பினை சரிசெய்து அழகிய புகைப்-படங்களாக உருவாக்கலாம்.
புகைப்படத்தின் நிறம், போக்கஸ், வெளிப்பாடு போன்றவற்றை சரியான அளவில் மாற்றிக் கொண்டு புகைப்படத்தின் தரத்தையும் உயர்த்துகிறது.
இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம்.
https://www.microsoft.com/en-us/research/product/microsoftpix/
– அரு.ராமநாதன்
நூல் அறிமுகம்
நூல்: பெரியோர்களே! தாய்மார்களே! ஆசிரியர்: ப.திருமாவேலன்
வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2.
பக்கங்கள்: 512, விலை: 560/-
தமிழ்நாட்டு அரசியல் சமூக வரலாறு, சமூகப் புரட்சியாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், அவர்கள் தோற்றுவித்த இயக்கங்கள், அரசியல் தலைவர்கள் தமிழறிஞர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
சென்னை நகரின் முக்கிய இடங்கள், அவை தொடர்பான வரலாற்றுக் குறிப்புகள், அவற்றை உருவாக்கியவர்களின் ஏனைய செயல்பாடுகள் குறித்த ஏராளமான நிகழ்வுகள் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நீதிக்கட்சியின் தோற்றம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதிக்கட்சி செய்த தியாகம், அதன் தலைவர்களான டாக்டர் நாயர், டாக்டர் சி.நடேசனார், தியாகராயர், இரட்டைமலை சீனிவாசன், முத்துலட்சுமி, எம்.சி.ராஜா, அண்ணா ஆகியோரின் வாழ்வின் முக்கிய சம்பவங்கள் சுவையான எளிய நடையில் இடம் பெற்றுள்ளன.
தந்தை பெரியார் பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் சுவையான நடையில் இடம் பெற்றுள்ளன. ஜமீந்தார்களாலும், மிராஸ்தார்களாலும், இராஜாக்களாலும், பெரும் பணக்காரர் களாலும் நடத்தப்பட்ட நீதிக்கட்சி திராவிடர் இன மக்களுக்கு குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றிய பணிகள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி பற்றிய தொடர் கட்டுரைகளில் ஏராளமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. சமகால நிகழ்வுகளுடன் கடந்த கால வரலாற்றை இணைத்து பல்வேறு தகவல்களைத் தந்துள்ளார்.
– வை.கலையரசன்
ஆவணப்படம்
I Burnt My Fingers
(என் விரல்களைச் சுட்டுக் கொண்டேன்)
இந்தியத் தேர்தலில் வேட்பாளர் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், பெற்றுக் கொண்டவர் மனசாட்சிப்படி வாக்களிப்பதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆனால், யாரும் பணம் பெற்றவர்களை நிறுத்தி தனக்குத்தான் ஓடடளித்தார்களா என்று கேட்பதில்லை.
இதிலும் ‘மோடியின் குஜராத்’ _ ஒரு மாடலாக இருக்கிறது. எப்படி? அதாவது, “நீ எனக்குத்தான் ஓட்டு போட்டாய் என்பதை நிரூபிக்க, கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டுக் காட்டு’’ என்று அதிகார பலத்தைக் காட்டி மிரட்ட, ஒரு கிராமமே அப்படி செய்திருக்கிறது. இந்த அவலத்தை இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கமலேஷ் உதேரி சமரசங்களுக்கு இடமில்லாமல் பதிவு செய்திருக்கிறார். படத்தைப் பார்த்த பிறகு, “என்று மடியும் இந்த மடமை?’’ என்ற ஆற்றாமைதான் தோன்றுகிறது.
ஆவணப் படத்தைப் பார்க்க இந்த முகவரியை சொடுக்கவும்.
(www.youtube.com/watch>v=0tAMdFDiXqM)
– உடுமலை