புதுப்பாக்கள்

ஜூலை 16-31

கடவுள்

கட்டுக்கட்டாய்
பத்திகளும்
சூடன்களும்
கடவுளுக்கு முன்
தீக்குளித்தும் கூட

பொங்கல்
சுண்டலென
பழம் தேங்காயோடு
படையலாய்
படைத்தும் கூட

ஆயிரமாய்
செலவு செய்து
ஆறுகுளமென
முங்கி முங்கிக்
குளித்தும் கூட

கொட்டும் மேளமும்
குதியாட்டத்தோடு
மொட்டை
காது குத்தென
பால்குடம், காவடி
எடுத்தும் கூட

பலவகையாய்
அபிசேகங்கள்
அந்தி பூசை
அர்த்தசாம பூசை
செய்தும் கூட

முள்ளாய் வேதனை
முளைவிட்டும் கூட
கல்லாய்
இன்னமும்
கடவுளர் யாவரும்!

ஆல.தமிழ்ப்பித்தன், புனல்வேலி

தீர்க்கமான முடிவு!

ஆகுதியாய்
கொழுந்துவிட்டு எரிந்தது
தீக்குண்டம்!
ராஜதுராதிபதிகள்
புடைசூழ…
ஆள் அம்பு படைவரிசை
அணிவகுத்து நிற்க…
குடிபடைகள் கூடிநின்று
பதைபதைத்துப்
பார்த்திருக்க…

ஆணவத்தின்
உச்சத்தில் நின்று
ஆணையிட்டான் இராமன்!
கொண்டவள் கற்பை
எரியும் நெருப்பில்
இறங்கி வந்து
நிரூபிக்க…
பேதையவள் சீதைக்கு
பேடிராமன்
பரீட்சை வைத்தான்!

கூம்பிய மலராய்
கைகள் குவிந்திருக்க…
மூடிய விழிமலரில்
அருவியாய் நீர்சொரிய…
முன்மூன்று வலம் வந்தவள்
முடிவினில் நின்றாள்…
தீயாய் கண்திறந்தாள்!
தீர்க்கமாய் முடிவெடுத்தாள்!

அக்னி குண்டத்தின் அருகினில் சென்றாள்…
கண்ணிமைக்கும் நேரத்தில்…
கணவனைத் தூக்கி
தீயினில் போட்டாள்!
திரை விழுந்தது….!
அவையோரின் கையொலி
அடங்கிட வெகுநேரமானது!

கு.நா. இராமண்ணா, சீர்காழி

யார் குற்றவாளி?

குற்றம், குற்றமாய்த் தெரிவதில்லை
உற்றவர் செய்தால் மட்டும்
மற்றவர் எது செய்தாலும்
குறுகிய பார்வைமுன் பெருங்குற்றமே
சுற்றம் பார்க்கின் குற்றம் இல்லை
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

குற்றவாளிகள் குறைய
காக்கிகள் கண்காணித்தாலும்
தப்பிவிடுகிறார்கள் குற்றவாளிகள்
சட்டத்தின் ஓட்டைகளிலிருந்து

ஊழல் குற்றவாளியென்று
ஒரு மன்றம் தண்டிக்கும்
மறுமன்றம் விடுவிக்கும்
குழப்பும் வாதங்களால்
குற்றவாளிகள் நிரபராதிகள்
நிரபராதிகள் குற்றவாளிகள்

காப்பியங்களைச் சீர்தூக்கிப் பார்த்தால்
வாலியைக் கொன்ற இராமன் குற்றவாளியே
கன்றைக் கொன்றான் மகன்
மகனைக் கொன்றான் மன்னன்
கொலைக்கு கொலையே பரிகாரமென்று வன்முறைக்கு வித்திட்ட முதற் குற்றவாளி
மனுநீதிச் சோழனே
குற்றம் குற்றமே என்று
துணிந்து சொன்ன நக்கீரனை
நெற்றிக் கண்ணால் நீராக்கியது
சிவனாக இருந்தாலும்
எவனாக இருந்தாலும்
அடக்கு முறை ஏவிய குற்றவாளியே

குற்றமற்ற கோவலன் கொலையுண்டதும்
உண்மையை உடைத்தாள் சிலம்புக் கண்ணகி
தன் குற்றம் தானுணர்ந்து
தன்னைத்தானே தண்டித்தான்
தமிழ்மன்னன் பாண்டியன்,
ஆனால், ஆரியர் கதையில்

குருடர் மகனைக் கொன்ற தசரதன்
தன் குற்றம் தானுணர்ந்தாலும் தன்னைத் தானே தண்டிக்காமல்
ஆண்டு பலவாக ஆண்டு மகிழ்ந்தான்

கதைதான் என்றாலும்
நிழல் மரத்தில் கனியுண்டென்று
நம்புவோரெல்லாம் குற்றவாளிகளே

சி.விநாயகமூர்த்தி, மதுரை_-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *