குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்

ஜூலை 01-15

பார்ப்பன ஆதிக்கத்தின் படுமோசம்:- தாழ்த்தப்பட்ட உயர்த்தியாயர்களின் தவிப்பு

தகவல் – முநீசி

(1930 ஆம் ஆண்டு தாராபுரம் ரேஞ்சு டிப்டி இன்ஸ்பெக்டர் ஒரு பார்ப்பனர்.  அவர் தேகாப்பியாசம் போதனாமுறை பயில தாராபுரம் ரேஞ்சில் உள்ள 13 உபாத்தியாயர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டும்.  அவர்களுக்கு மாதம் ரூபாய் 25 உதவித்தொகை வழங்கப்படும்.  அந்தப் பார்ப்பன அதிகாரி தம் இனத்தவரின் முன்னேற்றத்தைக் கருதி 13 பேரில் 9 பேர் பார்ப்பனராகவும் பாக்கி 4 பேர் பார்ப்பனரல்லாத வராகவும் செலக்ஷன் செய்துள்ளார்.  இந்தப் பார்ப்பன சூழ்ச்சி 28.02.1931 இல் கூடிய வெள்ளக்கோவில் ஆசிரியர் சங்கத்தில் கண்டிக்கப்பட்டுள்ளது.  மற்றும் இதுபற்றி மாகாண கல்வி இயக்குநருக்கும்.  கல்வி அமைச்சருக்கும் கண்டனத் தீர்மானத்தின் நகல் அனுப்பப் பட்டுள்ளது.  அச்செய்தியைப் படித்து அறியுங்கள்).

1931 ஆம் வருஷ வெயிற்கால விடுமுறையில் 15.4.31 முதல் 15.5.31 முடிய ஒரு மாதத்திற்குக் கோயமுத்தூரில் பிசிகல் ட்ரையினிங் (தேகாப்பியாசப் போதனாமுறை) பயில தாராபுரம் ரேஞ்சிலுள்ள லோயர், ஹையர் எலிமென்டரி போதானமுறை பயின்ற 13 உபாத்தியாயர்களைத் தாராபுரம் ரேஞ்சு பாடசாலைகளின் டிப்டி இன்ஸ்பெக்டர் அவர்கள் செலக்ஷன் செய்து உத்தரவனுப்பி யிருக்கிறார்.  அதில் அவ்வொரு மாதத்திற்கும் ஆளொன்றுக்கும் 25 ரூபாய் உதவி சம்பளம் கொடுக்கும்படி தாலூகா போர்டாரைக் கேட்டிருக்கிறது.

மேற்படி இன்ஸ்பெக்டர் அவர்கள் ஒரு பார்ப்பனராதலால், தம்மினத்தவரின் முன்னேற்றத்தைக்கருதி 13 பேரில் 9 பேர் பிராமணர்களையும், பாக்கி 4 பேர் பிராமணரல்லாதாரையும் செலக்ஷ்ன் செய்து எடுத்திருக்கிறார்.  இந்த ரேஞ்சில் ஆதிதிராவிடர், முஸ்லீம் முதலிய பல வகுப்பு உபாத்தியாயர்கள் இருக்கவும் மேல் பூச்சாக வகுப்புக்கொன்றாய் பிள்ளை முதலிய நால்வர்களை எடுத்துக்கொண்டு கல்வியில் முன்னேற்றமடைந்து தோட்டிமுதல் தொண்டமான் வரையிலும் உள்ள எல்லா உத்தியோகங்களிலும் தவறாமல் நிறைந்துள்ள தங்கள் இனத்தவரை (பார்ப்பனர்) 9 பேர்களை எடுத்துக்கொண்டு , தாழததப்பட்ட ஏழை உபாத்தியரயர்களைப் புறக்கணித்தது பார்ப்பனச் சூழ்ச்சியேயாகும்.

28.2.31 இல் கூடிய வெள்ளகோவில் உபாத்திமைச்சங்கத்தில இதைக் கண்டித்து வகுப்புவாரியாகவும், அல்லது போதானமுறை பயின்ற எல்லா உபாத்தியாயர்களையும் பரீஷை செய்து அதில் தேர்ந்தவர்களை அனுப்ப வேண்டுமென்று ஏ.எம். குழந்தை என்பவரால் ஒரு தீர்மானங்கொண்டுவந்து இதை ஆதரித்து வி.டி. சுந்தரம், ரத்தினசிகாமணி ஏ.பழனி முத்து, ஆர். சுந்தரம் (தலைவர்) ஆகியவர்கள் பேசினார்.  பின்னர் ஏகமனதாய் நிறைவேற்றி யாவரும் கையொப்பமிட்டு அத்தீர்மானத்தின் நகலை, தாராபுரம் ரேஞ்சு பாடசாலைகளின் சீனியர், ஜூனியர் டிப்டி இன்ஸ்பெக்டர்கள், ஈரோடுதாலுகா போர்டு பிரசிடெண்ட்.  கோயமுத்தூர் கல்வியாபீசர், சென்னை மாகாணக்கல்வியிலாகா டைரக்டர், சென்னை கல்வி மந்திரி ஆகியவர்களுக்கனுப்பியுள்ளார்கள்.

மேற்கொண்ட தீர்மானத்தைப் பற்றிப் பேசும்போது அச்சங்கத்திற்கு வந்திருந்த மூன்று பார்ப்பன உபாத்தியாயர்களும் உடனே எழுந்து (சங்கம் முடியுமுன்) ஊருக்குச் சென்றுவிட்டனர்.  இதற்குக்காரணம் அவர்கள் சூழ்ச்சி வெளிப்பட்டதே என்று வெட்கப்பட்டதேயாம்.

– குடிஅரசு – 08.03.1931 – பக்கம் 15,16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *