பக்தன்
– அணு கலைமகள்
மாலை நேரம் இரண்டு வாழைப்பழங்கள் வாங்குவதற்காக அந்தச் சிறிய பெட்டிக்கடைக்குச் சென்றேன். பெட்டிக் கடையின் முன்பகுதியை முழுவதும் மறைத்தபடி காவி வேட்டியுடன் கையில் சிகரெட் புகை, வாயில் பான்பராக்கைக் குதப்பியபடி கழுத்தில் ருத்ராட்ச மாலை, சாம்பல் பூசிய நெற்றியோடு பக்திமான் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவர், பக்தி எப்படி இருக்க வேண்டும், எப்படி கடவுளைத் தொழுவது, மூலக்கடவுள் விநாயகர் துதி எப்படி உச்சரிக்க வேண்டும் என அந்தப் பெட்டிக்கடைக்காரருக்கு விளக்கிக் கொண்டிருந்தார். பெட்டிக்கடைக்காரரோ கைகட்டி அவரோடு அய்க்கியமாகி அவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நின்று கொண்டிருந்தார்.
எனக்குப் பின்னேயும் ஒருவர் பொருட்கள் வாங்குவதற்காக காத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.
இரண்டு வாழைப்பழம் என்றேன். கடைக்காரரின் கவனம் முழுவதும் பக்தனின் பேச்சாற்றலுக்குக் கட்டுப்பட்டிருந்தது. ஆனால், பக்திமான் என்னைச் சற்று திரும்பிப் பார்த்து முறைத்த பார்வையை வீசிவிட்டு பிரசங்கத்தைத் தொடர்ந்தார்.
மூலவர் விநாயகர் என் சொல்லுக்குக் கட்டுப்படுவார் என்றவர் தன் கழுத்தில் கிடந்த ருத்ராட்ச மாலையுடன் கூடிய விநாயகர் டாலரை எடுத்துக்காட்டி முதல் மூலக்கடவுள் இவர்தான். பார்த்தீர்களா எலி வாகனத்தில் அமர்ந்தபடி முக்தியளிப்பதை என்றார்.
பொறுமை இழந்த நான் சற்று உரத்தகுரலில் இரண்டு வாழைப்பழத்தைக் கொடுத்துவிட்டுப் பேசுங்க என்றேன்.
அந்த பக்திமான் சற்று திரும்பிய நிலையில் நிமிர்ந்து என்னைப் பார்த்து கோபமாக ஒருகாலைப் பின்வைத்து மறுகாலை பெட்டிக்கடைப் பெட்டியின் கீழே கொடுத்துத் திரும்பினார் பெட்டிக்கடையின் உள்ளே திரிந்த எலி வாலை மிதித்தபடி. கோபம் வந்த எலி பக்தனின் கால் கட்டைவிரலைக் கடித்துக் குதறியது.
நிலைகுலைந்த பக்திமான் கூக்குரலிட்டு அம்மா எனக் கத்தினார். இரத்தம் பெருக்கெடுத்து ஓட அப்படியே என் காலின் கீழே மயங்கிய நிலையில் சரிந்து உட்கார்ந்தார். பெட்டிக்கடைக்காரரால் எட்டி எட்டிப் பார்க்கத்தான் முடிந்ததே தவிர அவருக்கு உதவ முன்வர முடியவில்லை.
என் கையிலிருந்த கைக்குட்டையை எடுத்து தண்ணீரில் நனைத்து எலி கடித்த விரலைச்சுற்றி இரத்தம் வராமல் இறுக்கமாகக் கட்டினேன். 108க்கு போன்செய்து அவருடன் 108இல் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ உதவிகளைச் செய்து அவரைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு உள்ளே வந்தேன்.
பக்திமான் ருத்ராட்ச மாலையையும் எலி டாலரையும் அறுத்துக் கீழே போட்டுவிட்டு என்னைக் கைகூப்பி வணங்கிக் கொண்டிருந்தார்.