சிறுகதை

ஜூலை 01-15

பொய்வேலி


அப்பப்பா என்னா வெயில் அடிக்குதடி… அடியே, கோகுலம் என்று கூவிக்கொண்டே ஆத்துக்குள் நுழைந்தார் அம்பிப் பட்டர்.

ஏன்னா, வந்துட்டேளா எனக் கத்திக் கொண்டே அடுப்பங்கரையிலிருந்து எதிரே வந்தாள் கோகுலம் மாமி.

ஏண்டீ, அந்த நெல்லைக் காயப்போட்டியோ இல்லையான்னோ என்றார் வேகத்தோடு பட்டர்.

போட்டு எடுக்கலாமேன்னுதான் நினைச்சுண்டிருந்தேன்… ஆனா… மேகம் வேற கருத்துண்டு பயமுறுத்திண்டே இருக்கிறதப் பார்த்தா மழை பெய்ஞ்சிருமோ… நெல்லெல்லாம் நனைஞ்சி பாழாயிடுமோன்னுதான் காயப்போடலேன்னா என்றாள் கோகுலம்.

அடியே… நாளைக்கு நெய்வேத்தியம் அதுலதாண்டி பண்ணணும்… வேற அரிசி வாங்கறதுக்குக்கூட காசில்லைடி… இது நோக்குத் தெரியாதோடி என்று அதிகாரம் பண்ணினார் அம்பிப் பட்டர்.

அதுக்கோசரம் நான் என்னன்னா பண்ண முடியும்? நான் காயப்போட்டு… அது மழையில நனைஞ்சுட்டுண்ணா என்னையல்லா கரிச்சுக் கொட்டுவேள்… அதான் பார்த்துப் பண்ணலாம்னு இருந்துட்டேன் என்றார் கோகுலம் மாமி.

நன்னா பண்ணினே… போடி… போ… ஆத்துல இருக்கிறவா எவளும் இந்த ஆம்பளையாண்டா சொல்லக் கேக்குறதே இல்ல… அவா.. அவா.. நெஞ்சில நினைச்சபடி செய்யறதுக… பகவானே நீதான் இதப் புரிஞ்சிக்கணும் என்று அலுத்துக் கொண்டார் அய்யர்.

ஏன்னா! இப்போ என்ன நடந்ததுன்னு இப்படி அலுத்துக்கிறேள். பகவானை வேற வேண்டிக்கிறேளே… நான் என்ன செய்யமாட்டேன்னா சொன்னேன்? வேணும்னா இதோ இப்பவே காயப்போட்டு விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டே நெல்லை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குப் படியேறினாள். காயப்போடுவேன், மழை வந்து நனைச்சுட்டேன்னு என்னைக் கொட்டித் தீர்க்காதேள் என்றவாறு சென்றார் கோகுலம் மாமி.

திடீரென, வேண்டாம்டி. நீ! சொல்றபடி மழை வரும்போலத்தான் தெரியுதுடீ.. வெயில் அடிக்கிறதப் பார்த்தா வருண பகவான் கொட்டித் தீர்த்து நம்மை இன்றைக்குத் துயரப்படுத்திடுவான் போலிருக்கு.. சரி.. சரி. உள்ளே வை. பார்த்துக்கலாம் என்று நொந்து கொண்டார் பட்டர்.

அந்த நேரத்தில், பட்டர் தம்பதியரின் பத்து வயதே நிரம்பிய அழகுப் பெண் குழந்தை திவ்யா ஓடோடி வந்து இருவரின் முன் நின்றது. தோப்பனாரைப் பார்த்து, அப்பா! ஏனப்பா நெல்லைக் காயப்போட வேண்டாம்னிட்டேள் அதான்… நன்னா வெயில் அடிக்குதேயப்பா என்றது.

அதில்லைடி… திடீர்னு மழை பெய்ஞ்சிட்டா… நெல்லெல்லாம் ஈரமாயிடுமே. அதான் வேண்டாங்கிறேன், செல்லமாகக் குழந்தையின் கன்னத்தில் தட்டிக்கொண்டு, செல்லமே! சாமிக்கு நாளைக்கு நெய்வேத்தியம் இத அரிசியாக்கித்தான் பண்ணணும். இதுவும் நனைஞ்சுட்டா பண்ண முடியாதே, அதான் பயப்படறேன் என்றார் தோப்பனார் அம்பிப் பட்டர் குழந்தையிடம்.

ஏம்பா பயப்படறே. சாமிக்குத்தான இந்த நெல்லு என்றது குழந்தை. ஆமாம் என்றார் அய்யர்.

ஊரெல்லாம் மழை பெய்ஞ்சி வெள்ளமாய்த் தண்ணி ஓடிண்டிருந்தப்போ சாமிக்குன்னு காயப்போட்டிருந்த நெல்லு மட்டும் மழையில நனையாம நம்ம சாமி காத்திட்டாரு. அதனாலதான் அவருக்கு நெல்வேலி அப்பன்னு பேரு வந்துச்சுன்னு நீதானப்பா எனக்கு ஒரு பெரிய கதையே சொன்ன. பின்ன ஏன் இப்பப் பயப்படறேள். சாமிதான் இப்பவும் நெல்லு நனையாமப் பார்த்துக்குவாரே…

நான்தான் சொன்னேன். அதுக்கு என்ன இப்போ, வாய மூடிண்டு இரு என்றார் அய்யர் குழந்தையை. அது விடுவதாக இல்லை. நீ மட்டுமா சொன்ன? எங்க டீச்சர்கூட ஸ்கூல்ல அப்படித்தான் சொன்னா. நம்ம ஊருக்குத் திருநெல்வேலின்னு எப்பப் பேரு வந்திச்சு தெரியுமான்னு இந்தக் கதையெல்லாம் சொல்லி சாமியப் பெருமையா பேசினாளே என்றது குழந்தை. ஆத்திரம் பொங்க… அதெல்லாம் அப்போடி. அப்போவா? அப்போ, இப்போ நெல்லைக் காக்க மாட்டாரா சாமி என்றது குழந்தை.

பட்டர் மெதுவாக, அடியே குழந்தை! அதெல்லாம் கதைடி. நம்மவா, நமக்காகச் சொல்லி வெச்ச கதைடி. வேலியாவது வெங்காயமாவது. காக்கிறதாவது பார்க்கிறதாவது… அதெல்லாம் பொய்டீ. கொடிமரத்துப் பொன்னையே சுரண்டிண்டு போறா… எது கேட்குது?- எல்லாம் நம்மவா பொழைப்புக்காக நம்ம மூத்தவால்லாம் சொல்லி, எழுதிவெச்ச கதைதான். இதை நம்பிண்டு பக்த பயித்தியங்கள் வர்றதாலதான் நாம வயிறாரப் போட்டுட்டு வாழமுடியுது. இல்லைன்னா புவ்வாவுக்கு வழியேது என்றார் நம்பிப் பட்டர்.

குழந்தை சப்தமாக, அப்போ நாம பொய் சொல்லித்தான் சாப்பிடுறோமா என்றது. சத்தம் போடாதடீ. அக்ரஹாரத்துல இப்போ அன்னிய ஜனங்களெல்லாம் குடியேறி வந்துட்டா. அவாளுக்கு இந்த சேதி தெரிஞ்சா நம்மள உண்டு இல்லைன்னு பண்ணிருவா. பின்ன நம்ம பண்டி நிரம்பி வழியாது… வண்டி ஏத்திருவா நாம வந்த நாட்டுக்கே என்றார் தோப்பனார். அப்போ நாம… என சத்தமாக மீண்டும் வாயைத் திறந்த குழந்தையின் வாயை மூடினாள் தாய் கோகுலம்.

தாயின் கையை விலக்கிய குழந்தை கேட்டது, பொய் சொல்லக் கூடாது பாப்பா என நம்ம பாரதியாரு சொன்னதெல்லாம் தப்பா? நீங்களுந்தான் பொய், களவு, சூதெல்லாம் இல்லாம நன்னா வளரணும்டீன்னு சொன்னேள். இப்போ பொய் சொன்னாத்தான் சாப்பாடு என்கிறேளே.

அடியே.. அது வேற.. இது வேறடி என்றாள் தாய். அப்போ.. என் ஃபிரண்ட் சொன்னதெல்லாம் உண்மைதான் போலிருக்கு என்றது குழந்தை. என்னடீ சொன்னா உன் ஃப்ரண்ட்? என்றனர் பெற்றவர் இருவரும்.

கடவுளே பொய்யின்னு அவா அப்பா அம்மா சொல்வாளாம். என் ஃப்ரண்டும் கோவிலுக்கே போகமாட்டாளாம். என்னையும், போகாதடி என்னைப்போல இருடீன்னு சொன்னா… சரிதான்.. அவா சொல்றதுதான் சரி…  நெல்லைக் காக்காத கடவுள்.. நம்மள எங்க காக்கப்போறது.. எல்லாமே பொய்தான். புரிஞ்சுபோச்சு என சொல்லிக் கொண்டே வெளியே ஓடியது குழந்தை.

பெற்றோர் திகைத்தனர். அந்த நினைவோடு அப்பிஞ்சு உள்ளம் இரவில் தூங்கவும் சென்றது. எப்படி விடியும்? குழந்தையை எப்படி மாற்றுவது? நெல்வேலியப்பன் என்குமா? பொய்வேலி அப்பன் என்றிடுமா? எப்படி விடியும்?-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *