மின்கடத்தும் கான்கிரீட் சாலை!
சிவகாசி பொறியியல் மாணவிகள் சாதனை!
“பனி பொழியும் இடங்களில் சாலையில் தேங்கும் பனிக்கட்டிகளை அகற்றுவது என்பது சவாலாகும். அதுபோன்று பனி பொழியும் இடங்களில் உள்ள சாலைப் பகுதிகளில் மின்கடத்தும் கான்கிரீட்டைப் பயன்-படுத்தினால், பனிக்கட்டிகள் கரைந்து சாலை சீராகும்” என விருதுநகர் மாவட்டம் சிவகாசி “மெட்கோ சிலன்’’ பொறியியல் கல்லூரி கட்டடவியல்துறை மாணவிகள் எம்.அமிர்தவர்ஷினி மற்றும் ஜெ.அட்லின் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.
குளிர்ப்பிரதேசங்களில் பனிக்கட்டிகளை அகற்ற தற்போது, சோடியம் குளோரைடு போன்ற உப்புக்களைத் தூவுகிறார்கள். இந்த உப்பு மலிவான விலையில் கிடைத்தாலும், நிலத்தடி நீரையும், விவசாயத்தையும் மாசடையச் செய்யும். இதையடுத்து மாற்று வழியாக கேபிள்களை கான்கிரீட்டில் பதித்து, அதன் வழியே வெப்பமான திரவங்களைச் செலுத்தி, வெப்பமடையச் செய்து பனிக்கட்டிகளை உருகச் செய்கிறார்கள். இது மிகவும் கடினமான முறையாகும். மேலும் போக்குவரத்து பாதிப்பு, கசிவு, உயர் அழுத்தத்தினால் குழாய் வெடிக்கும் அபாயமும் உள்ளது.
ஆனால் நாம் பயன்படுத்தும் சாதாரண கான்கிரீட் அதன் வழியே மின்சாரத்தைக் கடத்தும்போது, தேவையான வெப்பத்தை வெளியிடுவதில்லை. எனவே, சாதாரண கான்கிரீட் கலவையில், மின்கடத்தும் கனிமங்களைச் சேர்த்து தயாரித்திருக்கிறோம். இந்தக் கான்கிரீட்டை சாலையில் 0.08 மீட்டர் உயரம் அமைத்தால் போதுமானதாகும். இந்தக் கான்கிரீட்டை குளிர்ப்பிரதேசத்தில் வீடு கட்டவும் பயன்படுத்தலாம்.
* * *
தேனீர் விற்கும் தாழ்த்தப்பட்டவர் மகள் நீதிபதியாகி சாதனை!
தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து பஞ்சாப் மாநிலத்தில் முதல்முறையாக நீதித்துறைத் தேர்வில் முதலிடத்தில் வென்று நீதிபதியான தேனீர் விற்பவரின் மகள்
பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மாவட்டத்தில் நகோதார் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நீதிமன்றப் பகுதியில் நீண்ட காலமாக தேனீர் விற்பனை செய்து வருபவர் சுரீந்தர் குமார் என்பவர் ஆவார்.
அவருடைய மகளான சுருதி (23 வயது) பஞ்சாப் மாநிலத்தில் நீதித்துறை அலுவலர்கள் பணிக்கான தேர்வில் முதல் முறை தேர்வெழுதியபோதே தேர்ச்சி பெற்றார். ஓராண்டு கால பயிற்சியை முடித்து நீதி வழங்கும் தகுதி பெற்றுள்ளார்.
“நான் எப்போதுமே சட்ட ரீதியிலான பணிகளில் ஈடுபடுவதற்கே விரும்பினேன். நீதிபதியாக ஆகவேண்டும் என்று விரும்பினேன். தாழ்த்தப்பட்டவர் வகுப்பினருக்கான ஒதுக்கீட்டில் முதல்முறையாக தேர்வெழுதி, முதல் இடத்தையும் பெற்றுள்ளேன்’’ என்று சுருதி பெருமிதத்துடன் கூறினார்.
பாட்டியாலாவில் குருநானக் தேவ் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். ஒரு பெண் வெற்றியாளராக சுருதி நாடுமுழுவதும் நடைபெறுகின்ற போட்டித் தேர்வுகளில் பெண்கள் முதல் இடங்களைப் பெறுகிறார்கள் என்று பெருமகிழ்வுடன் குறிப்பிட்டார். அவர் கூறும்போது, “நான் மட்டுமல்ல, என்னுடைய தோழியரில் ஹார்ப்ரீத் கவுர் சித்து என்பவரும் நீதித்துறைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளா£¢. அவர் தந்தையார் காவல்துறை ஆய்வாளர்’’ என்றார்.
சுருதி நீதிபதி பணிக்கு தேர்வானதை யொட்டி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பலருடைய பாராட்டுகளும் அவருக்கு குவிந்த வண்ணம் உள்ளன.
-www.kractivist.org/punjab-daughter-joins-the-same-court-as-a-judge-where-her-father-sells-tea/