சிறுகதை : பொம்மை விளையாட்டு

பிப்ரவரி 01-15

– கடலூர் இள.புகழேந்தி

‘எத்தனை மணிக்கு போவணும், டேய்! உன்னைத்தான் கேக்கறேன்’

‘சரியா பத்து மணிக்குன்னு எத்தனை தடவைம்மா சொல்றது. நான் கிளம்பி ஒரு மணி நேரமாச்சு.’

‘கொஞ்சம் இருடா முதமுதல் (நேர்காணலுக்கு) இண்டர்வியூக்கு போற சகுனம் சரியா வர வேண்டாமாடா’

‘அட போம்மா, சகுனம் எப்ப சரியா வரது. நான் எப்ப போறது? நேரம் போச்சுன்னா அவ்வளவுதான் சொல்லிட்டேன்.’

‘அபசகுனமா பேசாதேடா, செத்த இரு வரேன்’

வேகமா வெளியில் போய் சாலையைப் பார்த்திட்டு அமுதன் அம்மா கோதை, தலையில் அடித்துக் கொள்கிறார், அலுப்புடன்.

‘சே… தாலியறுத்தவ வரா… என்ன இழவா இருக்கு. அமுது… இரு அவ போய் தொலையட்டும்.’

‘ஏம்மா நேரம் ஆவுது. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. என்னை விடு. நான் அட்டெண்ட் பண்ணாலே வேலை கெடைச்சிடும் நம்பிக்கையிருக்கு.

‘சரி, சரி, படிச்சிட்டேயில்ல. அதான் இப்படி பேசற. கடவுள் கண்ணை திறந்திருக்கான். கும்பிட்டுட்டு போடான்னா முடியாதுன்றே’

‘பின்ன என்னம்மா, பொம்மையை நீயே செய்வே; அப்புறம் அந்த பொம்மைகிட்ட போய் அதை செய் இதை செய்னு நிப்ப; அழுவே அது என்னா பண்ணும்.’
கோதைக்குக் கோவம் வந்துவிட்டது.

‘டேய் அமுது, இப்படியெல்லாம் பேசாதே. சொல்லிட்டேன்.’

‘கோபப்படாதம்மா, பொம்மைகளை செஞ்சு வித்து நீயும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை படிக்க வச்சீங்க. ஓ… புள்ள நல்லாயிருக்கனும்னு சகுனம் பாக்கறதைவிட வீடு வீடா காலைல நாலு மணியிலேயிருந்து வேலைப் பார்த்தியேம்மா அந்த உழைப்புதாம்மா இன்னைக்கு என்னை இஞ்சீனியர் ஆக்குச்சு. உன்னை மாதிரியில்லன்னாலும் அதில பாதியாவது நான் உழைக்கணும் உன்னை நல்லா வச்சிக்கணும். ஓ.. மகிழ்ச்சிதாம்மா என் மகிழ்ச்சி. எனக்கு எல்லாமே நீதான்’ என்று.
கண்கலங்க அமுதன் சொன்னவுடன் கோதையும் கலங்கி

‘அமுதா, சாமியை பழிக்காதேன்னு சொன்னேன். ஏண்டா ஒன்னை எனக்குத் தெரியாதா?’

‘கோபப்படாம, வருத்தப்படாம நான் சொல்றதைக் கேளும்மா. பெரியார் படத்தை வீட்ல மாட்டி வைச்சிருக்கேன்னு உனக்குத் தெரியும். அவரை கும்பிட்டு படையல் வச்சி சாமியாக்கி அதைக் கொடு இதைக் கொடுன்னு கேட்கறதுக்கு இல்லைம்மா; அது முட்டாள்தனம். நம்மை போன்ற ஒடுக்கப்பட்டு வாழ்நாள் எல்லாம் கஷ்டப்பட்டு இருப்பது தலைவிதி. கடவுள் இந்தச் சாதிக்கு இதைத்தான்னு எழுதிவிட்டான்; வேற வழியில்லேன்னு வாழறதை எத்தனை காலம்மா நம்பி கிடந்தாங்க உழைக்கிற மக்கள். எந்தச் சாமியும் அதை மாத்தல. கும்பிடறது கோயில் விழா எடுக்கறது; ஆட்டை வெட்றது ஏன்? சாமி பொம்மை முன்னாலேயே அடிச்சிக்கிட்டு சாகறது; கோர்ட்டுக்கு அலையறது. இவ்வளவும் நடந்த பிறகும் மறுபடியும் திருவிழா பூசை புனஸ்காரம்! ஆனா யாராவது நல்லா வாழ்ந்தாங்களா? படிச்சி உயர்ந்தாங்களா? பெரிய வேலைகளுக்கு போனாங்களா? இல்லையே… உழைக்கவும் கஷ்டப்படவும் தான் நாம பொறந்திருக்கோம்னு ஏம்மா நம்பணும். என்னை படிக்க வைச்சியே ஏன்? ஓ… சாமி விதித்த வாழ்வை மாத்திக்காட்டி ஜெயிச்சிருக்கம்மா.. படமா இருக்கிற பெரியார் போராடி பெற்ற இடஒதுக்கீட்டில் படிச்சவன்தான் ஓ.. புள்ள, அவன் நன்றியுள்ளவன் அதான் பெரியார் படத்தை வைச்சிருக்கேன். நேரத்தோட போனா நேர்காணல் நீ சகுனம் பார்த்து தாமதமா போனா, வேலை அவ்வளவுதான். நான் நன்றியுள்ளவனா இருக்கிறது தப்பாம்மா? காலத்தோட எதையும் செய்யறதுதான் முக்கியமே தவிர, காலம் பார்த்து, காட்சி பார்த்து செய்யறது முக்கியமல்ல. நான் சொல்லி நீ எதையும் உடனே மாத்திக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும், … அமுதை இடைமறித்து கோதை,

‘அமுது, எல்லாமே ஒரு பழக்கம் தாண்டா… நீ சொல்லாம சொல்ற… புரியுதடா… ஒங்கப்பா… தங்கமானவர். ஆனால் கோயில் விழாவுல சாமி ஊர்வலத் தகராறுல அநியாயமா வெட்டப்பட்டு செத்தார்’ என்ற சொல்லிக் கொண்டே அழுதாள்.

‘அம்மா… அழாதம்மா… உன் மனசு கஷ்டபட நான் பேசலேம்மா… நீ ஒ இஷ்டப்படி இருந்துக்கோ ஆனா என்னை கட்டாயப்படுத்தாதன்னுதான் சொல்ல வந்தேன்.’

‘இல்லப்பா… நீ சொல்றதை தப்புன்னு சொல்ல வரல. அய்யா படத்தை நீ வைச்சிருக்கே நானும் ஒங்கப்பாவும் எவ்வளவு பெரியார் பொம்மைகளை வித்திருக்கோம். ஒங்கப்பாவுக்கு பெரியார் பொம்மை செய்யத் தெரிந்தது. அவர் சொல்றதை கேட்க தெரியல. ம்… தெரிஞ்சிருந்தா செத்தே போயிருக்கமாட்டார். சரிப்பா நீ கிளம்பு… நீயாவது பெரியார் சொன்னபடி நட…’

‘அம்மா… தாயிறுத்தவன்னு ஒண்ணும் கிடையாதும்மா… ஆம்பளை அயோக்கியனா, குடிகாரனா, பொறுக்கி பயலா திரிஞ்சாக்கூட பரவாயில்ல பொறுத்துக்கணும். தாலி மட்டும் கழுத்தில தொங்கினா போதும்! தீர்க்க சுமங்கலிங்கிறது அவ வாழ சொல்றது இல்லம்மா; ஆம்பளை வாழனும்னு சொல்றதும்மா! நீங்க தப்பா நினைக்கக்கூடாது அப்பா இல்லாம தாலியில்லாம என்னை காலேஜிக்கு அனுப்பினீங்களே, நான் படிக்கல, பாசாவுல, இன்னைக்கும் நேர்காணல் போய் வெற்றியா வருவேம்மா… எனக்கு நம்பிக்கையிருக்கு அது பெரியார் சொன்ன தன்னம்பிக்கை’ என்று சொல்லியபடியே புறப்பட்டான்.

அவன் போறதையே பாத்துகிட்டு இருந்த கோதைக்கு அமுதன் பேசின பேச்சு விழிப்பை தந்ததோ இல்லையோ ஒரு விதப் பெருமையைத் தந்தது, என்பது அவளது முகத்தில் தெரிந்தது. ஏதோ விழுந்து உடைந்தது போல சத்தம். திரும்பி பார்த்தாள் மூஞ்சுறு (எலி) ஒன்று மேலேயிருந்த பிள்ளையார் பொம்மையை தள்ளிவிட்டு ஓடிக்கொண்டிருந்தது. பதற்றம் வராமல் கூட்டித்தள்ளத் துடைப்பத்தைத் தேடினாள்! ஆம் தன்னையே காத்துக்கொள்ள முடியாத பிள்ளையாரைத் தள்ளத்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *