பிரான்ஸில் நடைபெறும் வாள்வீச்சுப் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் பவானி, லீக் ஆட்டத்தில் பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களிடம் விளையாடி, நான்கு ஆட்டங்களில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
2014ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த பவானி. அதோடு, இந்த ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற சீனியர் லெவல் வாள்வீச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். இது மட்டுமின்றி காமன்வெல்த் ஜூனியர் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களையும் வென்றுள்ளார்.
எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்துவரும் பவானிக்கு அய்.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தாலும் வாள் வீச்சில் சாதிக்க வேண்டும் என்று தற்போது தீவிரம் காட்டுகிறார். வாள் வீச்சுப் பயிற்சியைத் தன் பள்ளியில் 11 வயதிலிருந்து விளையாட ஆரம்பித்தார். பயிற்சிக்காக நேரு ஸ்டேடியத்தை அதிகம் பயன்படுத்துகிறார்.
“5 வருடங்கள் விஸ்வநாதன் சார் எனக்குப் பயிற்சியாளராக இருந்தார். அந்த நேரத்தில் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, முதன்முதலில் கேரளாவில் இருந்து என்னை அழைத்தது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த வாள்விச்சுப் பயிற்சியாளர் சாகர் லாக் எனக்குப் பயிற்சி அளித்தார். அங்குதான் முதன் முதலில் வாள் வீச்சு சண்டையை முழுமையாகக் கற்றுக்கொண்டேன்.
நான் பயிற்சி பெற்ற ஆரம்பத்தில் என் கையில் சிறு கிறல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், பெரிய அளவில் இல்லை. கவனத்தோடு விளையாடினால் சிக்கலே இருக்காது’’ என சாதாரணமாகக் கூறும் பவானி, ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பயிற்சி எடுத்துக்கொள்கிறார். “வீட்டில் நீளமாக எந்தப் பொருள் கையில் கிடைத்தாலும் அதை வைத்துச் சண்டை போட ஆரம்பித்து விடுவாள்’’ என்கிறார் பவானியின் தாயார்.
“நான் இந்தப் போட்டிகளுக்கு ஸ்பான்சர்ஸ் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். பல இடங்களில் கேட்டும் கிடைக்காத நிலையில், முதலமைச்சரிடம் மனு அளித்தேன். நான் எதிர்பாராத நேரத்தில் முதலமைச்சர் எனக்கு 3 லட்சம் ரூபாய் உதவித்தொகை அளித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னிடம் அவர், ‘நீ நன்றாக விளையாட வேண்டும். கடுமையான பயிற்சி எடுக்க வேண்டும். 2016ஆம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும்’’ என்று கூறினார். எனக்கு அவருடைய வாழ்த்துகளைப் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணமும் அதுதான்’’.
“வரும் டிசம்பர் மாதம் பாஸ்டன், அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் வாள்வீச்சுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஆனால், அதற்கான பணம் இல்லை. ஸ்பான்சர்ஸ் கிடைத்தால் அதில் பங்கு பெறுவேன்.’’
“பிரான்ஸ் போட்டி குறித்து, இங்கு உலக அளவில் இருந்து, 185 பேர் வாள்வீச்சுப் போட்டிக்கு வந்திருக்கின்றனர். அனைவருடைய இலக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தகுதி பெற வேண்டும் என்பதுதான். அதனால், போட்டிகள் மிகவும் கடுமையாக இருக்கின்றன. இருப்பினும், தற்போது எனக்கு அமெரிக்கப் பயிற்சியாளர் எட்வர்டு கர்ஃபாண்டி என்பவர் 5 மாதங்களாகப் பயிற்சி அளித்து வருகிறார். இவரின் மாணவர்கள் பலர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்கள் பெற்றுள்ளனர். எனவே, எனக்கு அவர் அளிக்கும் பயிற்சியும் ஊக்கமும் ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன்’’ என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார். ஸீ