இணையதளம்
செயலி -Word Web
அகராதி (Dictionary) என்றாலே பெருசு பெருசாக இருக்கும் என்ற நிலையை மாற்றத்தான் அந்தக் காலத்தில் பாக்கெட் டிக்சனரி என்று வந்தது. இன்று எல்லாமே கையடக்கத் திறன்பேசிகளுக்குள் வந்துவிட்ட சூழலில், கணினிக் காலத்திலிருந்தே இந்த இடத்தை திறம்பட நிரப்பிவருவது wordweb. கணினியில் செயல்பட்டது மாதிரியே இணைய இணைப்பு இல்லாவிட்டாலும், சொற்களுக்கான பொருள், இலக்கணம், பயன்பாடு போன்றவற்றை எடுத்துக் காட்டுகளோடு தெரிந்துகொள்ள உதவுகிறது wordweb செயலி ஆண்டிராய்டு, அய்.ஓ.எஸ், விண்டோஸ் ஆகிய மூன்று இயங்குதளங்-களிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. இச்செயலி கூடுதலாக ஒலி வடிவிலும் தனிச் செயலியை வைத்திருக்கிறது wordweb. http://wordweb.info/mobile.html இவ்விணைப்பின் மூலம் செயலிகள் இருக்குமிடம் சென்று சேரலாம்.
நூல்:
நூல்: பெரியார் களஞ்சியம் – திருக்குறள்- வள்ளுவர், தொகுப்பாசிரியர்: பதிப்பாளர் டாக்டர் கி.வீரமணி வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், 84/1(50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7. பக்கங்கள்: 368 நன்கொடை: ரூ.250/-
தந்தை பெரியாரின் எழுத்துகளும் பேச்சுகளும் தொகுக்கப்பட்டு பெரியார் களஞ்சியம் எனும் தலைப்பில் வெளிவரும் வரிசையில் இது 37ஆம் நூலாகும்.
இத்தொகுதி திருக்குறள் மற்றும் வள்ளுவர் பற்றிய தந்தை பெரியாரின் ஆய்வு கட்டுரைகளையும் உரைகளையும் கொண்ட அறிவுக் களஞ்சியம்.
பல கோணங்களில் வள்ளுவர்_திருக்குறள்_ தமிழர் வாழ்வியல் பற்றிய செய்திகளை உள்ளடக்கியது. இதில் தந்தை பெரியார் அவர்கள் திருக்குறள் என்பது ஆரியர்களின் கொள்கைகளை மறுக்க ஏற்பட்டதே என்பதை ஆதாரக் குறள்களோடு விளக்குகிறார்.
மேலும், குறளுக்குள் கடவுள், மதம், ஜாதி, மோட்சம், முன்ஜென்மம் போன்ற சொற்களே இல்லாததை சுட்டிக்காட்டும் பெரியார், குறள் முழுவதும் அறிவுக்கும் மனித சமத்துவத்திற்கும் முதலிடம் தரப்பட்டுள்ளதை ஆதாரப்பூர்வமாக _ ஆய்வுப்பூர்வமாக விளக்குகிறார். புலவர்களின் வீட்டு புத்தக அலமாரிகளில் இருந்த அறிவுக் களஞ்சியம் திருக்குறளைப் பரப்பியதில் பெரியார் அவர்களின் அரும்பணியை அறிந்து கொள்ளும் விதத்தில் பெரியார் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க வள்ளுவர்_குறள் (தமிழர் நெறிவிளக்க) மாநாடுகளைப் பற்றிய செய்திகளும் இணைக்கப்யபட்டுள்ளன.
குறளின் பெருமையை அறிய அவசியம் படிக்க வேண்டிய ஆய்வுக் களஞ்சியமாய் இந்நூல் விளங்குகிறது.
ஆவணப்படம்
இந்தியா – 1967
இது இந்தியா விடுதலை பெற்று 20 ஆண்டுகள் கழித்து அதாவது, 1967-இல் இந்தியாவின் சமூக, பொருளாதார நிலை பற்றி ஆய்வு செய்யும் விதமாக, இந்திய அரசின் பிலிம் டிவிசன் துறையின் தயாரிப்பாகும்.
இந்த ஆவணப்படம் ஒரு ஆச்சரியமான பதிவு, இது தயாரிக்கப்பட்ட பிறகு பார்வையிட்ட அன்றைய பிலிம்டிவிசன் துறையினர் இதை வெளியிட மறுத்து பெட்டிக்குள் வைத்துப் பூட்டி விட்டனர். காரணம் இது அன்றைய இந்தியா ஏற்றத் தாழ்வுகளும், சமூக உயர்வு தாழ்வுகளின் பிடியிலிருந்து விடுபடாமல் இருந்ததை உள்ளது உள்ளபடியே பிரதிபலித்ததால் வெளியிடாமலேயே இருந்து விட்டனர். அதன்பிறகு 30 ஆண்டுகள் கழித்து எந்த பிலிம்டிவிசன் இந்தியா _ 1967 ஆவணப்படத்தை பூட்டி வைத்ததோ, அதே பிலிம் டிவிசன் பூட்டைத் திறந்து, தாங்களும் சிறந்த கலை நயமுள்ள ஆவணப்படங்களை தயாரித்திருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக வெளியிட்டிருந்தனர்.
இது மிகச்சிறந்த ஆவணப்படம் என்பதற்கு இன்னொரு சான்று இதில் உரையாடல்களே இல்லை. வெறும் காட்சியமைப்பே சொல்லவந்த தகவல்களை முழுமையாகப் புரிந்துகொள்ளச் செய்துவிடுகிறது. வெறுமனே சமூகத்தின் உயர்ந்த நிலையிலும், தாழ்ந்த நிலையிலும் மற்றும் ஜாதிப் பாகுப்பாட்டின் ஏற்றத் தாழ்வுகளையும் காட்சிகள் மூலமே மாறிமாறி காட்டப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். ஆனால் 1967இல் இந்த ஆவணப்படம் எழுப்பிய கேள்விகள் இன்றும் முற்று முழுதாகப் பொருந்துகின்றன. பதில்களைத்தான் இன்னும் தேடிக்கொண்டேயிருக்கிறோம். இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் அபிஜித் முகுல் கிசோர்.