பெண்கள் வேலைக்குச் செல்வதால்தான் வேலையின்மை ஏற்படுகிறதாம்! 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பதிவு!

அக்டோபர் 01-15

டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு படிக்காத பாமரமக்கள் பேசுவதையெல்லாம் பாடத்திட்டத்தில் வைக்கிறார்கள் என்றால் இந்த நாட்டில் அரசு எதற்கு? கல்வித் துறை எதற்கு? பாடத் திட்டக்குழு எதற்கு?

இந்தக் கொடுமை எங்கு என்கிறீர்களா?

சத்தீஷ்கரில்தான்!

சத்தீஷ்கரின் இடைநிலைக் கல்விக் கழகத்தால் (சிநிஙிஷிணி) வெளியிடப்பட்டுள்ள ஹிந்தி மொழியில் உள்ள பாடநூலில் இப்படிப்பட்ட ஒரு சட்டவிரோத, சமூக விரோத கருத்து சொல்லப்பட்டுள்ளது!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அடுப்படி வேலைக்கும், பிள்ளை பெற்று வளர்ப்பதற்கும் சம்பளமில்லாத முழு நேர வேலையாட்களாக நடத்தப்பட்ட பெண்கள் இக்காலத்தில்தான் படிக்கும் வாய்ப்பு பெற்று, ஆண்களுக்கு நிகராய்ச் சாதனைப் படைத்து வேலைவாய்ப்புகளையும் பெற்று, தன் காலில் நிற்கும் தகுதியைப் பெற்று வருகின்றனர்.

இதைப் பொறுக்காத ஆணாதிக்க வெறியர்களும், மதவாத அரசும் மனித நேயத்திற்குப் புறம்பான மடத்தனமான கருத்துகளைக் கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும். பிஞ்சுகளின் உள்ளத்தில் தவறான கருத்தைப் பதிவு செய்யும் செயல் இது.

வேலைவாய்ப்பு என்பது அரசு ஏற்படுத்தித் தரவேண்டிய கடமையும், பொறுப்பும் ஆகும். அதை மறைத்து, பெண்கள் வேலைக்குப் போவதுதான் வேலையின்மைக்குக் காரணம் என்று பள்ளி மாணவர்கள் உள்ளத்தில் பதியச் செய்வது அயோக்கியத் தனமாகும்! இதை ஒரு கல்வித் துறையே செய்வது கயமைத்தனமாகும்!

பெண் என்பவரும் இந்த நாட்டின் குடிமகள். அவள் கற்கவும், வேலைக்குச் செல்லவும் வேண்டும். எவ்வளவு பேர் வேலைக்குத் தகுதி பெற்று இருக்கிறார்களோ அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டியது அரசின் கடமை.

வேலையின்மை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தொழில் வளர்ச்சியின்மை, போதிய கடன் வசதியின்மை, இருக்கின்ற இயற்கை வளங்களை சரியாக கண்டறியாமை, முழுமையாக, முறையாகப் பயன்படுத்தாமை, முறையாகத் திட்டமிடாமை, சிறுதொழில்கள் வளர்க்கப்படாமை, சேமிப்பு அதிகரிக்காமை,  வருவாய் இன்மை; வாங்கும் சக்தி குறைவாய் இருப்பது. உள்நாட்டுப் பொருட்களைப் புறக்கணித்து, அயல்நாட்டுப் பொருட்களை அதிகம் வாங்குவது. அந்நிய முதலீடுகளை சரியாகப் பயன்படுத்தாமை, மக்கள் தொகையை உத்தம மக்கள் தொகை அளவிற்குக் கட்டுப்படுத்தாமை போன்ற காரணிகளே வேலையின்மைக்குக் காரணங்களேயன்றி, பெண்கள் வேலைக்குச்  செல்வதால் அல்ல.

பெண்கள் வேலைக்குப் போகாவிட்டால் வேலையின்மை குறையும் என்று சொல்பவர்கள் அடுத்து, அவனவன் குலத் தொழிலைச் செய்தால் வேலையின்மை குறையும் என்று கூறுவர். கடைசியாக ஆரிய பார்ப்பனர்களாகிய நாங்கள் மட்டும் படிப்போம், வேலைக்குப் போவோம், சூத்திரனெல்லாம் அடிமை வேலை செய்ய வேண்டும் என்பர்.

ஆக, இவர்கள் சிந்தனை இப்படித்தான் செல்லும். ஒட்டுமொத்த பெண்களும், ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உடனடியாக ஓரணியில் நின்று மதவெறிக் கூட்டத்திற்கு பாடம் புகட்டுவதோடு, நம் உரிமைகளை நாம் காத்துக்கொண்டு, மேலெழ வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *