உற்சாக சுற்றுலாத் தொடர் – 16

அக்டோபர் 01-15

நடுக்கடலில் ஒரு நகரம்!

 

– மருத்துவர்கள் சோம&சரோ இளங்கோவன்

கேமென் தீவுகள்!

உலகத்தில் கேமென் தீவு அறியப் பட்டுள்ளது பணம் பதுக்கும் நாடு என்று! ஆம்! அங்கு அனைத்து வங்கிகளின் கிளைகளும் உலகச் செல்வந்தர்களின் பணமும் சட்டப்பூர்வமாகப் பதுக்கப்பட்டு வருகின்றது என்பது உண்மைதான். ஆனால், அங்கு அதற்காகச் சிறப்பான சட்ட திட்டங்கள் உள்ளன. அதற்கு உட்பட்டுத்தான் பல்லாயிரக்கணக்கான வெறும் காகித நிறுவனங்கள் அங்கே நிறுவப்பட்டுள்ளன. நடக்கும் பண்டமாற்றும் பெரும்பாலும் காகிதமும், இணைய பரிமாற்றமுமேதான்! மூட்டை மூட்டையான பணமில்லை! அது தவிர, அது ஒரு மிகவும் அழகான தீவு என்பதால் பல உல்லாசப் பயணிகள், எங்களைப் போன்ற ஏழைகளும் நிறையச் செல்கின்றனர்! அந்தப் பதுக்கல் காராரர்களுடன் ஒப்பிட்டால் நாம் அனைவரும் ஏழைகள் தானே!

அருமையான கடற்கரைகள் உள்ளன. ஏழு கல் தொலைவு நடக்கக்கூடிய கடற்கரை உள்ளது.  ஏழு கல் கடற்கரை என்று அழைக்கப்பட்டது இப்போது அயந்தரைக்கல் தொலைவு தானாம்! கடற்கரையையே நமது ஊர் ஏரிகளை விழுங்கி விட்ட மாதிரி விழுங்கி விட்டார்கள் போல! அது பொதுச் சொத்து. அனைவரும் நடக்கலாம். நல்ல மீன் பிடிப்பு, அது சார்ந்த தொழில்கள் உள்ளன. கரிபியன் தீவுகளிலேயே  செல்வம் நிறைந்த நாடு. அங்கு மக்களுக்கு வரி கிடையாது. ஜமாய்க்காவில் இருந்து வந்தவர்கள் தாம் நாட்டின் முன்னோடிகள். ஆங்கிலம் பேசப்படும் இங்கிலாந்தின் ஆதிக்கத் தீவுகளில் ஒன்று.

எங்கு பார்த்தாலும் பல நாட்டு உல்லாசப் பயணிகளும், படகுகள், மீன் பிடிப்பு, மீன் பிடிப்புப் போட்டிகள் என்று கல கல வென்று இருக்கும். கடற்கரைகளில் பல வகையான விடுதிகளும், ஆடம்பர நிறுவனங்களும் இருக்கின்றன. மற்ற உணவுக் கூடங்கள், கடற்கரை விளையாட்டுக்கள் என்று எங்கும் மக்கள் நிறைந்திருந்தனர். 2004இல் அடித்த பெரும் புயல் மிகுந்த அழிவை உண்டாக்கியிருந்தாலும் மீண்டும் அனைத்தும் கட்டப்பட்டு உயிர்த்தெழுந்து விட்டன.

ஸ்டிங் ரே சிடி (ஷிவீஸீரீ ஸிணீஹ் சிவீஹ்) என்ற நகரம் எங்கும் பேசப்பட்டது! அது என்னவென்று கேட்டோம். நடுக்கடலிலே இந்த திருக்கை மீன்கள் வாழும் மணல் மேடு என்றனர். அதைப் பார்க்காத பயணிகளே இல்லையெனும் அளவிற்கு அனைவரும் சென்று கொண்டிருந்தனர். நாங்களும் அங்கு சென்றோம். பல படகுகள் பெரிதும் சிறிதுமாக. எங்கள் படகும் அங்கே சென்றது. அங்கே இடுப்பளவு ஆழமே உள்ள மணல் மேடு! வெள்ளை வெளேறென்ற மணல். நீல நிற ஆனால் தெளிவாக அனைத்தையும் பார்க்கும்படியான கடல் நீர். மேலே நல்ல சூரிய ஒளி. வெயில் தெரியாத காற்று! புரட்சிக்கவிஞர் அங்கிருந்தால் அப்படியே வடித்திருப்பார் இன்ப ஊற்று!

அங்கே ஒவ்வொரு படகிலிருந்தும் ஒரு வழிகாட்டி ஒன்றிரண்டு பெரிய திருக்கை மீன்களை பயணிகளின் கைகளில் தவழ விட்டுக் கொண்டிருந்தார்!

எங்கள் கைகளிலும் கொடுத்தார். அதன் உடலும், வயிறும் வழவழவென்று எங்கள் கைகளின் மேல் அது தவழ்ந்து சென்றது. அவர் அதன் பெயரைச் சொல்லி அழைத்து அதற்கு முத்தம் கொடுத்து நன்றி சொன்னார்!

பல போட்டோக்கள் அவரவர் எடுப்பதும், அந்தப் படகோட்டியின் ஆள் எடுப்பதும் ஒரு பெரிய நாடக அரங்கேற்றமே அங்கு நடந்து பெரிய படப்பிடிப்பாக இருந்தது! ஒவ்வொரு படகின் அருகிலும் ஓரிரு மீன்கள் விளையாடிக் கொண்டிருந்தன. அதன் வால்கள் கத்தி போல் நீண்டு நான்கடி அளவிற்கு இருக்கும். அதை மட்டும் யாருந்தொடாமலும், அதன் வாலின் அருகே யாரும் செல்லாமலும் மட்டும் படகின் ஆட்கள் பார்த்துக் கொண்டனர். அந்த வால் குத்தித்தான் ஆஸ்திரேலியாவின் பெரிய முதலை பிடிக்கும் வீரர் மரணமடைந்தார்!

இது உண்டான விதம் மிகவும் ஆர்வமானது.  கடலில் மீன் பிடித்தவர்கள் திரும்பும் போது இந்த மணல் மேட்டருகே படகுகளை நிறுத்திவிட்டு அங்கு மீன்களை சுத்தம் செய்வார்களாம். கடல்  அலைகளில்லாது அமைதியாக இருக்குமிடம். கரையில் உள்ளது போல் கொசு, ஈக்கள் தொந்தரவு இல்லை. மீன்களின் குடல், கழிவு பாகங்களை அப்படியே கடலில் போட்டு விடலாம். அவர்கள் அவ்வாறு செய்தது இந்தக் திருக்கை  மீன்களுக்குப் பெரிய உணவுக் கூடமாகி விட்டது. தினமும் ஆவலுடன் அங்கே மீனவர்களை எதிர் பார்த்துக் காத்திருந்தனவாம். இரண்டு பேர் கடலில் இறங்கி இந்த மீன்களுடன் விளையாடி உறவு கொண்டாட ஆரம்பித்தனர்.

பின்னர் ஒவ்வொரு மீனுக்கும் பெயர் சூட்டி அழைத்து நண்பர்கள் ஆக்கிக் கொண்டனர். இப்போதும் பெயரைச் சொல்லி அழைக்கின்றனர். அந்த மீன்கள் வந்து அவர்களுடன் கொஞ்சி விளையாடுவதும் முத்தம் கொடுப்பதும் நமக்கும் கூட கிடைக்கும், உலக வியப்புக்களில் ஒன்றாக உள்ளது! இந்த இடத்திற்குப் பெயரே ஸ்டிங்ரே சிடி, திருக்கை மீன் நகரம் ஆகிவிட்டது!

இங்கு வரும் பலர் கடலில் அனைத்து விளையாட்டுகளும், கடல் ஸ்கூட்டர், விசைப் படகு வேகமாக இழுத்துச் செல்ல மேலே பட்டம் போல் அமர்ந்து பறப்பது, ரப்பர் குழாய்களில் அமர்ந்திருக்க அவை விசைப்படகால் இழுத்துச் செல்லப் படுவது என்று வித விதமான அனுபவங்களை அனுபவித்துக் கொண்டிருந்தனர். உல்லாசப் பயணிகள் என்றால் இது தான் உல்லாசம் என்று பல விதமானவற்றைப் பார்க்கலாம்.

இதில் சிலவற்றை நாங்களும் அனுபவித்துள்ளோம். எந்த அச்சமும் இன்றி நன்றாக அனுபவிக்கக் கூடியவை தான். கடற்கரை வந்ததும் உணவு விடுதிகளும், நமது டாஸ்மார்க் மாதிரி ஆனால் அழகும், அடக்கமும், ஒழுங்கும் நிறைந்த குடிக்கும் குடில்கள் கடற்கரையெங்கும்! இசை வேறு காதைத் துளைக்கும்! அனைத்தையும் பார்த்து முடிப்பதற்கும் நமது கப்பல் அழைப்பிற்கும் சரியாக இருக்கும்.

கனவே நனவாகவும், நினைவே கனவாகவும் ஒன்றும் குடிக்காமலேயே தள்ளாடும் மனதுடன் திருக்கை  மீன்கள் கையில் வழ வழ வென்று மிதப்பது போல மிதந்து கப்பலை அடைந்தோம்!

அங்கே பார்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *