உண்டவுடன் நீந்தக் கூடாது
நீந்துதல் உடலுக்கு நல்ல பயிற்சி. உடலுக்கு நலம் பயக்கும் முதன்மையான உடற்பயிற்சி இது. ஆனால், இத்தகு பயனுள்ள நீச்சல் மேற்கொள்ளும் முன் சில நிபந்தனைகளைக் கருத்தில்கொண்டு கடைப்பிடிக்க வேண்டும்.
நீந்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எதுவும் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தே நீந்த வேண்டும். நீந்திய பின் ஏற்படும் பசியைத் தணிக்க சுக்குமல்லி காபி அருந்துவது நல்லது.
வலிப்பு உள்ளவர்கள் நீந்தக் கூடாது
வலிப்பு வந்தால் கைகால்கள் இழுத்துக் கொள்ளும். நம்மால் விரும்பும் வகையில் அசைக்க முடியாது. தரையில் வலிப்பு வந்தாலே நம்மால்அசைய முடியாது. அப்படியிருக்க தண்ணீரில் வலிப்பு வந்தால், நீரில் அமிழ்ந்து இறக்க நேரிடும். எனவே, வலிப்பு உள்ளவர்களும், அடிக்கடிக் கைகால்கள் இழுத்துக் கொள்ளக் கூடியவர்களும் நீந்துவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் இருதய நோயாளிகள், மூச்சுக் கோளாறு உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையின்றி நீந்தக் கூடாது.
அலைகடலில் குளிக்கக் கூடாது
கடலில் இறங்கி நிற்பதும், குளிப்பதும், நீந்துவதும் எல்லோருக்கும் விருப்பமானது; மகிழ்வளிக்கக் கூடியது என்பது உண்மைதான் என்றாலும், ஆழமும், சரிவும், அலை வீச்சும் அதிகமுள்ள கடற்பகுதியில் குளித்தலோ, இறங்கி நிற்றலோ கூடாது. பல கடற்பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்புச் செய்தும், காவல்துறையினர் கண்டிப்புடன் தடுத்தும், ஆர்வம் மற்றும், இளமை உந்தலில் சிலர் கடலில் குளித்து மாண்டுப் போகின்றனர். ஆண்டிற்குப் பல ஆயிரம் பேர் இப்படி இறக்கின்றனர். விபத்து ஏற்படும் என்று தெரிந்தும் அச்செயல்களில் இறங்குவது வீரமும் அல்ல, அறிவுள்ள செயலும் அல்ல.
கருவுற்றப் பெண்கள் கவலை, அதிர்ச்சி அடையக் கூடாது
கருவுற்றப் பெண்கள் ஓய்வும், நிம்மதியும் கொள்ள வேண்டும். மகிழ்வான செய்திகள், காட்சிகள், இன்னிசை, நகைச்சுவை, நிம்மதியான தூக்கம் கட்டாயம்.
அதிர்ச்சி தரும், அச்சம் தரும் காட்சியை, செய்தியைப் பார்க்கவோ, கேட்கவோ கூடாது. அவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
கருவுற்றப் பெண் கண்டதை உண்ணக் கூடாது
கருவுற்றப் பெண்கள் மருத்துவரின் கருத்துப்படி, உரிய உணவுகளைத் தேர்வு செய்து, தேவையான அளவு உண்ண வேண்டும். கீரை, காய்கறி, பழம் போன்றவற்றைக் கட்டாயம் உண்ண வேண்டும். இரும்புச் சத்தும், புரதச் சத்தும் உள்ள உணவுகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்பை முடிந்த அளவிற்குத் தவிர்க்க வேண்டும். தனக்கு மட்டுமன்று தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சேர்த்து உண்ண வேண்டும்.
மருத்துவரிடம் எதையும் மறைக்கக் கூடாது
மனித வாழ்வில் மறைக்கக் கூடியவை கட்டாயம் இருக்கும். எல்லாவற்றையும் சொல்ல முடியாது. ஆனால், உடல் சார்ந்த குறைபாடுகள், பாதிப்புகள், நோய்கள் வரும்போது அவை பற்றி எந்த ஒளிவும் மறைவும் இன்றிக் கூட்டிக் குறைக்காமல், உண்மையாக, சரியாக, தெளிவாக மருத்துவரிடம் வெட்கமின்றிச் சொல்ல வேண்டும். தவறினால் அது நம் உயிருக்கே கேடாக முடியும். மருத்துவர்கள் நாம் பிறருக்குத் தெரியக்கூடாது என்று சொல்லக் கூடியவற்றைக் கட்டாயம் யாரிடமும் சொல்ல மாட்டார்கள். எனவே, மருத்துவரிடம் கட்டாயம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். இதைத்தான் நம் முன்னோர், வைத்தியரிடமும், வக்கீலிடமும் எதையும் மறைக்கக் கூடாது என்றனர்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாது
இன்றைக்கு உலகெங்கும் சர்க்கரை நோய் மிகுந்து காணப்படுவதற்குக் காரணம் உடலுழைப்பு இன்மையே. வாகனங்கள் வந்தபின் நடப்பது நின்றது. இயந்திரங்கள் வந்தபின் உழைப்பது நின்றது. ரிமோட் வந்தபின் உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்து செல்வதும் நின்றது. இவற்றால் உண்ணும் உணவிலுள்ள கொழுப்பும், சர்க்கரையும் சக்தியாக வெளிப்படாமல் உடலில் சேர, சர்க்கரை நோயும், இருதய நோயும் 30 வயதிலே வந்து விடுகிறது. எனவே, மனித இனம் நலத்தோடு வாழ வேண்டுமானால், உடலுழைப்பு கட்டாயம் வேண்டும். ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்கின்றவர்கள், தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை 5 நிமிடம் எழுந்து நடமாடி விட்டு மீண்டும் உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். மூலநோய், முதுகுவலி வராமல் தடுக்க இது உதவும்.
ஒரே வேலையைத் தொடர்ந்து செய்யக்கூடாது
படிப்பதாக இருந்தாலும், எழுதுவதாக இருந்தாலும், தொலைக்காட்சியைப் பார்ப்பதாக இருந்தாலும், விளையாடுவதாயினும் ஒன்றையே நீண்ட நேரம் தொடர்ந்து செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் மூளையும், உடலும் சோர்வடையும், சலிப்படையும்.
எனவே, எந்த வேலையைச் செய்தாலும் அது சலிக்கும்போது, வேறு வேலையை மாற்றிச் செய்ய வேண்டும். மாற்று வேலை செய்வதே உடலுக்கும், மூளைக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்; சலிப்பைத் தடுக்கும். ஓய்வு என்பதுகூட சும்மா இருப்பது அல்ல. மாற்று வேலை செய்வதே!
மூளைக்குத் தொடர்ந்து வேலை இருந்தால் இடையிடையே உடலுக்கு வேலை தர வேண்டும். கண்ணுக்குத் தொடர்ந்து வேலை தந்தால் காதுக்கு வேலையை மாற்றித் தர வேண்டும். இப்படி ஒவ்வோர் உறுப்புக்கும் மாற்று வேலை தர வேண்டும்.
ஈரத்தோடு தலைமுடியை வாரக்கூடாது
தலை நனைத்துக் குளித்த பின் சரியாகத் துவட்டாமல் தலைவாரக் கூடாது. ஈரம் முடியின் வலிமையை, வளத்தைச் சிதைக்கும். தலைமுடியை நன்கு உலர்த்தி, அதன்பின் தேவையான அளவு எண்ணெய் தடவ வேண்டும். எண்ணெய் அதிகம் தடவினால் அழுக்குச் சேர்ந்து சிக்குப் பிடிக்கும்.
மயிர்க்காலில் நன்கு எண்ணெய் இறங்கும் அளவிற்கு எண்ணெயைத் தேய்த்துப் பின் தலைகுளித்து நன்றாகத் துவட்டி முடியை உலர்த்தி தலைவாரினால் முடியும் நன்றாக வளரும், தலைவாரிக் கொள்ளவும் எளிமையாக இருக்கும். அழுக்கு அதிகம் சேராது. பெண்களுக்கு முடி அதிகம் இருப்பதால், அவர்கள் ஈரம் இல்லாமல் முடியை உலர்த்துவது கட்டாயம். பெண்கள் ஆண்களைப் போன்று முடிவெட்டிக் கொள்வது நல்லது. கிரண்பேடி அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.