இரு கண் பார்வையும் இல்லாத பெண் அய்.எப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இந்திய வெளிவுறவுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்ற பணி நியமன ஆணையும் கிடைத்துள்ளது. எல்லா உறுப்புகளும் சரியாக இருந்து, குடும்பத்தின் முழு ஒத்துழைப்பு, நட்பு வட்டங்களின் உதவி என்று பலவும் அமையப் பெற்று, தினம் பத்து மணி நேரம் கருத்தூன்றி கடினப்பட்டுப் படித்தால் கூட,
வெற்றி வாய்ப்பு மிக அரிதான இந்தியக் குடியுரிமைப் பணித்தேர்வில், இரு கண்களும் அறவே தெரியாதவர், அதுவும் ஒரு பெண், எளிய குடும்பத்துப் பெண் தேர்ச்சி பெறுவது என்பது சாதனையிலும் சாதனை! பார்வையற்றோர் இத்தேர்வில் இதுவரை யாரும் வெற்றி பெற்றதில்லை என்ற நிலையில் இவரது சாதனை சரித்திரம் படைப்பதாகும்!
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த இரயில்வே ஊழியர் என்.எல்.சார்லஸ்_மேரி இவர்களின் மகள் பெனோ ஜெஃபைன் என்பவரே இச்சாதனையை நிகழ்த்தியவர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார்வை அற்றவருக்கான லிட்டில் பிளவர் பள்ளியில் பிரெய்லி முறையில் பயின்றார். அதன்பின் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதுகலை ஆங்கில இலக்கியம் லயோலா கல்லூரியில் படித்தார். அதன்பின் திருவள்ளூரில் ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து ஆங்கிலத்தில் முனைவர் பட்டத்திற்கும் படித்து வந்தார்.
2013இல் நடந்த யு.பி.எஸ்.ஸி (UPSC) தேர்வில், இவர் பிரெய்லி முறையில் தேர்வு எழுதி, 2014 ஜூன் 12இல் அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவில் இந்தியா அளவில் 343ஆம் இடத்தில் தேர்ச்சி பெற்றார். இவருக்கு வெளியுறவுத் துறையில் உதவிச் செயலர் தகுதியில் அய்.எப்.எஸ். அதிகாரியாகப் பணியாற்ற வெள்ளிக்கிழமை (12.06.2015) அன்று ஆணை கிடைத்தது.
இவர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியவை:
ஐ.எஃப்.எஸ். தேர்வில் இதுவரை பார்வையற்றோர் யாரும் வெற்றி பெற்றதில்லை என்பதால் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் எனத் தீர்மானித்தேன். அதில் இரண்டாவது முயற்சியிலேயே வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற தேர்வுகளுக்கு தினமும் 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை படிக்க வேண்டும் என்று சிலர் கூறுவதுண்டு.
தினமும் 5 மணி நேரம்…
என்னைப் பொருத்தவரை எத்தனை மணி நேரம் படிக்கிறோம் என்பதைவிட படித்த தகவல்களை எந்தளவுக்கு நினைவில் வைத்துக் கொள்கிறோம் என்பதே முக்கியம். எனவே, ஒரே நாளில் 10 புத்தகங்களைப் படிப்பதை விட, ஒரு புத்தகத்தை 10 முறை படிப்பது சிறந்தது. அதாவது திரும்பத் திரும்ப படிக்கும்போது அதில் உள்ள விஷயங்கள் மனதில் நன்கு பதியும்.
இந்தத் தேர்வுக்கு படிப்பவர்கள் தினமும் 5 மணி நேரம் திட்டமிட்டு சிறந்த புத்தகங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். பழைய வினாத்தாள்களையும் தவறாமல் படிப்பது அவசியம். இதை நான் தொடர்ந்து கடைப்பிடித்ததால் வெற்றி வசமானது. நான் எந்தப் புத்தகத்தை விரும்புகிறேனோ அதை எனது தாய் மேரி, எனக்கு பலமுறை படித்துக் காட்டுவார். என்னைச் சுற்றி இருந்தவர்கள் என்னை ஒரு மாற்றுத் திறனாளியாகவே நினைக்கவில்லை. என் வெற்றிக்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
கணினியில் ஜாஸ் (Jaws) என்ற மென்பொருளைப் பயன்படுத்தி நன்றாக தட்டச்சு செய்ய பயிற்சி மேற்கொண்டது குடிமைப்பணித் தேர்வை எழுத மிகவும் உதவியாக இருந்தது.
அகில இந்திய வானொலி, தமிழ், ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் அன்றாடச் செய்திகளை தொடர்ந்து கேட்டது, பொது அறிவு தொடர்பான விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவியது. போட்டித் தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகள் வெற்றி பெற, பிறரைக் காட்டிலும் அதிகம் உழைக்க வேண்டும். பிறரிடம் எந்தவிதமான அனுதாபத்தையும் மாற்றுத் திறனாளிகள் எதிர்பார்க்காமல் வாழ்வில் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் என அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.