நிலவு தன்னைத்தானே சுற்றிக் கொள்வதில்லையாமே? (தவறான அறிவியல் தகவலுக்கு மறுப்பு)

உங்களுக்குத் தெரியுமா? செப்டம்பர் 01-15

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

பார்க்க முடியாத மறுபக்கம்

உங்களுக்குத் தெரியுமா? என்பது அறிவியல்பற்றிய வினா_விடைகளின் தொகுப்பு நூல். அறிவியல் வெளியீடு என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் ஆசிரியர்கள்: வள்ளிதாசன்_-இரா.நடராசன். தொகுப்பாசிரியர்கள்: சு.சீனிவாசன், எஸ்.ஜனார்த்தனன், இரா.கேசவமூர்த்தி. இந்நூலில் வெளியாகியுள்ள ஓர் அய்ய வினா: நிலாவின் மறுபக்கத்தைக் காணமுடியுமா? இதற்கான விடை இந்நூலில் இவ்வாறு வெளிவந்துள்ளது.

நிலவானது தன்னைத்தானே சுற்றுவதில்லை. எப்போதுமே பூமிக்குத் தன் ஒரு பக்கத்தையே காட்டுகிறது. -_ (நூல்: பக். 50)

சரியா? தப்பா?

இவ்விடையின் இரண்டாம் பகுதி சரியானதே! முதற்பகுதி சரியா? தப்பா? இது எமது வினா! வானியல் வழிநின்று ஆய்வோம்; உண்மை காண்போம்!

அன்று வந்ததும் இதே நிலா! இன்று வந்ததும் அதே நிலா!!

ஆய்வதற்கு முன் சுவையில் தோய்வதற்காக நிலவைப்பற்றி நம் தமிழ்ப் பெருங்குடி மக்கள் இயற்றிய இலக்கிய நயமும் அழகும் நிரம்பிய சில பாடலடிகளை அறிவோம். புறநானூற்றில் ஒரு பாடல். பாரி மகளிர் அங்கவை _ சங்கவை பாடியது.

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உளன் எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
எந்தையும் இலன் எம் குன்றும் பிறர் கொள…
அந்த மாதம், அந்த நிலாக்காயும் நேரம் எங்கள்
தந்தை பாரி எங்களுடன் இருந்தார்; எமது பரங்கிமலைக் குன்றையும் பகைவர்
கைக் கொள்ளவில்லை.

ஆனால், இந்த மாதம் வெண்ணிலா குளிர்ச்சி
கொட்டும் இந்த வேளையில் எங்கள்
தந்தை உயிருடன் இல்லை.
எம் குன்றையும் பிறர் கைக்கொண்டுவிட்டனரே!

_ என்பது மேற்காணும் பாடலடிகளின் பொருள் அவலச்சுவை ததும்பும் அற்புதப் பாடல்!

வான்நிலவே! வா, வா, வா!

இன்னொரு பாடல் நாம் வாழும் தற்காலத்துத் திரைப்படப் பாடலடிகள். இவற்றையும் தெரிந்துகொள்வதில் என்ன இழப்பு நமக்கு? கதாநாயகக் காதலன் பின்வருமாறு பாடுகிறான்;

வெண்ணிலவே, வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா?
விளையாட ஜோடி தேவை! _
இந்தப் பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
அதிகாலை அனுப்பி வைப்பேன்!

விடியும்வரை காத்திரு:

விண்ணைத் தாண்டி நிலா இவனிடம் வரவேண்டுமாம்! மண்ணைத் தாண்டி இவன் மட்டும் அங்கே போகமாட்டானாம்! இவனுக்கு ஓடி விளையாட ஜோடியாக நிலா வரவேண்டுமாம்! பொழுது விடிவதற்குமுன் பூமியில் எவரும் பார்ப்பதற்குமுன் அவன் நிலவை விண்ணுக்கு அனுப்பி வைப்பானாம்! என்ன ஆசை பாருங்கள்!

அந்த நாள், எந்த நாள்?

கற்பனை உலகிலேயே தன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் நம் தமிழன், என்றைக்கு கற்பனையிலிருந்து விடுபட்டு அறிவியல் மனப்பான்மை (Scientific attitude) பெறப் போகிறானோ?

விண்ணிலே வெண்ணிலா!

இப்பொழுது, நிலவைப்பற்றிய வானியல் செய்திகள் சிலவற்றைச் சுருக்கமாகக் காண்போம். புவிக்கோளின் துணைக்கோள் (Satelite) நிலவு (சந்திரன்) புவியிலிருந்து ஏறத்தாழ 3 இலட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ளது. மனிதன், பிற கோள்களில் சென்று ஆராயப்  பயணத் திட்டங்கள் (Plans on space travel) வகுத்தபோது, அதனை நிறைவேற்றுதற்குரிய திட்டமாக அமைந்தது நிலவுப் பயணம்தான்!

வெற்றிக்கொடி கட்டு

அமெரிக்க விண்வெளிப் பயணிகள் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong), எல்வின் ஆல்டிரின் (Elwin Aldrin) என்பவர்கள் நிலாப் பயணம் மேற்கொண்டனர். ஆம்ஸ்ட்ராங் 1969இல் முதலில் நிலா மண்ணில் காலடி பதித்தார். அடுத்து ஆல்டிரின் வெற்றிச் சின்னமாக அமெரிக்கக் கொடியினை நிலவில் நாட்டினார். நிலா மண்ணைத் திரட்டிப் புவிக்குக் கொண்டு வந்தனர். இதனைத்தான், கற்பனையாக திரைப்படப் பாடல்:
அந்த நிலாவைத்தான் நான்
கையிலே புடிச்சேன்! _ எனப் பாடப்பட்டதோ?

மூச்சுவிட முடியாது!

நிலவில் உயிர் வாழ முடியுமா? முடியாதய்யா, முடியாது! ஏன்? அங்கு மூச்சு விடுவதற்குரிய காற்று இல்லை! காற்று மண்டலமும் இல்லை!

நிலவுப் பயணத்தை நிறுத்துவோம்!

இனி, நிலவு சுற்றுவதுபற்றிய செய்திக்கு வருவோம். நிலவு, புவியை 27 நாள்கள்; 7 மணிகள், 43 மணித்துளிகள், 11 நொடிகள் என்கிற கால அளவுக்கு ஒரு தடவை சுற்றிவருகிறது. இதே கால அளவில்
தன் அச்சில் தன்னையே ஒருமுறை சுழன்று கொண்டு விடுகிறது.

உங்களுக்குத் தெரியுமா? _ நூலில் கூறியுள்ளவாறு நிலவானது, தன்னைத் தானே சுற்றிக் கொள்வதில்லையா? இது மெய்யா.

அருமையான ஆதாரங்கள்!

நிலவு, தன்னையும் புவியையும் ஒரே கால அளவில் சுழன்றும் (Rotate or spin) சுற்றியும் (Revolve) வருகிறது என்கிற வான் அறிவியல் ஆய்வுச் செய்தியை ஏற்கெனவே சொல்லிவிட்டோம். இனி, இந்த உண்மையை நிலைநாட்டும் சில அறிவியல் சான்றுகளைச் சில அறிவியல் நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுவோம்.

ஒரே ஒரு தடவை

திங்கள் (நிலவு) உலகை (புவியை)ச் சுற்றித் திரும்பவும் அதே இடத்தை அடைவதற்கு ஆகும் காலஅளவில் அது,

தன்னைத்தானே தன் அச்சில் ஒரு தடவை சுற்றிக் கொள்கிறது _ (நூல்: கதிரவனின் கைதிகள்(Captives of the sun), ஆசிரியர்: ஜேம்ஸ். எஸ்.பிக்கரிங், வெளியீடு: ஹிக்கின்பாதம்ஸ் (Pvt. Ltd.), சென்னை_2. _ பக்கம் 91.

(ஆங்கில நூல்: ‘Captives of the Sun’ by James S.Pickering – Published by. Higginbathes Pvt. Ltd., Chennai – 2.)

தமிழாக்கம்: ஆர்.போற்றிவேலுப்பிள்ளை

சரிநிகர் சமானம்

இன்னுமொரு சான்றினைக் காண்போமா?

பூமி, சந்திரனைவிடப் பெரிதாகையால் சந்திரன் தன் அச்சில் சுழல 27லு நாள்கள் பிடிக்கின்றன. அதாவது, சந்திரன் பூமியைச் சுற்றிவரும் காலமும், தன்னைத்தானே சுற்றிச் செல்லும் காலமும் சமமாகிவிட்டன. – (நூல்: வாழ்வளிக்கும் சூரியன், பக்கம்: 54, ஆசிரியர்: டாக்டர். பேராசிரியர் ம.அ.தங்கராஜ் எம்.ஏ., பிஎச்.டி., இயற்பியல் துறை (Physics Department) கிறித்தவக் கல்லூரி, சென்னை. வெளியீடு: தமிழ்ப் புத்தகாலயம், 393, பைகிராப்ட்ஸ் ரோடு, சென்னை_4)

எப்போதும் இப்படியே!

மற்றுமோர் மறுக்க இயலா ஆதாரத்தைப் பார்ப்போம். சந்திரன் பூமியைச் சுற்றிவருகிறது. ஒருமுறை சுற்றிவர 27லு நாள்கள் ஆகின்றன.

தன் அச்சில் சுழல்வதற்கும் 27லு நாள்கள் ஆகின்றன.

ஆகையால், சந்திரனின் ஒரு பக்கம் மட்டும் எப்போதும் பூமியை நோக்கியே இருக்கிறது.

_ (நூல்: வானத்தைப் பார்ப்போம் (‘Let us look at the sky’) ஆசிரியர்கள்: பெ.நா.அப்புஸ்வாமி, ஜே.பி.மாணிக்கம். வெளியீடு: அவ்வை நூலகம், சென்னை_1)
நிமிர்ந்து நில்

இன்னுமொரு சான்று இதோ:

சூரியன், கோள்கள், துணைக்கோள்கள் (நிலவுகள்-Satelites) ஆகிய சூரியக் குடும்பம் (Solar System) முழுவதும் அவற்றுள் ஒவ்வொன்றும் தன்தன் அச்சிலே கிட்டத்தட்ட செங்குத்தாக நிமிர்ந்து நின்று சுழன்று வருகிறது.
-_ (நூல்: அறிவியல் வரலாறு, ஆசிரியர்: ஆர்.எஸ்.கிரிகர், பக்கம்: 354.)

வெண்ணிலவின் வேறொரு பக்கம்

ஒரே ஒரு சான்றினை மட்டும் எடுத்துக்காட்டி முடித்துக் கொள்கிறோம்.
சந்திரன் பூமியை 27 நாள்களுக்கு ஒருமுறை சுற்றிவருகிறது.
தனக்குத் தானேயும் சுற்றி வருகிறது.

இரண்டும் அட்ஜெஸ்ட் ஆகி எப்போதும் நாம் சந்திரனின் ஒரு மூஞ்சியைத் தான் பார்க்கிறோம்.

–  (நூல்: ஏன்? எதற்கு? எப்படி?, ஆசிரியர்: எழுத்தாளர் சுஜாதா, பக்கம்: 83, வெளியீடு: ஆனந்த விகடன் நிறுவனம்.)

ஆதாரங்கள் போதாதா?

பார்த்தீர்களா? இல்லை, படித்தீர்களா? இன்னும் இதுபற்றிய வானியல் நூல்களின் சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. எல்லாவற்றையும் எடுத்துக் காட்டலாம்; காட்ட முடியும்.

வசதிக்காக நாலைந்து நூல்களை ஆதாரங்களாகக் காட்டியுள்ளோம்.

வான் _ அறிவியல் உண்மை இவ்வண்ணம் இருக்க, உங்களுக்குத் தெரியுமா? நூலாசிரியர்கள் எந்த அறிவியல் அடிப்படையில் நிலவு தன்னைத் தானே சுற்றுவதில்லை என்று கூறுகிறார்கள்? தெரியவில்லையே! புரியவில்லையே!!

நூலாசிரியர்கள் நிலவு தன்னைத்தானே சுற்றிக் கொள்வதில்லை _ என்ற கருத்தை மாற்றிக் கொள்வது நல்லது! மாற்றிக் கொள்ள வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *