கடவுள் படைப்புத் தொழிலை கைவிட்டு விட்டாரா?
– மகிழ்நன்
உலகில் வேறெந்த உயிரினங்களும் மதங்களின் பின் திரிவதில்லை; கோவில் கட்டி தன் உழைப்பை, நேரத்தை வீணடிப்பதில்லை. அறிவியல் வளரா காலகட்டத்தில் மனிதனுடைய பகுத்தறிவு ஏற்படுத்திய சந்தேகங்கள் அவனை பல்வேறு பொருத்தமற்ற காரணங்களோடு திருப்தியடையச் செய்தது. எல்லா குழந்தைகளையும் போல என் சிறுவயதில் வானத்திலிருந்து எப்படி மழை பெய்கிறது என்ற கேள்வி பல முறை வந்திருக்கிறது. தந்தையும், தாயும் அதிகம் படித்தவர்கள் இல்லை, அவர்களிடம் இதுபோன்ற கேள்விகளை கேட்டால், போய் படிக்கிற வேலையை பார். என்று துரத்தி விடுவார்கள். சரி, மழை எப்படி வருகிறது என்ற கேள்விக்கு என்னதான் பதில்? பள்ளிக்கு 4 வயதில்தான் அனுப்புவார்கள். அப்படியே பள்ளிக்கு சென்றிருந்தாலும் அவர்கள் குழந்தைகளுக்கு புரியும்படி சொல்லித்தர கொஞ்சம் காலமெடுக்கும். சந்தேகம் கொண்ட மூளை சும்மாயிருக்குமா? இல்லை, 4 வயது ஆகும் வரை மழைதான் காத்திருக்குமா? ஒவ்வொரு தென்மேற்கு பருவகாற்றையொட்டி மழை வருமே… நானே சிந்தித்தேன்….
மழை எப்படி வருகிறது என்று கண்டுபிடித்தேன். கண்டுபிடிப்பை கேட்டு சிரித்தாலும் சிரித்து விடுவீர்கள். சிறுவயதிலிருந்தே கடவுள் வானத்திலிருக்கிறாரென்று கற்பிக்கப்பட்டி ருந்தது. மழையும் வானத்திலிருந்து வருகிறது, ஒருவேளை கடவுள் சிறுநீர் கழிப்பாராயிருக்கு மென்றுதான் அந்த முதிர்ச்சியடையாத, அறிவியல் அறிவில்லா மூளைக்கு சிந்தித்து முடிவெடுக்க முடிந்தது. அந்த லட்சணத்தில்தான் மத நூல்களில் பல்வேறு அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்ட கருத்துகளுக்கு விளக்கங்கள் இருப்பதாக மத நம்பிக்கையாளர்கள் கூறித் திரிகின்றனர். கடவுள் உலகத்தைப் படைத்தார், அதைப் படைத்தார், இதைப் படைத்தாரென்று சொல்கிறார்கள். மிகப்பெரிய அறிவாளியாகத் தங்களை நினைத்துக் கொண்டு, பரிணாம வளர்ச்சி தத்துவத்தின் குரங்கிலிருந்து- மனிதன் என்ற சொற்களை மிகத்தவறாக உள்வாங்கி கொண்டு, நேரடியாக குரங்கிற்கு பிறந்த பிள்ளைதான் மனிதன் என்று நாம் சொல்வதாக ஊகித்து கிச்சு, கிச்சு மூட்டுகிறார்கள். டார்வின் தன் தத்துவத்தை கூறும் பொழுது இருந்ததைவிட இன்று அறிவு வளர்ந்திருக்கிறது. அவர் சொன்னதில் சில விடுபட்டிருக்கலாம், அவருக்கே மிகையான அல்லது குறைவான புரிதல் இருந்திருக்கலாம். வளரும் அறிவியல் டார்வினுக்கு அருகில் நின்று கொண்டு டார்வினை ஒரு மகான் போல சித்தரித்து, அவரை மிஞ்சி யாரும் சொல்லிவிட முடியாது என்று சொல்லாது. அப்படியான பிடிவாதம் மதவாதிகளுக்கு மட்டுமே உரியது.
உலகில் இன்றுவாழும் மனிதர் யாரையும் கடவுள் படைக்கவில்லை என்பதற்கு ஒரு சான்று வேண்டுமானால் உலகம் முழுவதும் விற்பனையாகும் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் போன்றவற்றின் எண்ணிக்கையை சரிபார்த்தாலே புரிந்து கொள்ளலாம். கடவுள் பிள்ளை தருவதாக யாருமே நம்புவதில்லை. ஆனாலும், கடவுள் உன்னைப் படைக்கவில்லை, உன் தாய்-தந்தையர்தான் உன் படைப்பிற்கான முதல் காரணி என்றால்…
அதுக்கு முன்னாடி… அதுக்கு முன்னாடி.. அதுக்கு முன்னாடி… என்று எங்கோ ஓடிவிடுவார்கள். நாம்தான் அறிவியலை நம்புபவர்கள் ஆயிற்றே! அறிவியல் புதிர்களை உடைக்க, உடைக்க நாம் நம் அறிவை வளர்த்துக் கொள்கிறோம். ஆனால், மதவாதிகள் அப்படியானவர்களா? உடனே எல்லாவற்றுக்கும் பதில் மதநூலில் இருக்கிறது என்பார்கள். (தற்போது நுழைவு தேர்வெழுதப் போகும் மதநம்பிக்கையுள்ள மாணவர்கள் யாரும் மதநூல்களை படித்துவிட்டு தேர்வெழுதப்போவதில்லை.) கடந்த இதழில் படைப்பு குறித்து பல்வேறு முரணான கருத்துகளை உடைய பார்ப்பன இந்து மதக் கருத்துகளை ஆய்ந்தோம். இஸ்லாத்தில் படைப்பு குறித்து என்னதான் சொல்கிறார்கள்? பரிணாம வளர்ச்சியை ஏற்றுக் கொள்கிறார்களா? கொஞ்சம் உள்ளே நுழைந்துவிட்டு வருவோம்.
இஸ்லாம் உருவ வழிபாட்டை மறுக்கிறது, ஆனால், இந்துக்கள் களிமண்ணைக் கொண்டு ஒரு பிள்ளையாரைச் செய்து, வரப்போகும் மாதங்களில் பத்துநாள் வைத்து விளையாடி கடலில் தூக்கி எறிந்துவிடுவார்கள். அதையொத்த ஒரு காரியத்தை அல்லா குரானில் செய்திருக்கிறார். ஆம், மண்ணிலிருந்து மனிதனை படைத்து, பின்னர் சிறிது காலத்தில் தன் தோட்டத்திலிருந்து துரத்தி விட்டிருக்கிறார். (என்னை வைத்து வளர்க்க முடியவில்லையானால், ஏன் என்னை பெற்றுக் கொள்கிறாய் என்று ஒரு ஆதரவற்ற குழந்தை தன் கண்ணறியா பெற்றோர்களை நோக்கி வைக்கும் கேள்வியை இந்நேரம் நீங்கள் நினைத்துக் கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல!)
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் குன் (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார். 3:59, குரான்
ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். 15:26, குரான்
(நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்: ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன் என்றும், – 15:28, குரான்
அதற்கு இப்லீஸ், ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீர் படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை! என்று கூறினான். – 5:33.குரான்
அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; 6:2. குரான் இப்படி குரானின் பல வரிகளில் கூறியபடி மண்ணிலிருந்து படைத்த கடவுள், நீரிலிருந்தும் மனிதனை படைத்தார்…….(இது என்ன செத்து…செத்து விளையாடுவது போல், படைத்து… படைத்து விளையாடுவதா?)
”அற்ப நீரிலிருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட மூலத்திலிருந்து மனிதனின் சந்ததிகளை உண்டாக்கினான்.” (அல் குர்ஆன் 32: 8)
விளையாட்டு இத்தோடு நிற்காமல் விந்திலிருந்தும் மனிதனை படைத்தாராம்….எப்படி கீழே பாருங்க…
அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான். (16:4)
அப்புறம் ஆத்மாவிலிருந்து படைத்தாராம்
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; 4:1. குரான் அப்புறம் விந்திலிருந்தும் இல்லாமல், ஆத்மாவிலிருந்து இல்லாமல், மண்ணிலிருந்தும் இல்லாமல், ஈசா நபியை (ஏசுவை) படைத்தாராம். (என்னப்பா விளையாடுறீங்களா? என்று யாரும் சினம் கொண்டு விடாதீர்கள்… கொஞ்சம் அழுத்திக் கேட்டா, தளபதி படத்தில் மம்மூட்டி கூறுவது… இனி எல்லாம் அப்படித்தான் என்று சொன்னாலும் சொல்வார்கள், சகித்துக் கொண்டு தொடருங்கள்!) (அச்சமயம் மர்யம்) கூறினார்: என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்? (அதற்கு) அவன் கூறினான்: அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ஆகுக எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.
3:47 குரான் படைப்பு தொடர்பில் இத்தனை குழப்பங்கள், இதை வைத்துக் கொண்டுதான் இவர்கள் நம்மிடம் கேட்கிறார்கள்… குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கிறீர்களே… இத்தனை நாட்களில்… ஒரு குரங்காவது மனிதனாச்சா…? என்று! நாங்களும் கேட்கிறோம்…இத்தனை ஆண்டுகளாயிற்றே… இவ்வளவு மண் ஊரெல்லாம் பரவி கிடக்குதே… டன், டன்னா மணல் கொள்ளை நடக்குதே… எந்த மண்ணிலிருந்தாவது மனிதன் உருவானானா? ஏன் கடவுள் படைப்பு தொழிலை கைவிட்டுவிட்டாரா?