தடுமாறிய மனம்

ஜூலை 16-31

முகிலன் கல்லூரிக்குப் புறப்பட்டான்.

முகில்… சாப்பாட்டை டிபன்பாக்ஸில் வைச்சிருக்கேன் எடுத்துட்டுப் போ என்றாள் அவனுடைய அம்மா.

போம்மா நான் கேன்டீனில் சாப்பிட்டுகிறேன்.

உனக்கெல்லாம் என்ன சொல்றதுன்னே தெரியல!… எல்லாம் உங்கப்பன் கொடுக்கிற செல்லம் என்றாள். அதை எதையும் காதில் வாங்காமல் முகிலன் வீட்டை விட்டு வெளியேறினான்.

முகிலனின் அம்மா, அப்பா இருவரும் கூலிவேலைக்கு சென்றுதான் அவனைப் படிக்க வைக்கிறார்கள். ஒரே மகன் என்பதால் கொஞ்சம் செல்லம் அதிகம். முகிலன் படிப்பில் அதிகம் கவனம் இல்லாவிட்டாலும் ஏதோ தேர்வில் வெற்றி பெற்றுவந்தன்.

கல்லூரியில் அவனுக்கு நண்பர்கள் அதிகம். கலையில் ஆர்வம் கொண்ட அவன் நாடகம், பாட்டு என்று எல்லாவித போட்டிகளிலும் கலந்து கொள்வான். மாலையில் நண்பர்களுடன் உரையாடிவிட்டு வீட்டிற்கு வருவதற்கே மணி எட்டாகிவிடும். என்ன சொன்னாலும் வீட்டிற்கு நேரத்திலேயே வரமாட்டான்.

இப்படிப்பட்ட முகிலன் திடீரென்று தன்னுடைய நடை, உடை, செயல் எல்லாவற்றிலும் மாற்றம் கொண்டான். அதற்கு காரணம் அவர்கள் கல்லூரிக்கு ஒருவர் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க பல்வேறு பயிற்சியைக் கொடுப்பதாகக் கூறி யோகா, தியானம், ஆன்மா போன்ற கருத்துகளை கொண்ட சொற்பொழிவைக் கேட்டதினால்தான். அதில் மிக நாட்டம் கொண்டு அவர்கள் விற்ற புத்தகங்களைவிட ஆர்வத்துடன் படித்தான். அதிலும் ஆன்மா பற்றிய புத்தகங்களை அதிக ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தான். நேரம் காலம் பார்க்காமல் இரவுபகலாகப் படித்தான்.

அன்று வந்த அந்த ஆன்மீக சங்கத்தினரின் முகவரியை வாங்கி வைத்திருந்தான். அவர்களை அடிக்கடி சந்தித்தான். அவர்கள் பல்வேறு இடங்களில் நடத்தும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டான். இதற்கெல்லாம் பணம் செலுத்தவேண்டும் என்று பொய் சொல்லி வாங்கினான்.

விடியவிடிய படிப்பதைப் பார்த்த அவன் பெற்றோர் மகன் நன்றாக படிக்க ஆரம்பித்துவிட்டான் என்று நினைத்துக் கொண்டனர். வீட்டில் அவனுடைய பெற்றோரிடம் அதிகமாக பேசுவது கிடையாது. தன் வேலை உண்டு தான் உண்டுபோலத் தன் பெற்றோருக்குப் போக்குக் காட்டினான். கல்லூரிகளிலும் தன் நண்பர்களிடம் கல்லூரி மாணவர்களுக்கே உரிய உரையாடலை நிறுத்திக் கொண்டான். வகுப்பிலும் தனியாகவே அமர்ந்தான்.

எப்பொழுது பார்த்தாலும் ஆன்மா பற்றிய சிந்தனையே அவனிடம் ஓடிக்கொண்டிருந்தது. மேலும் அவர்கள் சொல்லிக் கொடுத்த அனைத்து பயிற்சிகளையும் செய்தான். அதாவது யோகா, தியானம் போன்றவை. இப்படியாக 2 மாதங்கள் கழிந்தன. அந்தரத்தில் பறக்கும் பயிற்சி என செய்து பெறவில்லை மனச்சோர்வே மிஞ்சியது.

அவனுடைய நண்பர்களிடம் பேசினால் இதைப்பற்றித்தான் பேசுவான். அவர்கள், போடா… இதெல்லாம் போய் நம்பிகிட்டு இருக்கிறாயா? என்று கிண்டலடிப்பார்கள்.

ஆன்மா பற்றி பலரும் எழுதியதைப் படித்தான். நம் உடலுக்குள் ஆன்மா ஒன்றிருக்கிறது. அது நாம் இறந்தவுடன் வேறு உடலுக்குள் சென்றுவிடும். இதே ஆன்மாவை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். கூடுவிட்டு கூடுபாயக்கூடியது என்றெல்லாம் படித்து அவற் றைப்பற்றி தன் அம்மாவிடம் சொல்லுவாள். அவன் அம்மா அவனையே குழப்பத்துடன் பார்த்தான்.

அவள், என்ன நீ ஏதோ ஏதோ பேசுகிறாய். படிக்கிற வேலையைப் பார் என்றாள்.

முகிலன், நான் என்ன சொன்னாலும் யாருமே கேட்க மாட்டேன்கிறாங்க! நீயும் கேட்கமாட்டேங்கிறே என்றான். பின் அவன் தன் அப்பாவிடம் இதைப்பற்றி மிகவும் ஆர்வத்துடன் கூறினான்.

முகிலனின் அப்பாவும், இதெல்லாம் விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம்தான் கேட்கும் என்று சொல்லவும் முகிலன் முகம் வாடியது.

திடீரென்று ஒரு நாள் தனக்கு இனிமேல் அசைவ உணவு வேண்டாம். சைவ உணவுதான் வேண்டுமென்றான். அன்றுமுதல் சைவ உணவுதான் உண்டு வந்தான். அவன் அம்மா விற்கு இவனுக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி ஆகிவிட் டான் என்று கவலைப்பட்டாள். தன் அப்பாவையும் சைவ உணவு உண்ணும்படி செய்தான்.

இப்படியாக இரண்டு மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் அவன் அம்மாவிடம், நான் இறந்துவிட்டால் எனக்கு உணவுபடைத்து சாமி கும்பிடும்போது எல்லாத்தையும் சட்டியில் செஞ்சு வை என்று கூறினான்.
அவன் அம்மா, ச்சீ போடா பைத்தியமே!  கண்டதையும் சொல்லிக்கொண்டிருக்காதே என்று கூறிச் சென்றாள். அப்படியே ஓரிரு மாதங்கள் கழித்தது.

ஒரு நாள் அவன் அம்மாவிடம், அம்மா இனிமேல் சட்டியில் சோறு செஞ்சு வை என்றான்.

இவனோட வரவர தொந்தரவா போயிருச்சு. ஆமா… ஏன் இந்த மாதிரியெல்லாம் வைக்க சொல்ற?

அதெல்லாம் ஒன்னும் இல்லை. அம்மா… உடம்புக்கு நல்லது அதுதான் சொன்னேன்.

அப்படின்னா… சரி செய்யறேன். இந்தா நீ சொன்ன மாதிரியே செஞ்சு வைச்சுருக்கேன்!

அன்று முதல் மண்சட்டியிலேதான் சோறு செய்து வைத்தாள் அவன் அம்மா. இப்படியாக ஒரு பதினைந்து நாள்கள் கழிந்தது. ஒரு நாள் காலைவேளையில் முகிலன் ஏதோ யோசித்தபடி உட்கார்ந்திருந்தான்.

எந்த ஏரோபிளேன புடிக்கப்போற! இப்படி காலங்காத்தாலே உட்காந்திருக்க… காலேசுக்கு போகலையா? என்றாள் முகிலனின் அம்மா.

நீ பாட்டுக்கு உன் வேலைக்குக் கிளம்பு! நான் சாப்பிட்டுட்டு காலேஜீக்கு புறப்படுறேன் என்று கூறிக்கொண்டே தன்னுடைய உடையை நீவி நீவி விட்டுக் கொண்டு, நன்றாக இருக்கிறதா!… என்று கண்ணாடியின் முன் தன்னைப் பார்த்துக் கொண்டான்.

இதற்குள் அவள் அம்மா, அப்பா இருவரும் வேலைக்கு புறப்பட்டனர். போயிட்டு வாறோம்!.
சரி அம்மா என்றான் முகிலன்.

அவர்கள் போனதும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கதவைச் சாத்திக் கொண்டான். மண் சட்டியில் உள்ள உணவை அப்படியே சாமி போட்டோவின் முன் வைத்து வணங்கிவிட்டு, ஆன்மா கூடு விட்டு கூடு பாயும் தன்மையை சோதித்து பார்க்க வேண்டும் என்று எண்ணியமாத்திரத்தில் அதை இன்றே செய்து பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தான். கழுத்தில் நாணிட்டான். கழுத்தில் கயிரை மாட்டும்போது தான் வேறு ஒரு உடலுக்குள் சென்று இங்குவந்து எல்லாரையும் மிரட்டிவிட்டு மீண்டும் தான் முந்தைய உடலுக்குள் புகுந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைக்க வேண்டும் என்று சந்தோசத்துடன் இறக்கத் தயாரானான். ஆனால் நடந்தது என்ன?

மாலையில் முகிலனின் அப்பா அம்மா வந்ததும், கதவு உள்பக்கம் தாழிட்டுருப்பதை அறிந்தனர். மனதிற்குள் ஒரு திகில் உண்டானது. ஏன்? என்னவென்று ஏதும் அறியாமல் தவித்தனர். கதவை உடைத்து திறந்துபோது மகனின் உயிரற்ற உடல் தொங்கிக் கொண்டிருந்தது.

குய்யோ! முய்யோவென்று அழுதனர். கல்லூரி மாணவர்கள் அனைவரும் வந்திருந்தனர். முகிலன் நன்றாகத்தானே இருந்தான். எப்பொழுது அந்த சாமியார் வந்தாரோ, அன்றிலிருந்தே அவன் பைத்தியமாகிவிட்டான் என்று பேசிக்கொண்டனர். அந்த சாமியார் இருப்பிடத்தை நோக்கி சென்றபோது அவர் அங்கிருந்து சென்றுவிட்டது தெரிந்தது.

மூடநம்பிக்கையில் மனம் தடுமாறியது. ஒரு உயிரும் விட்டு பிரிந்தது. தவறான போதனையில் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடும் இதுபோன்ற சாமியார்களை கல்லூரிகளுக்குள் வரவிடாமல் தடுப்பதே நாளைய இளைஞர் சமுதாயம் சிறப்பு பெரும் என்று அவன் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்கள் முடிவெடுத்தனர்.

 

– வி.மீனாட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *