இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கெடு பிடிகள் பல தரப்பு மக்களையும் பாதித்துவிட்டது. திருமணத்திற்கு நகை வாங்கிச் செல்ல முடியவில்லை; விருந்து வைக்க ஆடு, கோழி வாங்க முடியவில்லை; வியாபாரத்திற்குப் பணம் எடுத்துச் செல்ல முடிய வில்லை. சட்டத்தைத் தீட்டி அதைச் செயல்படுத்த அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுத்தால் அது என்னாகும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளே சான்றாகும். இந்த நிலை இப்படியே நீடித்தால்…. பின்வருவன நடந்தாலும் ஆச்சரியப்படாதீர்கள்!
1. காலையில் சூரியன் உதிக்கக்கூடாது. அதைப் படுதா போட்டு மூட ஒவ்வொரு வருவாய் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிடப்படும். உச்சி வெயிலும், மாலை சூரியனும் அனுமதிக்கப் படுகின்றன.
2. மாம்பழக் கடையோ, மரமோ, கனிகளோ இருக்கக் கூடாது.
3. மரம், செடி, கொடி உள்பட எதிலும் இலைகளே இருக்கக் கூடாது. மொட்டை இலைகளாக வேண்டுமானால் இருக்கலாம். மொட்டை இலைகளை வேண்டுமானால் ஆதரிக்கலாம்.
4. கைச்சின்னம் காங்கிரசுடையது என்பதால் கையுறை அணியாமல் யாரும் ஓட்டுப் போட வரக்கூடாது.
5. இரவில் மின் வெட்டு ஏற்பட்டாலும், மெழுகுவர்த்தி பயன்படுத்தக்கூடாது. அனைத்து மெழுகுவர்த்திகளும் பறிமுதல் செய்யப்படும்.
6. முரசு என்ற பெயர் கொண்டவர்கள் தங்கள் பெயர்களை மாற்றிக் கொள்ளவேண்டும். பத்திரிகைகள் வேறு பெயர்களை வைத்துக் கொள்ளவேண்டும்.
7. தலைவர்கள் படம், கொடி அச்சடிக்கப்பட்ட உடைகள், தொப்பி முதலியவை அணியக் கூடாது என்று அறிவித்திருப்பதைப் போல, உடுத்தியிருக்கும் ஆடைகளிலும் அரசியலை யாராவது நினைவுபடுத்தக்கூடும் என்பதால், பி.ஜெ.பி-யின் நிறமான காவி வேட்டி, முஸ்லிம் லீக்கின் நிறமான பச்சை, பா.ம.க., உள்ளிட்ட சில கட்சிகளில் இருக்கும் மஞ்சள், விடுதலைச் சிறுத்தைகளின் நீலம், திராவிட இயக்கங்களின் நிறமான சிகப்பு, கருப்பு உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து நிறங்களும், குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வெள்ளை உள்ளிட்ட எந்த நிறத்திலும் வேட்டியோ, சட்டையோ அணியக்கூடாது. மீறி அணிந்தால் உருவப்படும். கோவணமோ, உள்ளாடையோ இந்த நிறங்களில் அமைவது உசிதமல்ல. எனவே டிரான்ஸ்பரண்ட் வகை உடைகளை அணியுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.