இது நண்பர் ஒருவர் மூலமாகக் கேள்விப்பட்ட உண்மைச் செய்தி. ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது.
என் நண்பருக்கு வேண்டியவர் ஒரு முதியவர். அவர் மனைவி மற்றும் அவர்களின் ஒரே மகன் (சுமார் 25 வயது) ஆகிய மூவரும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வயோதிகத்தின் காரணமாக முதியவர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஒரு சிலர் சொல் கேட்டு அந்த முதியவரின் மகன் மாயவரத்தில் உள்ள ஒரு ஜாதகக்காரரைச் சந்தித்து தன் ஜாதகத்தைக் காட்டி தன் தகப்பனாரின் ஆயுளைப்பற்றி விசாரித்திருக்கிறார். அந்த ஜாதகத்தைப் பார்த்து நன்கு கணித்து அந்தப் பையனின் தகப்பனார் அதிகபட்சமாக 2 மாதம்தான் இருப்பார் என்றும், 2 மாதத்திற்குப் பின் பெரிய கண்டம் இருப்பதாகவும் எனவே அவர் இரண்டு மாதத்தில் இறந்துவிடுவார் என்றும் கூறினார். ஆனால் டாக்டர்களின் சிறந்த வைத்தியத்தாலும் மனைவி, மகன் பராமரிப்பாலும் பெரியவர் பூரண குணமடைந்து இன்றுவரை நலமாக உள்ளார்.
பெரியவரின் மகன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் அந்த ஜாதகக்காரரைப் பார்த்து, தன் தகப்பனார் நலமுடன் இருப்பதாகவும், ஜாதகத்தைக் கணித்துக் கூறியது தவறு என்றும் கூறியுள்ளார். அதற்கு ஜாதகக்காரர், தான் கணித்துச் சொன்னது உண்மை என்றும், ஜாதகம் பொய்க்காது என்றும் கூறியதுடன் அந்த 2 மாத காலத்தில் அந்தத் தெருவில் யாராவது பெரியவர் இறந்துவிட்டாரா என்று அந்த இளைஞரைக் கேட்டதற்கு அந்த இளைஞர் தன் வீட்டுப் பக்கத்து வீட்டில் ஒரு முதியவர் இறந்துவிட்டதாகச் சொன்னதாகவும், அதற்கு ஜாதகக்காரர், அப்படி என்றால் அவர்தான் உன் உண்மையான தந்தை என்று கூறி அந்த இளைஞரை அனுப்பிவிட்டார். பின் அந்த இளைஞன் தன் வீட்டில் வந்து விவரத்தைச் சொல்ல மூவரும் நிம்மதி இழந்து தவிப்பதாகவும், ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்ப்பதாகவும், நண்பர் சொன்னார். இந்த விஞ்ஞான காலத்திலும், படித்த, படிக்காத பாமரர்களும் அறிவைப் பயன்படுத்தாமல் ஜாதகத்தையும் ஜாதகக்காரர் சொல்வதையும் நம்பியதால் இதுபோல் அனேக குடும்பங்கள் நிம்மதியற்றுத் தவிக்கின்றன. எனவே, யாரும் ஜாதகத்தையோ ஜாதகக்காரர் கூறுவதையோ உண்மை என்று நம்பி வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்ளலாமா?
– ஆர்.டி.மூர்த்தி, திருச்சி