சிந்தனைத்துளி

ஏப்ரல் 16-30

அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு!
விசாலப் பார்வையில் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்!  உன்னைச் சங்கம மாக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு!

ஓடத்திலேறிய மாந்தரே \ பலி பீடத்திலே சாய்ந்தீரே!
பாடுபட்டீர்கள் பருக்கையில் லாதொரு
பட்டியில் மாடென வாழ்கின்றீர் \ மதக்
கேடர்கள் காலினில் வீழ்கின்றீர் \ ஒண்ட
வீடுமில்லாமலே தாழ்கின்றீர்

மெய்வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின்றார்கள்;
செய்வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின் றாய்நீ
பொய்வண்ணப் பூசணிக்காய்!    கறியுனைச் செய்துண்டேன்உன்
கைவண்ணம் அங்குக்கண்டேன்; கறிவண்ணம் இங்குக் கண்டேன்!

பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை \ இந்தப்
பிழைநீங்குவதே உயிருள்ளாரின் கடமை

மனிதரில் நீயுமோர் மனிதன்; மண்ணன்று!
இமைதிற; எழுந்து நன்றாய் எண்ணுவாய்
தோளை உயர்த்துச் சுடர்முகம் தூக்கு!
மீசையை முறுக்கி மேலே ஏற்று!
விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்!

எங்கும் பாரடா இப்புவி மக்களைப் பாரடா உனது மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!

ஜாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டையுலகிதனை ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்; பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம் பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப்
பேசுசுய மரியாதை உலகுஎனப்பேர் வைப்போம்!

கடவுள்கடவுள் என்றெதற்கும்
கதறுகின்ற மனிதர்காள்!
கடவுள்என்ற நாமதேயம்
கழறிடாத நாளிலும்
உடைமையாவும் பொதுமையாக
உலகுநன்று வாழ்ந்ததாம்; கடையர் செல்வர் என்றதொல்லை
கடவுள்பேர் இழைத்ததே!

 

– பாரதிதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *