தூங்காதே தமிழா தூங்காதே!

ஜனவரி 16-31 - 2014

– பேராசிரியர் தொ.பரமசிவன்

பார்ப்பனியம் எங்கே சார் இருக்கிறது? அதெல்லாம் செத்துப் போய் நெடுநாட்களாகிவிட்டன. பிராமணர்கள் நம்மோடு கலந்து விட்டார்கள் என்கிற குரலை இப்போதெல்லாம் பல இடங்களில் கேட்கமுடிகிறது. இந்தக் குரலுக்கு உரியவர்கள் நடுத்தர வர்க்கத்தினர்தான். அறிவுஜீவிகள் என்று தங்களை நம்பிக் கொண்டிருப்பவர்களும் இவர்கள்தான். இவர்கள் சொல்ல வருவது என்ன? பெரியாரியம் காலாவதி ஆகிவிட்டது என்பதுதான்.

ஆனால், தன்னுணர்ச்சியோடு பார்ப்பனியத்தை இவர்கள் கணித்துப் பார்க்கத் தவறிவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் இராணுவ ரகசியங்கள் பாதுகாக்கப்படும் இடத்திற்கெல்லாம் செல்லும் உரிமை படைத்தவர். ஆனால், குக்கிராமத்துப் பிள்ளையார் கோவிலில் அய்ந்துக்கு அய்ந்து அடி (25 ச.அடி) அளவுள்ள எல்லைக்குள் மட்டும் அவருக்கு நுழைவதற்கு அனுமதி கிடையாது. அந்த 25 சதுரஅடி நிலம் பிறப்பினால் ஒரு ஜாதிக்கு மட்டுமே தனி உரிமை உடையதாக இன்றளவும் பேணப்படுகிறது. பார்ப்பனியம் உயிரோடு இருக்கிறதா? இல்லையா?

மண்ணுக்குக்கீழ் உள்ள கிழங்குகளும் பார்ப்பனர்களும்

பிராமணர்களும் நம்மைப்போல புலால் சாப்பிடத் தொடங்கிவிட்டார்கள். பிராமணர் வீட்டுச் சமையலறைக்குள் ஆம்லெட்டும் பீப்பும் போய்விட்டன என்கிறார்கள் இந்த அறிவு ஜீவிகள். உண்மைதான். ஆனால் இந்தச் சமையலறைக்குள் நாடார் ஜாதியினர் நட்டு வளர்க்கும் பனங்கிழங்கும் பதநீரும் இன்னும் செல்லவில்லை என்பது இவர்களுக்குத் தெரியுமா? மண்ணுக்குக் கீழே உள்ள எல்லாக் கிழங்கு வகைகளும் பன்றிகளுக்கும் சூத்திரர்களுக்கும் உரியவை என்ற பிராமண தர்மத்தின் வெளிப்பாடுதானே இவை.

அதுபோலவே பெரும்பாலும் கிழங்குகளை உணவாகக் கொண்டு நாம் கொண்டாடும் பொங்கல் திருவிழாவை பிராமணர்கள் உத்தராயண புண்ணிய காலத்து மகரசங்கராந்தியாகத்தானே கொண்டாடுகிறார்கள். கிழங்கு வகைகளைத் தவிர்ப்பதற்காகச் செய்யப்பட்டதுதானே அந்த ஏற்பாடு. மண்ணுக்குக் கீழே விளைவதனாலே வெங்காயம் பிராமணர்களாலே விலக்கப்பட்ட உணவுப் பொருளாகும். அதனால்தான் வசதியுள்ள பெருங்கோவில் மடப்பள்ளிகளில் இன்றுவரை வெங்காயமும் சிலி நாட்டிலிருந்து வந்த மிளகாய் வற்றலும் உருளைக்கிழங்கும் நுழையவில்லை என்பது இவர்களுக்குத் தெரியுமா? மிக அண்மைக் காலமாகத்தான் பிராமணர் அல்லாதாருக்கு வழங்கப்படும் புளியோதரையில் சிலி நாட்டு மிளகாய் வற்றல் பயன்படுத்தப்படுகிறது.

கதவைச் சாத்துவதில்கூட வேறுபாடு!

வீட்டிலே உணவு உண்ணும் போது தெரு வாசல் கதவைச் சாத்தக்கூடாது என்பது நம் வீடுகளில் எழுதப்படாத விதி. ஆனால், பிராமணர் வீடுகளில் இன்னமும் தலைவாசல் கதவைச் சாத்திவிட்டுத்தான் உண்ணுகிறார்கள். பிராமணப் பூசைபெறும் கோவில்களில் உள்ள சாமிகளும் திரையிட்டு மறைத்துக் கொண்டுதான் தளிகை உண்ணுகின்றன. இரத்தப்பலிபெறும் நமது கோவில்களில் பலியிடப் பெறும் ஆடுகள் பலரும் காண பல மணி நேரம் தரையில் கிடக்கின்றன. அதுபோல ஊன் கலந்த படைப்புச் சோறும் பலரும் காணப் படைக்கப்பட்டுதான் பகிர்ந்துண்ணப்படுகின்றது. இந்த வழக்கத்தைப் பிராமண தர்மம் அனுமதிக்கிறதா? நம் வீட்டில் நீத்தார் நினைவுநாள், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்வுகளுக்கு வரும் பிராமணர்கள் நம் வீட்டில் சமைத்த உணவை உண்ணாமல் பச்சரிசியும், வாழைக்காயும், தட்சணையும் பெற்றுக் கொண்டு ஜாதி ஆச்சாரத்தையும் பேணிக்கொண்டு செல்வதைக் கவனித்திருக்கிறீர்களா?

காபி மேல் தட்டு! தேநீர் கீழ் தட்டு!

பெரியார் வெற்றிபெறும் வரை காபி மேல்தட்டு மக்களின் நாகரிக பானம் என்றும் தேநீர் அடித்தட்டு மக்களின் பானம் என்றும் குறிப்பாக இசுலாமியர்களின் பானம் என்றும் அறியப்பட்டு இருந்தது. பிராமணர் நடத்திய உணவு விடுதிகளில் தேநீர் கிடைக்காது. காபி மட்டுந்தான் கிடைக்கும். ஏனென்றால் காபி தாழ்த்தப்பட்ட மக்கள் உருவாக்கும் கருப்புக்கட்டியைத் தவிர்த்துவிட்டு வெள்ளைக்காரன் கொண்டு வந்த வெள்ளைச் சர்க்கரையைக் கொண்டு (சீனி, அஸ்கா) ஆக்கப்படும் பானம். கீழ் ஜாதிக்காரர்களால் ஆக்கப்பட்ட கருப்புக்கட்டியைத் தவிர்ப்பதற்காக உருவான பழக்கம்தான் இது. ஏழைப் பிராமணர்கள் கூட இன்று வரை கருப்புக்கட்டியைத் தவிர்த்துவிட்டு உருட்டு வெல்லத்தையே பயன்படுத்துகிறார்கள்.

பிராமணர்கள் புழுங்கலரிசியைத் தவிர்த்துவிட்டு பச்சரிசியைப் பயன்படுத்தியதன் நோக்கமே புழுங்கலரிசி கீழ் ஜாதி மக்களால் பயன்படுத்தப்பட்டது என்பதனால்தான். பெருநகர உணவகங்களில் ஸிணீஷ் க்ஷீவீநீமீ என்ற பெயரோடு இன்னும் பச்சரிசிச் சோறு நாகரிக உணவாகக் கருதப்படுகிறது. வரகு, கம்பு, தினை, குதிரைவாலி, சாமை போன்ற புஞ்சைத் தானிய உணவுகள் நாகரிகம் குறைந்தவை என்று நமக்குக் கற்பித்தது பிராமணர் கையிலிருந்த ஊடகங்கள்தானே! பிராமண ஊடகங்களின் வலிமை இன்னும் குறையவில்லை.

ஈழத் தமிழர்களைப் பலி கொள்வதற்காக நேர்ந்து விடப்பட்ட இந்து ஆங்கில நாளிதழ் தன்னுடைய தமிழ்ப்பதிப்பு முயற்சியில் இறங்கியுள்ளது. எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது.

விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக் கொண்டார்

– தந்தை பெரியார் 135ஆவது பிறந்தநாள் விடுதலை மலரிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *