மருத்துவத் துறை பணி நியமன அமைப்பு (Medical Services Recruitment Board-MRB) கடந்த 27 ஆம் தேதி ஒரு அறிவிக்கையை (Notifi cation-10, date 27.12.2013) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
சென்னையில் ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய சட்டமன்றத்திற்காகக் கட்டப்பட்ட கட்டடத்தில் சிறப்பு மருத்துவமனை ஒன்றை (Super Speciality Hospital) உருவாக்குவது தொடர்பாக மருத்துவப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், பதிவாளர் போன்ற 83 பதவிகளுக்குப் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கை அது (12 பக்கங்கள் கொண்டது).
தமிழ் மண்ணில் தந்தை பெரியார், திராவிடர் இயக்கம் இவற்றின் காரணமாக 1928 முதல் நடைமுறையில் இருந்துவரும் சமூகநீதிக்கு மரண அடி கொடுக்கும் அபாயகரமான அறிவிப்பு அது.
அறிவிக்கையின் நான்காம் பக்கத்தில் கீழ்க்கண்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
1. இட ஒதுக்கீடு விதிமுறை பின்பற்றப்படாது என்று மிகவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியா முழுவதும் இருந்தும் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
3. ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
4. சம்பள விகிதம் -_ தற்போது அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு அளிக்கப்படும் தொகையைவிட மிகவும் கூடுதலாக அளிக்கப்படும். சம்பளத்திலும் வேறுபாடு.
எடுத்துக்காட்டாக,
தற்போது அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியருக்கு மாதச் சம்பளம் ரூ.70 ஆயிரம்; ஆனால், புதிதாகத் தொடங்கப்படும் ஓமாந்தூரார் தோட்டத்தில் உருவாகும் மருத்துவமனையில் பணியாற்றும் அதே கல்வித் தகுதியுடைய பேராசிரியருக்கு மாதச் சம்பளம் ரூபாய் ஒன்றரை லட்சம்; தற்போது உதவிப் பேராசிரியருக்குச் சம்பளம் ரூ.40 ஆயிரம்; ஆனால், புதிய மருத்துவமனை உதவிப் பேராசிரியருக்கு மாதச் சம்பளம் ரூபாய் ஒரு லட்சம்.
டிசம்பர் 27 அறிவிக்கை வெளியிடப்பட்டு, அவசர அவசரமாக விண்ணப்பிக்கப்படுவதற்கான கடைசித் தேதி ஜனவரி 7 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர அவசரமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. (ஏற்கெனவே உரியவர்களைத் தேர்வு செய்துவிட்டார்களோ…?)
சமூகநீதி பிறந்த தமிழ் மண்ணில் இப்படியொரு கொடுமையா!
சமூகநீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கக்கூடிய ஒரு மாநிலத்தில், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு அறவே கிடையாது என்று வெளிப்படையாக அறிவித்து, அரசு விளம்பரம் செய்கிறது என்றால், இதன் பொருள் என்ன?
அதுவும், இந்த முறை ஆட்சிப் பொறுப்புக்கு (2011 இல்) வந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் சமூக அநீதிக்கொடியை ஏற்றியே தீருவது என்கிற ஒரு முடிவோடு செயல்படுவதாகத் தெரிகிறது.
பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நியமனத்தில் ஆசிரியர் கல்விக்கான தேசிய ஆணையம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்குமான தகுதி மதிப்பெண்ணில் தளர்வு அளித்திருந்தும், அதனைப் பயன்படுத்தாமல், திறந்த போட்டி, ஒதுக்கீடுப் பிரிவு அனைத்திற்கும் தகுதி மதிப்பெண் 60% என்று அறிவித்ததோடு அல்லாமல், சட்டமன்றத்திலேயே தகுதி அடிப்படை (Merit) என்பது அரசின் கொள்கை முடிவு என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே இந்த அரசு சமூகநீதிக்கு எதிரான ஒரு வழியில் பயணிக்க முடிவு எடுத்துள்ளது தெரிய வந்தது. (பார்ப்பன சங்க மாநாடுகளில் தொடர்ந்து கூறப்பட்டுவரும் கோரிக்கை இது!).
அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், இப்படிப் பேரிடி போன்ற சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசின் இந்த முடிவை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது.
கட்சிகளைக் கடந்து தமிழ்நாடு ஒன்றுபட்டு கடும் எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு அல்லாமல், அதற்கான போராட்டக் களங்களை உருவாக்கும் என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.
திராவிடர் கழகம் இதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடும் என்பதை அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது இட ஒதுக்கீட்டில் வருமானவரம்பு விதியைப் புகுத்தினார். திராவிடர் கழகம் கடுமையான பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டது. அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில், மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தார் எம்.ஜி.ஆர். தோல்விக்குப் பின், தன் தவறினை உணர்ந்து அந்த ஆணையை ரத்து செய்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்பது வரலாறு.
இப்பொழுதும் அதே சூழ்நிலை _- மக்களவைத் தேர்தல் வரும் ஒரு காலகட்டத்தில், சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையை முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்டுள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள (MRB) அறிவிக்கையை ரத்து செய்து, தமிழ்நாட்டில் 85 ஆண்டுகாலமாகப் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசை, குறிப்பாக முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்.
ஒப்பந்த அடிப்படை என்பது போன்ற குறுக்குச்சால் (முறைகேட்டுக்கு இது ஒரு வழி) ஓட்டுவதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
கி.வீரமணி
ஆசிரியர்