குரங்கினைப் போல்
சிறுவர் கூட்டம்
ஏறி, ஆடி விளையாடிய மரம்
நான்குகால் சீவன்களோடு
இரண்டுகால் மனிதர்களும்
நிழலுக்கு ஒதுங்கிய மரம்
பாதுகாப்பான இடமென்று
பறவைகள் கூட்டம்
குடிலமைத்த மரம்
காமக் கூத்தையும் காதலெனச் சொல்லி கட்டியணைத்து முத்தமிட
ஒத்துழைத்த மரம்
வெளியூர்க்காரர்கள் விருந்தாளிகளாய் வீடுசெல்ல
அடையாளம் காட்டிய மரம்
அய்ந்தறிவுக்கும் ஆறறிவுக்கும்
அரும்பசி தீர்க்க
அமுதமான பழம் தந்த மரம்
மண்ணின் பசுமைக்கும்
மழையின் வருகைக்கும்
மூலதனமாய் நின்ற மரம்
உயிருள்ளபோது உறவாகவும்,
உயிரற்றபோது விறகாகவும்
உடல் பொருள் ஆவி என தந்த மரம்
நகராட்சியின் நகர்தலால் நகர்ந்து
மீண்டும் நிழற்கொடையானது
கட்டடங்களால்!
– சீர்காழி கு.நா.இராமண்ணா